இதுதான் இந்தியா என்று உலகுக்கு எடுத்துக்காட்டிய ஒரு வீர இளைஞனின் நினைவு நாள் இன்று (ஜூலை 4)….\
எதற்கும் அடிபணியாத கம்பீரம்…
நேர் கொண்ட பார்வை…
நிமிர்ந்து நிற்கும் தலைப்பாகை…
படத்தை உற்றுப் பார்த்தாலே உள்ளத்தை ஊடுருவும் தீர்க்கமான கண்களுக்கு சொந்தக்காரரான வீரத்துறவி விவேகானந்தருக்குத் தான் இன்று (ஜூலை 4) நினைவு நாள்..
.
வாழ்ந்தது 39 ஆண்டுகள்! அந்த காலகட்டத்துக்குள் ஒட்டு மொத்த உலகத்தையும் தன் பேச்சால், செயலால் உலுக்கி எடுத்துவிட்டார்.
.
இந்த இளைஞனால் மட்டும் எப்படி முடிந்தது? இளைஞர்களே, உங்களை ஒரு அனுமனாக நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மிகப்பெரிய ஆற்றல் இருக்கிறது என்று பிற்காலத்தில் போதித்த விவேகானந்தர் இளமையிலேயே தனது ஆற்றலை உணர்ந்து கொண்டார்.
.
1863.. விஞ்ஞானத்தின் புதுமைகள் வராத காலம்! ஆங்கிலேயனுக்கு அடிமைப்பட்டு கலாச்சாரமும் பாரம்பரியமும் நலிந்து கிடந்தது. சாதி உணர்வுகள், மோதல்கள் உக்கிரமாக தலை விரித்தாடியது. இது தான் அப்போதைய இந்தியாவின் நிலை.
.
உலகத்தின் நிலை வேறுவிதமாக இருந்தது. அதிகார பலத்தால் என் மதம் தான் உயர்ந்தது என்று நிலைநாட்டும் போட்டியில் இஸ்லாம், கிறிஸ்தவ மார்க்கங்கள் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தன.
.
அந்த நேரத்தில் தான் 1863– ஜனவரி 12ம் தேதி நரேந்திரநாத் தத்தா என்ற பெயரில் இந்த துருவ நட்சத்திரம் கல்கத்தாவில் உதயமானது.
.
வாழ்க்கை ஒரு போராட்டம், அதில் போராடிப் பார் என்பார்கள். நரேந்திரனின் வாழ்க்கையும் போராட்டமாகவே இருந்தது. வறுமையும் பசியும் குடும்பத்தை சூழ்ந்து நின்றது. அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது? என்ற தவிப்புடன் ஒவ்வொரு நாளும் நகர்ந்தது. ஆனால் நரேந்திரனின் உள்ளம் வேறுவிதமாகத் தவித்தது. ஆன்மிகத்தை என்னவென்று அனுபவித்து பார்க்க வேண்டும்? மதம் என்றால் என்ன? கடவுள் என்றால் என்ன? என்ற கேள்விகளுக்கு உள்ளம் விடை தேடியது.
.
இந்த கேள்விகளோடு தான் ராமகிருஷ்ண பரமஹம்சரை அணுகினார். கடவுளை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? என்று நரேந்திரன் எழுப்பிய கேள்விக்கு ஆமாம் என்று அவர் அளித்த பதில் நரேந்திரணை அதிரவைத்தது. குருவின் பக்குவத்தில், பரீட்சையில் கடவுளை உணர்ந்தார். ஆன்மிகத்தில் லயித்தார்.
.
வறுமையில் வாடிக் கிடக்கும் மக்களுக்கு வாழ்வளிக்க வேண்டும். தேச ஒற்றுமையை வளர்க்க வேண்டும். பாரம்பரியமான கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்த வேண்டும் என்ற உந்துதலோடு துறவறத்தில் ஈடுபட்டார்.துறவியான பிறகு அவரது பெயர் விவேகானந்தர் ஆயிற்று.
.
மதம் என்பது கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவது மட்டும் தான் என்பதை மாற்றி, பாமர மக்களுக்கு தொண்டு செய்வது தான் என்ற புதுமையான புரட்சியை உருவாக்கினார். மதத்தை வேதாந்தம் என்ற நிலையில் இருந்து நடைமுறை வாழ்க்கை முறையோடு மாற்றினார். இந்தியாவில் பெரும் மக்கள் நிலை, கலாச்சாரங்களை அறிந்துகொள்ள கால்நடையாகவே பாரத தேசத்தை வலம் வந்தார்.
.
இந்த சுற்றுப்பயணத்தின் போது மன்னர்களின் அரண்மனையிலும் தங்கினார்; ஏழை மக்களின் குடிசைகளிலும் தங்கினார். திருவனந்தபுரம் வழியாக 1892 டிசம்பர் 24–ம் தேதி கன்னியாகுமரி சென்றடைந்த அவர் அன்னை பகவதி அம்மனை தரிசித்தார்.
.
வெயில் சுட்டெரித்த பகல் நேரம்…. ஓங்கி எழுந்த கடல் அலையும்… அதன் நடுவே இருந்த பாறையும் அவரை ஈர்த்தது அந்த பாறையின் மீது அமர்ந்து தியானம் செய்ய கடலில் நீந்தி சென்றார்.
.
தவத்தில் இருந்த விவேகானந்தரின் மனத்திரையில் இந்த உலகிற்கே வழிகாட்டிய பாரத தேசத்தின் பாரம்பரியமும், ஆன்மிகச் சிறப்புகளும், தற்போது பொலிவிழந்து நிற்கும் காட்சியும் ஒவ்வொன்றாய் விரிந்தது. அதை நினைத்து பூரித்த விவேகானந்தர் இந்த தேசத்தின் பெருமைகளை உலகம் முழுவதும் கொண்டுசெல்ல சபதம் ஏற்றார்.
.
அந்த நேரத்தில் தான் அமெரிக்காவில் நடந்த உலக சமய மாநாடுக்கு அழைப்பு வந்தது. கையில் காசு இல்லாமல் துறவியாக வலம் வந்த விவேகானந்தரை சென்னை இளைஞர்கள் நிதி திரட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள். நரேந்திரனை தந்தது வங்காளமாக இருக்கலாம். ஆனால் விவேகானந்தரை இந்த உலகுக்கு தந்த பெருமை என்றும் தமிழகத்துக்குத் தான்.
.
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த 400வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி கூட்டப்பட்ட உலக சமய மாநாட்டில் தங்கள் சமயம் தான் உலகிலேயே சிறந்தது என்று பறைசாற்ற அமெரிக்கா துடித்துக் கொண்டிருந்தது.
.
காவி உடையோடு பரம சாதுவாய் எல்லோரும் எள்ளி நகையாடும் பக்கிரியாய் மாநாட்டு அரங்கில் அமர்ந்திருந்த விவேகானந்தரின் இதயம் அன்னை பராசக்தியை தியானித்தது.அன்னை பாரதத்தின் தலைவிதியை மாற்ற துடித்தது.
.
