சுபாஷ் சந்திர போஸின் தந்தை ஜானகிநாத் ஒரு வழக்கறிஞர். தாயார் பிரபாவதி 1897 ஜனவரி 23-ம் தேதி இவர்களது ஒன்பதாவது குழந்தையாக சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார்.
ஜானகிநாத் கைநிறைய சம்பாதித்தார் வசதியான பெரிய வீடு. குழந்தைகளை எளிமையாகவே வளர்த்தார். அவர்களது வீடு எப்போதும் உறவினர்களால் நிறைந்தேயிருக்கும் வீட்டில் கூட்டம் சேரச்சேர போஸ் மட்டும் தனிமையைத் தேடி ஒதுங்கத் தொடங்கிவிட்டார். தந்தைக்கு ஓயாத அலுவல் வேலை, தாயாருக்கு உறவினர்களை உபசரிப்பதே வேலை. போஸ் தனிமையைத் தேடி ஒதுங்கத் தொடங்கியதும் தன் மகனைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் “இந்த வயதுடைய குழந்தைகள் எல்லோரும் உற்சாகமாக ஊரைக்கூட்டி விளையாடிக் கொண்டிருக்கும்போது போஸ் மட்டும் ஏன் எப்போதும் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டிருக்கிறான்” என்று தந்தை ஜானகிநாத்திற்கு கவலை வந்துவிடும்.

போஸ் மட்டும் யாருடனும் துளியும் ஒட்டுவதில்லை, பிற குழந்தைகளுடன் சேர்வதுமில்லை, சண்டைபிடிப்பதுவுமில்லை. சகோதர, சகோதரிகளும் போஸைவிட்டு ஏனோ விலகியே இருந்தனர். எப்போதும் தனிமை, ஏகாந்தம், சிந்தனையின் துணையுடன் வாழ்ந்து கொண்டிருந்தார் போஸ்.
பள்ளிக்கு அனுப்பினால் அங்கு நான்கு பேருடன் நட்பாகப் பழகுவான் என்று நினைத்து கட்டாக்கில் உள்ள ப்ராட்டஸ்டன்ட் ஐரோப்பிய பள்ளியில் (Protestant European School) போஸ் சேர்க்கப்பட்டபோது அவருக்கு வயது ஐந்து. ஜானகிநாத் இருப்பதிலேயே சிறந்த பள்ளியில் தன் மகனைக் கொண்டு போய்ச் சேர்த்தார். வெள்ளைக்கார துரையைப்போல் தன் மகன் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசவேண்டும் என்பது அவருடைய விருப்பம்.
ஆனால் போஸிற்கு ஆங்கிலம் சுத்தமாக வரவில்லை. ஆசிரியர்கள் பெரும்பாலும் ஆங்கிலோ இந்தியர்கள். மாணவர்கள் அனைவரும் ஆங்கிலத்திலேயே பேசவேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினர். ஏற்கனவே ஒரு வார்த்தையும் பேசாமல் ஒதுங்கியிருந்த போஸ் சுத்தமாக வாயைத் திறப்பதையே நிறுத்திக்கொண்டார்.
நண்பர்கள், விளையாட்டு, ஆங்கிலம் எதுவுமே போஸைக் கவரவில்லை. பள்ளிப் பாடங்கள், வீட்டின் பரபரப்பு எல்லாமே அலுக்கத் தொடங்கியது.