‘சீமான்களே, சீமாட்டிகளே’ என்று உலகத் தலைவர்களெல்லாம் வார்த்தை ஜாலத்தால் கவர்ந்தார்கள். விவேகானந்தரின் நேரம் வந்தது… ‘சகோதரிகளே, சகோதரர்களே’ என்று அவரது உள்ளத்தில் இருந்து ஆத்மாத்தமாக உதிர்ந்த ஒவ்வொரு வார்த்தையும், அந்தப் பக்கிரியின் மூலம் பாரத தேசத்தை திரும்பி பார்க்க வைத்தது.
.
எள்ளி நகையாடிய தேசம் அவரைப் போற்றிப் புகழ்ந்தது. பல நகரங்களில் இந்திய கலாச்சார பெருமைகளை, ஆன்மிகத்தின் தத்துவங்களை தனது தீர்க்கமான உரையால் மேலை நாடுகளில் பரப்பினார்.
.மேலைநாடுகளில் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும்போது விவேகானந்தரிடம் எங்கள் நாட்டு சிறப்புகளை பார்த்து விட்டீர்களா? இப்போது உங்கள் இந்தியாவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று நிருபர்கள் கேட்டதும் புன்னகையுடன் ‘இதுவரை என் நாடு புனிதமான நாடு என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இங்கு வந்து பார்த்த பிறகுதான் என் தேசத்தின் ஒவ்வொரு துகளும் புனிதமானது என்று உணர்கிறேன்’ என்றார்.
இதைவிட நாட்டுப்பற்றுக்கு வேறு என்ன வேண்டும்? இந்தியா திரும்பிய போதும் ராமநாதபுரம் மண்ணில் இறங்கியதும் தரையில் விழுந்து பாரத தேசத்தை வணங்கினார் அந்த நவபாரத சிற்பி. பல நதிகள் கடலில் சங்கமமாவது போல உலகில் இருக்கும் எல்லா மதங்களும் இறைவனை சென்றடையும் மார்க்கங்களே!
உலகில் துன்பப்படுவனுக்காக துயரப்படுபவனுக்காக வாழுங்கள். பிறருக்காக வாழ்பவர்களே வாழ்பவர்கள். மற்றவர்கள் வாழ்ந்தாலும் செத்தற்கு தான் சமம்! மனிதன் கடவுளுக்காக கோவில் கட்டினான். ஆனால் கடவுள் தனக்காக கட்டிய கோவில் தான் மனித உடல் எனவே மக்களுக்கு சேவை செய்யுங்கள். சுயநலம் என்பதை அறவே ஒழித்து விட்டு சேவை செய்யுங்கள் ‘இளைஞர்களே தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தை கிளப்புவதற்கு உங்கள் தோள்களை கொடுங்கள்’ நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாக திகழுங்கள் என்று இளைஞர்களை தட்டி எழுப்பிய விவேகானந்தர் எழுமின்! விழிமின்! கருதிய கருமம் என கூடும் வரை நில்லாது உழைமின்! என்று அறைகூவல் விடுத்தார்.
விவேகானந்தர் நாடு முழுவதும் சுற்றி வந்தாலும் தமிழக இளைஞர்கள் மீது அபரிதமான நம்பிக்கை வைத்து இருந்தார். இதை அவரது சென்னைச் சொற்பொழிவுகளில் தெரிந்துகொள்ள முடிகிறது. தியாக உள்ளம் கொண்ட இளைஞர்கள் நாட்டுக்காக உழைப்பார்கள். உங்களிடம் அதிக நம்பிக்கை வைத்து இருக்கிறேன். அரைகுறையாக எனது பணிகளை விட்டுச் செல்கிறேன். சிங்கம் போல் சீறி எழுந்து என் அருமை இளைஞர்கள் செய்து முடிப்பார்கள் என்று தனது நம்பிக்கையை வெளியிட்ட அந்த வீரத்துறவி இன்று நம்மிடம் இல்லை.
அவரது கருத்துக்களும் சிந்தனைகளும் உலகம் முழுவதும் விதைக்கப்பட்டுள்ளன. சிகாகோ மாநாட்டின் நிறைவில் அவர் கூறும்போது, ‘இந்த மாநாட்டின் துவக்கத்தில் ஒலித்த மணி ஒலி உலகில் உள்ள மத தீவிரவாதத்துக்கு அடிக்கப்பட்ட சாவு மணியாக இருக்கட்டும்’ என்று வேண்டுகோள் விடுத்ததை அவரது இந்த நினைவு தினத்தில் இதயத்தில் கொள்வோம். உலகை அன்பால் வெல்வோம்.
.
காளியிடம் விவேகானந்தர் கேட்ட வரம்
.
விவேகானந்தர் வீட்டை வறுமை வாட்டி வதைத்தது. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடினார்கள். அப்போது அவரது நண்பர்கள் ‘நீ, பரமஹம்சரின் சிஷ்யன் தானே. அவர் கேட்டால் காளி செல்வங்களை அள்ளி கொடுப்பாள். கேட்கச் சொல்’ என்று வற்புறுத்தினார்கள்.
.
விவேகானந்தரும் அப்படியே தனது குருநாதரிடம் சென்று எனது குடும்ப வறுமையை போக்க காளியிடம் பணம் தர சொல்லுங்கள் என்றார். ஆனால் ராமகிருஷ்ணர் ‘பணம் உனக்குத் தானே தேவை. நீயே காளியிடம் போய் கேள் நான் உனக்காக கேட்க முடியாது என்று கூறி விட்டார்.
.
கோவிலுக்குள் சென்ற விவேகானந்தரோ ‘தாயே, எனக்கு ஞானத்தை கொடு’ என்று மட்டும் கேட்டு திரும்பினார். வெளியே வந்ததும் ராமகிருஷ்ணர் ‘என்ன, காளியிடம் பணம் கேட்டாயா?’ என்று கேட்டார். கேட்க முடியவில்லை ஞானம் தான் கேட்டேன் என்றார். அதை கேட்டதும் மறுபடியும் கோவிலுக்குள் அனுப்பி தேவையானதை கேள் என்றார். அப்போதும் ‘ஞானத்தை கொடு, உன் அருளை கொடு’ என்று மட்டுமே அவரால் கேட்க முடிந்தது.
.
.
ஆச்சார்ய புருஷர் விவேகானந்தர்
ஆச்சார்ய கோடிகளில் ஒருவராக அவதரித்து ஆத்மஞான ஒளியை எங்கெங்கும் வீசி “அவனியே ஆத்மா, ஆத்மாவே அவனி” என்று எதிருரையாடுவோர் எவருமில்லாது, பாரத கண்டத்தில் மாத்திரமன்று, வேறு பன்னாடுகளிலும் சென்று பறையறைந்து திக்விஜயம் செய்து, உண்மையொன்றே பொருளென உரைத்து, கடைசியில் உண்மையில் உண்மையாய் கலந்துகொண்ட ஸ்ரீ ஸ்வாமி விவேகானந்தரைப் பற்றி எத்தனையெத்தனை எடுத்துரைத்தாலும் எனக்கு வாய் நோவதில்லை, நா தளர்வதில்லை. இரவு பகலாக எண்ணற்ற நாட்கள் எழுதிக் கொண்டே போனாலும் என் கை சலிப்பதில்லை.