பிரபாவதி ஏதோ பதில் சொல்ல, மீண்டும் கேள்வி கேட்கத் தொடங்கினார் போஸ்.
யார் வேணாலும் பூஜை செய்யலாமா?
ஓ தாராளமா
அப்ப இனி நான் கூட உங்களை மாதிரியே பூஜை செய்யப்போறேன்.
விளையாட்டுக்கு ஏதோ சொல்கிறான் என்றுதான் பிரபாவதி முதலில் நினைத்தார் ஆனால் நாட்கள் செல்லச்செல்ல போஸின் ஆர்வம் அவரை திகைக்க வைத்தது.
இவரு யாரும்மா?
ராமகிருஷ்ண பரமஹம்ஸர்
இவரு…?
விவேகானந்தர்
அம்மா வாசித்துக் கொண்டிருந்த புத்தகங்களை இவரும் வாசிக்கத் தொடங்கினார். ஆன்மீகம் அவரைப் பற்றிக்கொண்டது.
தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டார் ஜானகிநாத். சொன்னச் சொல்லுக்கு கீழ்ப்படியும் நல்ல பையன் சந்தேகமேயில்லை இருந்தாலும் இயல்பான ஒரு சராசரி பள்ளிச்சிறுவனாக இவன் இல்லையே! இதுதான் ஜானகிநாத்தின் கவலை.

போசை நெருக்கமாகக் கவனித்த போது அவரது கேள்விக்கு விடை கிடைத்தது. தனியாக இருக்கும் சமயங்களில் சில சமயம் சற்று உரத்தக் குரலில்தான் படித்தவற்றை அடிமாறாமல் அப்படியே சொல்லிப் பார்க்கத் தொடங்கினார் போஸ்.
முதலில் தனிமை, இப்போது ஆன்மீகம் இவனது வயதிற்கு இரண்டுமே ஆபத்தான சங்கதிகள்.
“யாரும் அவனோடு சேராதீர்கள் அவன் ஒரு பைத்தியம்” என்று நண்பர்கள் தனக்குச் செல்லமாக வைத்திருக்கும் பெயர் என்பது போஸிற்கு தெரியும். அவன் காதுபட பலசமயம் கிண்டலடித்திருக்கிறார்கள். ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை போஸ். என்னை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள் என்று புன்னகைத்தபடி நகர்ந்துவிடுவார்.
அத்தனைச் சிறிய வயதில் அப்படி ஒரு எல்லாம் கடந்த நிலையை அவரால் தொடமுடிந்தது ஆச்சரியம். இந்தியர்களால் நடத்தப்பட்ட பள்ளிகளைக் காட்டிலும் பல விடயங்களில் போஸ் படித்துவந்த பள்ளி வேறுபட்டிருந்தது. பைபிள் வலுக்கட்டாயமாக போதிக்கப்பட்டது. கடமைக்காக பைபிளை தினப்படி போஸ் படித்துக்கொண்டிருந்தாரே தவிர அவருக்கு பைபிள் படிப்பதில் ஆர்வம் இல்லை.
நாட்கள் செல்லச்செல்லத்தான் வாழ்ந்துகொண்டிருக்கும் உலகத்திற்கும் பள்ளியில் சொல்லித்தரப்படும் உலகத்திற்கும் பெருத்த இடைவெளி இருப்பதை போஸ் உணர்ந்தார்.
வீட்டிற்குச் சென்றால் வங்காளியில்தான் எல்லோரும் பேசுகிறார்கள். வழிபடும் தெய்வம் வேறு, ஆனால் பள்ளியில் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், எழுதவேண்டும், இயேசுநாதர்தான் கடவுள் என்று அடித்துச் சொல்கிறார்கள்.
இதில் யார் சொல்வது சரி? யார் சொல்வது தவறு? யாரிடம் சென்று கேட்பது?
நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறோம் என்று சொல்கிறார்கள். போஸ் நன்றாகவே படிக்கிறான் ஆனால் இந்தியன் என்பதால் அவனுக்கு இந்தச் சலுகை கிடைப்பதில்லை. இதனால் முன்னைக் காட்டிலும் இராமகிருஷ்ணரும், விவேகானந்தரும் அவரை ஆக்கிரமித்தனர்.

தனக்குத் தானே வரைந்துகொண்டிருந்த வட்டத்தைவிட்டு முதல்முறையாக வெளியே வந்தார் போஸ்.
-தொடரும்
No comments:
Post a Comment