அவரை ஸ்மரிக்கின்ற நேரமெல்லாமெனக்குப் புதிது புதிதாக ஊக்கமும் உற்சாகமும் உண்டாவதன்றியில், எங்கிருந்தோ எனக்குத் தெரியாமல், எனக்கு அறிவுப் பாலூட்டும் அன்னையாய், எனது கொள்கைகளுக்கெல்லாம் ஆதாரமாய், எனது புறத்தே நின்றுகொண்டு, எனது ஜீவிதத்துக்கொரு தூண்டுதலாய் என்றும் அவர் இருந்து வருகிறாரென்று திடமானதொரு எண்ணம் என் மனதிலேயே பதிந்து கிடக்கின்றது. அவருடைய உபதேசங்களை ஆதாரமாகக் கொண்டு நான் பல வேலைகள் செய்திருக்கின்றேன்; அவருடைய புத்தகங்கள் பலவற்றை நான் மொழிபெயர்த்திருக்கின்றேன்; ஆயினும், எனக்குத் திகட்டவில்லை.
அவர் சகலகலா வல்லவராயிருந்தார். அவருடைய ஜீவித சரித்திரம் அற்புதமானது. அதிலிருந்து அவருடைய மேன்மையைப் பலரும் அறியும் பொருட்டும், எனக்கே எடுத்துரைக்க இன்பமாயிருத்தலினாலும், சில விஷயங்களைக் குறிப்பிடுகின்றேன்.
குழந்தைப் பருவத்திலே, திண்ணியிலே உட்கார்ந்தும் தெருவிலே திரிந்தும் சிறார்களுடனே சேர்ந்து ஓடியாடி, உள்ளத்தில் கள்ளமில்லாமல் விளையாடும் காலத்திலே, இவருடைய பிதா பெரியதொரு வக்கீலாயிருந்தபடியினால், கட்சிக்காரர்களாகவும் நண்பர்களாகவும் பல ஜனங்கள் இவருடைய வீட்டுக்கு வருவதுண்டு. பல ஜாதியினரும், பல மதத்தினரும் வருவார்கள். நமது தமிழ்நாட்டிலே வீட்டிற்கு வந்தவர்களுக்கு வெற்றிலை பாக்குக் கொடுத்து உபசரிக்கும் வழக்கம் இருப்பது போல, வங்காளத்திலே ஹூக்கா (கூடாக் என்று சொல்வதுமுண்டு) குடிக்கக் கொடுத்து உபசரிக்கும் பழக்கம் உண்டு. வீட்டுக்கு வீடு அந்தந்த ஜாதியாருக்குத் தனித்தனியாக ஐந்து ஆறு ஹூக்காக்கள் எப்போதும் வைக்கப்பட்டிருக்கும். புகை குடிப்பதற்கு பயன்படும் இந்த ஹூக்காக்களை இந்து, முகம்மதியர்களுடைய வாசஸ்தலங்களிலே காணலாம். ஹூக்கா குடிப்பதனால் ஜீரணசக்தி அதிகரிக்கிறதென்றும், இரத்த ஓட்டம் வேகமடைகிறதென்றும், ஆகையால் இது சரீரத்திற்கு மிகவும் நல்லதென்றும் அநேகர் கூறுகின்றனர். இது முக்கியமாக முகமதியர்களுக்கு பிரியகரமானது. இந்த வழக்கத்தை அனுசரித்து, நமது ஸ்வாமிகளுடைய வீட்டிலும் ஹூக்காக்கள் வைக்கப்பட்டிருந்தன. முகம்மதிய நண்பர் ஒருவர் அடிக்கடி இவருடைய வீட்டுக்கு வருவார். அவரை ஸ்வாமிகள் மாமா என்று அழைப்பார். இந்த மாமா குடிக்கும் ஹூக்காவில் வேறொருவரும் குடிப்பதில்லை. ஏனெனில் இவர் முகம்மதியராதலால், ஒரு ஹூக்காவிலே குடிப்பவர்கள் வேறு ஹூக்காவிலே குடியாததையும், அவரவர் தனித்தனியே வேறுபட்டு வெவ்வேறு ஹூக்காக்கள் வைத்துக்கொண்டிருப்பதையும் பற்றி இவர் யோசனை செய்யத் தொடங்கினார்.
ஒருநாள் காலையில் இவருடைய பிதாவின் ஆலோசனா அறையில் எல்லா ஹூக்காக்களும் நெருப்பிடப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்தன. அங்கு அப்போது ஒருவருமில்லை. நமது ஸ்வாமிகள் உள்ளே நுழைந்தார்;கதவை சாத்தித் தாளிட்டுக் கொண்டார். ஒவ்வொரு ஹூக்காவிலும் வாய்வைத்துக் குடிக்கத் தொடங்கினார். இதற்குள் வெளியே பிதாவானவர் அவ்வறைக்கு வர எண்ணி வர, கதவு தாளிடப்பட்டிருப்பதைக் கண்டு கதவிலிருந்து ஒரு துவாரத்தின் வழியாகப் பார்க்க பையன் அங்கே ஒவ்வொரு ஹூக்காவிலுமாக வாய்வைத்துக் குடிப்பதைக்கண்டு, கதவைத் தட்டினார். பையன் சட்டென்று கதவைத் திறந்தான். பிதா, என்னடா செய்தாய்? என்று கேட்டார். பையன் முதலில், ”ஒன்றுமில்லை” என்றான். பிதா இன்னும் கொஞ்சம் அதட்டிக் கேட்கவே, பையன் “ ஒரு ஹூக்காவிலே குடித்தவர்கள் வேறு ஹூக்காவிலே குடிக்கிறதில்லை. அதற்குக் காரணம் என்ன? வித்தியாசமில்லாமல் எல்லா ஹூக்காக்களிலும் குடித்தால் என்ன நேரிடும்? என்பதைப் பார்க்க, நான் எல்லா ஹூக்காக்களிலும் வாய் வைத்துக் குடித்துக் கொண்டிருந்தேன். எனக்கு வித்தியாசம் ஒன்றும் தோன்றவில்லை. எல்லாம் ஒருதன்மைத்தாகத் தான் இருக்கிறது” என்றான். இவ்வளவு சிறிய வயதிலேயே பையனுடைய புத்திப் போக்கைக் கண்டு பிதா மனம் மகிழ்ந்து சந்தோஷித்தார்.
தவிர ஸ்வாமிகள் சரீராப்பியாசத்திலே கைதேர்ந்தவர்; குத்துச்சண்டையில் பெயர் போனவர். குத்துச் சண்டையிலே அநேக வெகுமானங்கள் வாங்கியிருந்தார். குஸ்தியிலே அவருக்கு மிகுந்த பிரியம். அமெரிக்கா சென்று கீர்த்தி பெறுவதற்கு முன், அவர் சென்னை வந்திருந்த காலத்திலே அவருக்கு “பயில்வான் ஸ்வாமி” என்று ஓர் பெயர் உண்டு. நீந்துவதில் மிக சமர்த்தர். மலையாளம் சென்றிருந்தபோது அங்கே ஒரு பெரிய காயலைக் கடக்க வேண்டியிருந்தது. எல்லோரும் படகிலேறிச் செல்வது வழக்கம். அதிலே முதலைகள் உள்பட பயங்கரமான ஜலஜந்துக்கள் பல உண்டு! படகுக்காரனுக்குக் கொடுப்பதற்கு கையிலே பணமில்லையாகையினாலே ஸ்வாமிகள் இரண்டு மைலுக்குக் குறையாத விஸ்தீரணமுள்ள அந்த ஏரியைத் தமது கைகளால் வெகுவேகமாக நீந்திக் கடந்தார். சிலம்பவித்தையிலும் மகா நிபுணர். அதிபால்ய பர்வத்திலே இவருக்கு நண்பர்கள் பெரும்பாலும் முகம்மதியர்களாயிருந்தார்கள். அவர்களிடமிருந்து இந்த சரீராப்பியாச வித்தைகளையெல்லாம் கற்றுக்கொண்டார்.
சங்கீதத்தில் ஸ்வாமிகள் பெரிய வித்வான். தலையையாட்டி முகத்தைச் சுளித்துக் கழுத்தையிழுத்துக் கோரரூபம் கொடுக்கின்ற சங்கீதமன்று ஸ்வாமிகளுடைய சங்கீதம். ஸ்வாமிகள் பாட ஆரம்பித்து விட்டால், கேட்பவர்கள் பரவசமடைந்து ஸ்தம்பித்து விடுவார்கள். ஸ்ரீராமக்ருஷ்ண பரமஹம்சருக்கு எப்போதும் ஸ்வாமிகள் பாடிக்கொண்டிருந்தால் போதும். ஸ்வாமிகள் சங்கீதத்தை சாஸ்திர ரூபமாகப் பரிசீலனை செய்து அதன் உண்மையான லக்ஷணத்தை உள்ளவாறு அறிந்திருந்தார். வீணை வாசிப்பதிலே வல்லவராயிருந்தார்.
சமையலிலே மகா கெட்டிக்காரர். விதம் விதமாக, நூதனம் நூதனமாகச் சமையல்கள் செய்வதிலே சமர்த்து மிகுந்தவர். அதிலே சிரத்தையும் பிரியமும் மிகுதி உண்டு. பொழுதுபோக்காகச் சமையல் செய்யத் தொடங்கி, அதிருசிகரமான பதார்த்தங்களையெல்லாம் ஆக்கி வைத்துவிட்டு தமது சகாக்களையும் சிஷ்யர்களையும் அழைத்து உட்காரவைத்து அவர்களுக்குப் பரிமாறி, அவர்கள் அமிர்தமென உண்ணக் கண்டு களிப்பார்.
வேடிக்கை, விளையாட்டுகளிலே பச்சைக் குழந்தை போன்றிருந்தார். அவர் இரண்டாம் முறையாக அமெரிக்கா சென்று திரும்பி வந்தபொழுது, இவருடைய வரவை எவரும் அறியவில்லை. கல்கத்தாவில் ரெயிலிலிருந்து இறங்கினதும் ஒரு வண்டியமர்த்திக் கொண்டு மடத்துக்கு வந்து சேர்ந்தார். அப்பொழுது இரவு ஒன்பது மணி. மடத்திலுள்ளவர்கள் வெளி வாசலைத் தாளிட்டு விட்டு எல்லோரும் சாப்பாட்டுக்கு உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். ஸ்வாமிகள் வாசல் தாளிட்டிருப்பதைக் கண்டு சந்தடி செய்யாமல் சுவரேறி உள்ளே குதித்து, பந்தியிலே வந்து உட்கார்ந்து கொண்டார். அங்கிருந்தவர்கள் பார்த்து பிரமித்து, கதவைத் தட்டக் கூடாதா? என்று கூற நீங்களெல்லாம் சாப்பிட உட்கார்ந்து கொண்டிருப்பதைத் தெரிந்து கொண்டேன். எங்கே நான் வருவதற்குள் ”நீங்கள் எல்லோரும் சாப்பிட்டுவிட்டால், பின்னர் நான் சாப்பாடில்லாது பட்டினி கிடக்க வேண்டி வருமே, அதனால்தான் சுவரேறிக் குதித்து ஓடி வந்தேன்” என்றார். உலகெங்கும் கியாதி பெற்ற ஒருவர், மகா ஞானி, தீரர், ஆயிரக் கணக்கான சிஷ்யர்களையுடையவர், இப்படி சுவரேறிக் குதித்து விளையாடினாரென்றால், அவருடைய பரிசுத்த ஹிருதயத்துக்கு வேறொரு அத்தாக்ஷியும் வேண்டுமோ?’
இன்னொரு சமயத்திலே அமெரிக்காவில் ஒரு சபையினர் தங்கள் சபையின் ஆதரவில் பிரசிங்கிக்கும்படி அவரை வேண்டிக் கொண்டனர். அவர் அதற்கிசைந்து, குறிப்பிட்ட நேரத்தில் அந்தச் சபா மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். போதிய ஜனங்கள் கூட்டத்துக்கு வராததினால், அச்சபையின் காரியதரிசி, ஸ்வாமிகளை அருகேயிருந்த ஒரு அறையினுள் இட்டுச் சென்று “ஸ்வாமி, இப்போது சீக்கிரத்தில் ஜனங்கள் வந்து விடுவார்கள். ஒரு பதினைந்து நிமிஷ நேரம் தயவு செய்து இதில் வீற்றிருங்கள்” என்று கூறி ஒரு சாய்வு நாற்காலியை காண்பித்துவிட்டு, அந்த அறையின் கதவைச் சாத்திவிட்டு வெளியே சென்றார். அந்த நாற்காலி ஒடிந்திருந்தது. ஸ்வாமிகள் அதில் உட்கார்ந்தவுடனே, அவரைத் தாங்க முடியாமல் கீழே பின்னப்பட்டிருந்த பிரம்பு விட்டு விட்டது. ஸ்வாமிகள் நடுவிலே விழுந்து விட்டார். என்ன முயன்றும் அதனின்றும் வெளியேற முடியாதபடி, அகப்பட்டுக் கொண்டுவிட்டார். அப்படியே சரிந்தார். சற்று நேரம் பொறுத்து வாசற் கதவண்டையில் காரியதரிசி வந்து நின்று “ஜனங்கள் வந்துவிட்டார்கள், ஸ்வாமி வரலாம் என்று சொல்ல, ஸ்வாமிகள் “ ஸ்வாமி வர முடியாது; கீழே விழுந்து கிடக்கிறார், யாராவது வந்து தூக்கிவிட்டால்தான் வர முடியும்’ என்றார். உடனே வெளியிலிருந்தவர்கள் வந்து மிகவும் கஷ்டப்பட்டு, அவரைத் தூக்கி விட்டார்கள். கீழே விழுந்து இடுக்கில் அகப்பட்டுக் கஷ்டப்படும்போதும் விளையாட்டுப் பேச்சுத்தான் !
புத்தியிலோ அவருக்கு நிகரேயில்லை. கேட்ட கேள்விகளுக்கு, கேட்டு வாய் மூடு முன்னே மறுமொழியுரைக்கும் சமர்த்து ஸ்வாமிகளிடம் நிறைந்திருந்தது. இவருடைய மறுமொழிகளைக் கேட்டால், அதற்கு மேல் கேள்வி கேட்க முடியாது திகைத்து நின்று விடுவார்கள். ஒரு சமயத்திலே, இவர் அமெரிக்காவிற்கு சென்று கீர்த்தியடையாததற்கு முன்; இவர் பெயரையே உலகறியாதிருந்த காலத்தில்; ஆள்வார் தேசத்து அரசருடனே அவருடைய கொலு மண்டபத்தில் வீற்றுச் சம்பாஷிக்கும்படியான சந்தர்ப்பம் ஒன்று உண்டாயிற்று. அப்பொழுது அங்கே ஸ்ரீ ராமக்ருஷ்ணருடைய படம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. ஸ்வாமிகள் அதைப் பார்த்ததும் இரு கைகளையும் எடுத்துக் கும்பிட்டார். அரசர் அதைப் பார்த்து,”ஸ்வாமி! தாங்கள் சன்யாசியாச்சே, சந்யாசிக்கு வடிவம் கும்பிடும் பழக்கம் கிடையாதே; அழிந்து போகும் தன்மையதாய அந்த வடிவத்தைக் கும்பிடுதல் தங்களைப் போன்றவர்க்கு அழகாமோ?” என்று கேட்க, விக்கிரகாராதனையைப் பற்றிய விவாதம் தொடங்கிற்று.
என்ன வாதித்தும் அரச்ருடைய குயுக்தி ஒடுங்கவில்லை. பின்னர் வேறு விஷயங்களிலே சம்பாஷணை போயிற்று. ஆனால், எப்படியாவது விக்கிரகாராதனையிலே அரசனுக்கு நம்பிக்கையுண்டாகும்படி செய்ய வேண்டுமென்று ஸ்வாமிகள் சிந்தித்துக் கொண்டிருந்தார். அங்கே சுவற்றில் அந்த அரசருடைய படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. ஸ்வாமிகள் மந்திரியைக் கூப்பிட்டு அந்தப் படத்தையெடுக்கும்படி சொன்னார். அப்படியே எடுத்துக் கொடுக்கவே,ஸ்வாமிகள் அதை வாங்கி கீழே வைத்து மந்திரியை அதில் எச்சில் துப்பும்படி சொன்னார். அரசருடைய படத்திலே அந்த அரசருக்கு நேர் முன்னே, மந்திரி எச்சில் துப்பத் துணிவாரா? தயங்கினார். பின்னர் ஸ்வாமிகள் அங்கிருந்த பிரதானிகள் முதலிய எல்லோரையும் அவ்வாறே கூற, ஒருவரும் அதைச் செய்யத் துணியாதவர்களாய் விழித்தார்கள்.
ஸ்வாமிகள் அரசனை நோக்கி, “ இந்தப் படத்தின் மேல் எச்சில் துப்புவதற்கு ஏன் இவர்கள் இப்படித் தயங்குகிறார்கள்?” என்று கேட்க, அரசன் “அது என்னுடைய படமாயிற்றே; எனது முன்னிலையில் அவர்கள் அதன் மீது எச்சில் துப்பத் துணிவார்களா? என்றான். ஸ்வாமிகள், “உங்களது படத்துக்கே இவ்வளவு மதிப்பும் மரியாதையுமிருந்தால், சாக்ஷாத் ஜகந்நாதனாகக் கொண்டாடப்படும் விக்கிரகங்களுக்கும், படங்களுக்கும் எவ்வளவு மதிப்பிருக்க வேண்டும்?” என்றார். அரசன் மறுமொழி சொல்ல வாயில்லாது மௌனமானார். பின்னர், அவ்வரசனுக்கு விக்கிரகாராதனையிலே நம்பிக்கையுதித்தது.
இன்னொரு சமயத்திலே எவரும் அறியாது இவர் இவ்விந்தியா தேசம் முழுதும் கௌபீனம் ஒன்றையே ஆடையாய்க் கொண்டிருந்த காலத்திலே, ஒருவர் இவரிடத்திலே மிகுந்த பக்தி வாய்ந்தவர், இவரை ரெயிலில் இரண்டாவது வகுப்பு வண்டியில் ஏற்றிவிட்டு, அந்தப் பிரவேச சீட்டை இவருடைய கௌபீனத்தின் ஒரு ஓரத்திலே முடிந்து விட்டிருந்தார். இவருடன் அதே வண்டியில் இரண்டு ஆங்கிலேய சிப்பாய்கள் உட்கார்ந்திருந்தனர். இவர் ஆஜானுபகுவாய், எவ்வித உடையுமில்லாது கௌபீனம் மாத்திரம் தரித்திருப்பதையும், சரீரமெல்லாம் விபூதி பூசியிருப்பதையும் பார்த்து, இவருக்கு ஆங்கில பாஷை தெரியாதென்று நினைத்துக்கொண்டு, இவரைக் கேவலமாகத் பலவிதத்திலும் திட்டி ஏளனம் செய்து கொண்டே வந்தார்கள். இரண்டு மூன்று நிலையங்கள் கடந்தன. ஸ்வாமிகளுக்குக் கொஞ்சம் தாகம் மேலிட்டது. வண்டியிலிருந்து கொண்டே ஒரு நிலையத்தில் இருப்புப் பாதையதிகாரியொருவரை நோக்கி “I want water” (எனக்குத் தண்ணீர் வேண்டும்) என்றார். உடனே அவ்வதிகாரியின் முயற்சியால் ஸ்வாமிகள் தமது தாகத்தைத் தணித்துக் கொள்ளவே, வண்டி நிலையத்தை விட்டுப் புறப்பட்டது. வண்டியிலிருந்த அந்த இரண்டு ஆங்கிலச் சிப்பாய்களும், இவர் ஆங்கிலம் பேசியதைக் கண்டு திகைத்துப் போய், ஸ்வாமிகளைப் பார்த்து, நாங்கள் இவ்வளவு தூரம் உங்களைக் கேவலமாய்ப் பேசிவர, தாங்கள் ஆங்கிலம் அறிந்திருந்தும் மறுமொழியே கூறாது ஏன் இருந்தீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு ஸ்வாமிகள் நான் மூடர்களைப் பார்த்தது இது முதல் தடவையன்று. ஆதலால் நான் பேசாதிருந்தேன் என்றார். அவர்களுக்கு இம்மறுமொழி மிகுந்த கோபத்தையுண்டாக்கிற்று என்றாலும், இவருடைய சரீரக் கட்டையும் கண்ணிலே பிரகாசிக்கும் உக்கிரத்தையும் கண்டு பயந்து சும்மாயிருந்து விட்டார்கள்.
பின்னொரு சமயத்திலே, ஸ்வாமிகள் ஐரோப்பாவிலிருந்து இந்தியா திரும்பி வருகிறார்.கப்பல் மத்திய தரைக்கடலில் வந்து கொண்டிருக்கிறது.அக்கப்பலில் ஒரு பாதிரி, வாலிப வயதுடையவர்; இவரும் வருகிறார். இந்தப் பாதிரி இந்தியாவையும், இந்தியர்களையும் வாயில் வந்தவாறு வைது, அங்குள்ளவர்களிடமெல்லாம் வெகு இழிவாகப் பேசுகிறார். ஸ்வாமிகள் கொஞ்ச நேரம் மௌனமாயிருந்தும், பொறுக்க முடியாமல் அந்தப் பாதிரியாரிடம் வாதம் செய்ய ஆரம்பித்தார்.ஆனால் அந்தப் பாதிரி வாதத்துக்கு இணங்குவதாயில்லை. மேன்மேலும் திட்டிக் கொண்டே போனார். ஸ்வாமிகளுக்கு பொறுக்க முடியாததாகிவிட்டது. சட்டென்று ஸ்வாமிகள் எழுந்திருந்து அவன் கழுத்தில் அணிந்திருந்த் கழுத்துப்பட்டைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டு, இப்பொழுது என்ன சொல்கிறாய்? மரியாதையாக, இனிமேல் எனது தேசத்தைப் பற்றி நிந்திக்காமலிருக்கிறாயா? இல்லையேல் கடலில் தூக்கியெறிந்து விடட்டுமா? என்றார். பாதிரி நடுங்கிவிட்டான். அதுமுதல் அவன் ஸ்வாமிகளிடத்தில் மிகுந்த பயபக்தியுடையவனாகி, வழிநெடுக அவருக்கு சிசுருஷை செய்து கொண்டு வந்தான். ஸ்வாமிகளுக்கு அவனைக் கொல்ல வேண்டுமென்று, அல்லது ஹிம்சிக்க வேண்டுமென்று எண்ணமுண்டா? ஆனால் அப்படியாவது மிரட்டினால் தான் அவன் அடங்குவான். உள்ளத்திலே தீய எண்ணம், ஹிம்சைச் சிந்தனையிருக்கக் கூடாது. ஆனால், வெளியில் பார்ப்பவர் பயப்பட வாழ வேண்டும். இந்தக் கொள்கையை ஜனங்கள் கைக்கொள்கிறதில்லை.
நிற்க, இவர் மகா வைராக்கியசாலியாகவும், ஜிதேந்திரியராயும் இருந்தார். இவருடைய மனமானது சிற்றின்பத்தில் சென்றதே கிடையாது. இவர் நல்ல வாலிப வயதிலே கல்லூரி மாணாக்கராய் இருந்தபொழுது, தமது அறையில் உட்கார்ந்துகொண்டு சில சமயங்களிலே, தனியே பலவித பாட்டுக்கள் பாடி களித்துக் கொண்டிருப்பார். அந்த அறையின் ஜன்னலோரத்தில், எதிர்வீட்டுப் பெண் பதினெட்டு வயதுள்ளவள், அதி சௌந்தர்யவதி, வந்து நின்று இவருடைய பாட்டிலே பரவசமாகி மகிழ்ச்சியடைந்து போவது வழக்கமாயிருந்தது. இது அவருக்குத் தெரியாது. ஒரு நாள் மாலையில் எட்டு மணி இருக்கும். இவர் தமது அறையில் உட்கார்ந்து ஆனந்தமாகப் பாடிக் கொண்டிருக்கிறார். அந்தப் பெண் வழக்கம் போல ஜன்னலோரத்தில் நின்று கொஞ்ச நேரம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, பின்னர் சந்தோஷ மேலீட்டினால், அவரிடத்தில் காதல் கொண்டவளாகி, அவருடைய அறைக்குள்ளே சட்டென்று நுழைந்து அவருடைய எதிரிலே நின்றாள்.
அவர் நிமிர்ந்து பார்த்துத் திடுக்கிட்டு “ நீ யார்? எங்கு வந்தாய்?” என்று கேட்க, அவள், “நான் எதிர் வீட்டுப் பெண். தங்களுடைய பாட்டிலே சொக்கித் தினந்தோறும் ஜன்னலோரத்தில் வந்து நின்று கேட்டுவிட்டுப் போவது வழக்கம். இன்று என்னையறியாது எனக்குத் தங்கள் மீது மையல் உண்டாகிவிட்டது! உள்ளே வந்துவிட்டேன்” என்றாள். அவர் ”இது நல்லதன்று, நீ சிறு பெண். போ உன் வீட்டுக்கு. இனிமேல் இத்தகைய மூர்க்க குணங்களை விட்டுவிடு” என்று சொல்லிக் கடிந்து போகச் சொல்லிவிட்டு, அன்று முதல் தாம் மேல் மாடியில் வசிக்கத் தொடங்கினதுமன்றியில், தமது வாசஸ்தலத்தில் தனித்துப் பாடுவதையும் நிறுத்திவிட்டார். இன்னும் அமெரிக்கா சென்றிருந்த பொழுது, இவருடைய அழகிலும், அறிவிலும், வாக்கு வல்லமையிலும் ஈடுபட்டு, எத்தனையோ கோடீஸ்வரிகள், “ஸ்வாமி! நானும் என்னுடையவைகளும் தங்களுக்கு அடிமைகள்” என்று கூறி வந்ததுண்டு. ஸ்வாமிகள், அந்தத் தூண்டுதல்களியெல்லாம், இயேசுநாதர் “சாத்தானே! தூரப்போ” என்று சொன்னது போல் உதறியெறிந்து விட்டார்.
அமெரிக்காவிலே ஒரு கோடீஸ்வரி. உலகிலே எந்த தேசத்து அரசர்களும் ஜமீந்தார்களும் தனவந்தர்களும் அமெரிக்கா சென்றால், அவள் வீட்டில் விருந்துண்ணாது திரும்பமுடியாது. அவ்வளவு செல்வாக்குள்ளவள் அவள். அவளை ஒரு பத்திரிக்கைப் பிரதிநிதி கண்டு, “அம்மே நினது மாளிகையில் உலகத்துப் பெரிய மனிதர்களெல்லாம் வந்து தங்கிப் போகிறார்களே, இவர்களுள் நீ அறிந்த மட்டில் சிறந்த மனிதர் யார்? என்று கூற முடியுமா? என்று கேட்க, அவ்வம்மையார் “நான் பார்த்த மட்டில் இரண்டு பேர்களைச் சிறந்த மனிதர்கள் என்று கருதியிருக்கிறேன். ஒன்று ஸ்வாமி விவேகானந்தர்; மற்றவர், ஜெர்மன் சக்கரவர்த்தி” என்று பதில் கூறினாள்.
இத்திருவிடைளையாடல்களையெல்லாம் செய்யத் திருமேனியெடுத்த இப் பெரியார், தமது குழந்தைப் பருவத்திலேயே உறங்குவதற்காகக் கண்ணை மூடினால் உள்முகத்திலே ஒரு ஜோதி தோன்றுவது வழக்கமாயிருந்தது. இவர் குழந்தை விளையாட்டெல்லாம் பெரியோர்களைப் போல நடித்தலும், பெரியோர்களைப் போலிருத்தலுமாம். ஒரு நாள் இவரும் இவரது சகாக் குழந்தைகளும் சமாதி நிஷ்டையில் உட்கார்வதாகப் பாவித்துக்கொண்டு, எல்லோரும் கண்ணை மூடி உட்கார்ந்தார்கள். சுமார் ஐந்து நிமிஷ நேரங் கழிந்தபின், ஒருவன் மெல்ல கண்ணைத் திறந்து பார்த்தான். அங்கு ஒரு பெரிய க்ருஷ்ண சர்ப்பம் சுவற்றின் ஓரமாக மெல்ல ஊர்ந்து போய்க் கொண்டிருந்தது. அவன் கண்டு நடுங்கிப் பெருங் கூச்சலிட்டான். எல்லாரும் கண்ணை விழித்துப் பார்த்து திக்பிரமை கொண்டவர்கள் போன்று “ஐயோ! ஐயோ!” என்று கதறிக்கொண்டு மூலைக்கொருவராய் ஓடி கண்டவர்களிடமெல்லாம் சொன்னார்கள். உடனே பெருங்கூட்டம் கூடிவிட்டது. கூச்சலும் சந்தடியும் பெருத்துவிட்டது. பாம்போ, படமெடுத்துச் சீறுகின்றது. ஆனால், இவ்வளவு ஆரவாரத்துக்குமிடையே, இதொன்றும் அறியாதவராய் நமது பெரியார் (குழந்தை) கண்ணை மூடி வீற்றிருக்கின்றார். நிஷ்டை கலையவில்லை, பாவனை பலித்துவிட்டது. விளையாட்டு உண்மையாய் விட்டது.
கடைசியாக, மிகமிகக் கஷ்டப்பட்டு, அந்தப் பாம்பை அடித்துத் துரத்திய பின்னர், இப்பையனைப் போய் எழுப்பினார்கள். இம்மாதிரி உலகை மறந்து சிலை போல் உட்கார்ந்திருப்பது தகாதென்று மாதா கடிந்து கொண்டாள். குழந்தைப் பருவத்திலேயே இவ்விதமான மனத்தை ஒருமுகப்படுத்தக்கூடிய சக்தி அவருக்கிருந்ததென்றால், பிற்காலத்தில் அவர் அதிதீவிர வைராக்கியசாலியாய், சகஜ நிஷ்டாபரராய் விளங்கியது ஆச்சர்யமன்று.
அவர் தமது குருவினுடைய பரம கிருபைக்குப் பாத்திரமாகி, அக்கிருபையின் சக்தியினாலே அடக்கமுற்று, மௌனமுற்று ஈஷனாத்திரவ்யங்களில் எள்ளளவும் சம்பந்தமற்றவராகிச் சுமார் பன்னிரண்டு வருஷகாலம் தேசம் முழுதும் சுற்றிச் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். குருவருள் பலித்து, திருவருள் உண்டாயிற்று. நாவிலே சரஸ்வதி நர்த்தனம் செய்யத் தொடங்கினாள். ஐந்து நிமிஷ நேரத்துகுள்ளே அமெரிக்கா தேசம் முழுதையும் கைக்குள்ளே போட்டுக் கொண்டார். உலக் முழுதும் அவருடைய ஜோதி பிரகாசிக்க ஆரம்பித்தது. ஞானத்தைக் காளமேகம் போன்று வருஷித்தார். கோடையிடி போன்று கர்ஜித்தார்.
இந்திய தேசத்தின் மீது, தனது ஜென்ம பூமியின்மீது, மகரிஷிகளின் நாடாகிய இப்பரத கண்டத்தின்மீது, அவருக்கிருந்த அன்புக்கு ஓர் அளவேயில்லை. தேசாபிமான சிம்ஹமெனத் திகழ்ந்து, தேசத்திலே ஒரு புதிய உணர்ச்சியையும் ஆதர்சத்தையும் உண்டாக்கினார். உறங்கிக் கிடந்த ஜனங்களைத் தட்டியெழுப்பிவிட்டார். உண்மையை உரைத்தார். ஆண் மக்களாக வேண்டுமென்றார்.
ஆனால், இவருடைய ஏகாந்த, சிஷ்ய சகவாசமே இவருடைய உண்மையை ஆயிரம் மடங்காகப் பிரகாசிக்கச் செய்கின்றது. அமெரிக்காவிலே கோடைகாலத்தில் ஜனங்கள் நகரங்களில் வசிக்க முடியாமல் கிராமங்களுக்குச் சென்றுவிடுவது வழக்கம். அதுபோலவே நமது ஸ்வாமிகளும் தமது ஸ்த்ரீ சிஷ்யரரொருவருடைய வேண்டுகோளுக்கிணங்கி அவருடைய வாசஸ்தலத்திலே போய் சுமார் இரண்டு மாத காலம் வசித்து வந்தார். அவ்வம்மையாருடைய வாசஸ்தலம் நான்கு பக்கங்களிலும் நதிகளால் சூழப்பட்டு, ஸகஸ்ரதீபவனம் (ஆயிரந்தீவு) என்னும் அழகிய பெயர் வாய்ந்ததாயிருந்தது. அந்த ஸகஸ்ரதீபவனத்திலே தினந்தோறும் ஸ்வாமிகள் தமது சிஷ்யர்கள் சில பேருக்கு உபதேசம் செய்து கொண்டு வந்தார்.

சுப்பிரமணிய சிவா
அந்த உபதேசங்களை சிஷ்யர்கள் அவ்வப்போது குறித்துக் கொண்டு வந்தார்கள். பின்னர், அவ்வுபதேசங்களையெல்லாம் சேர்த்து “அருள்மொழிகள்” எனப் பெயரிட்டு அமெரிக்காவிலே புத்தக ரூபமாக அவற்றை வெளிப்படுத்தினார்கள். அப்புத்தகம் ஒன்றை ஆதாரமாகக் கொண்டுதான் நான் இப்பொழுது மொழி பெயர்த்திருக்கிறேன். அக்காலத்தில் ஸ்வாமிகள் அடக்கமே ரூபமாய், அருள்பெற்று விளங்கினார். அவருடைய அதரங்களின் வழியே அருள் பொங்கி வழிந்தது. அந்த அமிர்தப் பெருக்கே “அருள் மொழிகள்” என்னும் பெயருடன் இப்பொழுது வெளிவருகின்றது. துக்க நிவர்த்தியையும், மோக்ஷப்ராப்தியையும் நாடும் எந்தத் தமிழருக்கும் இந்த நூல் அரும்பெரும் துணையாய் நிற்குமென்பதில் சந்தேகமில்லை.
கடைசியாக ஒரு வார்த்தை. இந்த “அருள் மொழிகள்” உயர்ந்த உண்மைகளை பண்டித, பாமர, சாதாரண சர்வ ஜனங்களுக்குமாக தெளிவாக வந்திருக்கின்றன. இதுவே அருள் பெற்றாரது லக்ஷணம். தாயுமானவர், ராமலிங்க ஸ்வாமிகள் முதலிய அருளாளர் வாக்குகளிலே ஜனங்களுக்கு எவ்வளவு ருசி ஏற்படுகின்றதோ, அவ்வளவு ருசி இந்த “அருள் மொழிகளி” லும் இருக்கின்றதென்பதில் சந்தேகமில்லை.
‘ ‘காக முறவு கலந்துண்ணக்
கண்டீர் ; அகண்டா கார சிவ
போக மெனும்பே ரின்பவெள்ளம்
பொங்கித் ததும்பிப் பூரணமாய்
யேக வுருவாய்க் கிடக்குதையோ !
இன்புற் றிடநா மினியெடுத்த
தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும்!’’
.
அன்பும் ஆற்றலும் பரவட்டும்!

சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் உபதேசங்களும் இன்று போலவே எந்தக் காலத்திலும் முக்கியமானவை. அவரது சொற்கள் மனிதனின் ஆன்மிக ஆற்றலைக் கனன்று எழவைத்து அதற்கு ஒரு மகத்தான சக்தியைத் தரவல்லவை.
இன்றுள்ள பெரும்பாலான பிரச்னைகளுக்கு பழமையான நமது பண்பாட்டைக் காற்றில் பறக்கவிட்ட நமது சிந்தனைப்போக்கும் வாழ்க்கை முறையுமே காரணங்கள்.
இன்று நாம் உடனடித் திருப்தியை எதிர்பார்க்கும், அக்கரைப் பச்சையை நாடும் மனப்போக்கைக் கொண்டுள்ளோம். சுவாமிஜியின் கருத்துகள் அமைதியான, சக்தி வாய்ந்த ஆன்மிகப் புரட்சி உருவாக உதவும். அது வெளிப்புறப் புரட்சியல்ல, உள்ளார்ந்த மாற்றம் தரும், வாழ்வியல் மதிப்பீடுகள் சார்ந்த அகப்புரட்சி.
இன்று நமக்கு அறிவு உள்ளது; ஆனால் விழிப்புணர்வு இல்லை. தகவல் உள்ளது; ஆனால் பகுத்தறிவு இல்லை. இந்த நிலைக்கு உலகமயமாக்கலின் தாக்கம், ஆங்கிலேய ஆட்சி, மற்ற மதங்கள் ஆகியவற்றின் மீது ஓரளவிற்குக் குறை கூறலாம். ஆனால் அவையே முக்கியக் காரணங்கள் அல்ல. நாம், நமது பொறுப்பின்மையின் காரணமாக, விலைமதிப்பற்ற நம் சொத்துகளைப் போற்றிப் பாதுகாக்கத் தவறிவிட்டோம் என்பதே உண்மைக் காரணம்.
ரிஷி பூமியான பாரதம் ஆன்மிகத்தின் பொன்னொளியை உலகிற்கு அளித்த நாடு. உலகம் முழுமைக்கும் வழிகாட்டும் ஒளியான நமது வேதப்பண்பாடு இன்று சிக்கலில் உள்ளது.
இந்த தர்மத்தை நாம் காப்பாற்ற வேண்டும்.
ஆனால் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டிய பாரதத்தின் இளைய தலைமுறை, இந்த மண்ணிற்கே உரிய மேன்மையை மறக்க ஆரம்பித்துள்ளது. தர்மத்தைக் காப்பாற்றும் துணிவு நமக்கு இன்னும் வரவில்லை. பரந்த, தொன்மையான நம் அறிவுக் கலாச்சாரத்திற்கு நாமே சவக்குழி தோண்டியுள்ளோம்.
எனினும் இன்னமும் காலம் கடந்து விடவில்லை. மனதார முயற்சித்தால், நம் தர்மத்தை மீட்டெடுத்து விடலாம். எப்படி?
இதற்காக நீங்கள் தீவிர ஆன்மிக விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. உங்கள் சக்திக்கேற்ப சிறு அளவில் நம் தர்மத்தைச் செயல்படுத்தலாம்.
என்னால் முடியாது என்ற எண்ணம், என்னால் மட்டுமே முடியும் என்ற அளவுக்கு மாற வேண்டும். இந்த உயர்ந்த கல்வியைத் தரும் நமது பாரம்பரியத்தை எதிர்காலத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக நம் இளைஞர்களிடம் இவை பதிய வேண்டும்.
ஒரு நூற்றாண்டில் பெரிய கூட்டம் சாதிக்காதவற்றை, முழு மனதும், பொறுப்பும், ஆற்றலும் மிக்க ஒரு சில ஆண்களாலும் பெண்களாலும் ஒரே வருடத்தில் சாதிக்க முடியும் என்ற சுவாமி விவேகானந்தரின் இந்தச் சொற்களை நினைவில் கொள்ளுங்கள்.
சுவாமிஜி மேலும் கூறினார்: வீரர்களாலேயே பூமி ஆளப்படுகிறது. இது மாறாத உண்மை. ஆண்மகனாக இரு. எப்போதும் பயமில்லை என்றே கூறு. இதை அனைவரிடமும் கூறுங்கள்: பயம் வேண்டாம்.
சுவாமிஜி மேற்கூறியதன் மூலம் ஆத்மசக்தி மீண்டும் உயிர்த்தெழுவதையே கூறுகிறார். சரணாகதி மனோபாவத்துடன் செயலில் ஈடுபடும்போது நமக்குச் சக்தி பெருகும்; லட்சியத்தை அடைய முடியும்.
தன்னை நம்பாதவன் நாத்திகன் என்று சுவாமிஜி கூறியுள்ளார். தன்னை நம்புதல் என்பது தனது எல்லையற்ற ஆத்மசக்தியை நம்புவதாகும்.
தன் சமய நம்பிக்கைகளைச் செயல்படுத்துவதில் உள்ள பயமே இன்றைய ஹிந்து சமூகத்தின் சாபக் கேடு. வேத மாதா, தேவ மாதா, பிரக்ருதி மாதா, ஜகன்மாதா போன்றோரை மறந்ததே இன்றைய இந்துவை இருண்ட படுகுழியில் தள்ளிவிட்டது.
சநாதன தர்மத்தின் சாரம் பயமின்மையே. பயம், வாழ்வை மரணத்திற்கு ஒப்பாக ஆக்குகிறது; நமது செயல்திறனை மழுங்கச் செய்கிறது. அது நம் மனதைச் சுயநலத்திற்கும், தீய செயல்களுக்கும் அடிமை ஆக்குகிறது. இந்தப் பயத்தின் மூல காரணமே நான் கோழை என்னும் எண்ணம்தான். நமக்குள் உள்ள எல்லையற்ற சக்தியைப் பற்றிய அறியாமையே இந்தப் பயத்திற்குக் காரணம்.
சிறுவயதிலேயே பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளிடம், ‘நீங்கள் வீராங்கனைகளாக வளர வேண்டும். யாரும் உங்களை அடிமைப்படுத்த அனுமதிக்கக் கூடாது. உங்கள் மன உறுதி அதிகரிக்க வேண்டும்’ என்று கூற வேண்டும். அதுபோல் ஆண்களுக்கு, பெண்களை மதித்துப் பாதுகாக்கக் கற்பிக்க வேண்டும்.
ஒரு குழந்தையின் மன ஆரோக்கியத்திற்கான தூண்டுதல்கள் அதன் குடும்பச் சூழ்நிலையிலிருந்தே வருகின்றன. 7, 8 வயதுக்குள் 70% மன வளர்ச்சிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுவிடுகிறது. குழந்தையாய் இருந்தபோது பெற்ற அஸ்திவாரத்தின் பலம் மற்றும் பலமின்மை மீதே, மீதமுள்ள 30% கல்வி அமைகிறது.
ஒரு பெரிய கட்டடத்திற்கு பலமான அடித்தளம் தேவை. வாழ்நாள் முழுவதும் கற்கும் திறனைப் பெறுவதே அறிவுடைமை.
உலகாயத இலக்குகளை அடைய அதைப் பற்றிய வெளி உலக அறிவைப் பெற வேண்டும். ஆனால் நம் வாழ்வை அத்தகைய தகவல்களோடு மட்டுமே குறுக்கிக்கொண்டுவிட்டால், நமது அகம்பாவம் வளர்கிறது. இன்று நாம், குறிப்பாக இளைஞர்கள், தேவையற்ற தகவல்களில் மூழ்கிக் கிடக்கிறோம். நமது இளைஞர்கள், தங்கள் உடல் மற்றும் மனங்களையே நம்புகின்றனர். இவ்விதச் சிந்தனைகள் மக்களை எந்திரமாகவும் சுயநலம் கொண்டவர்களாகவும் ஆக்குகின்றன.
சுவாமி விவேகானந்தர் ஒரு முறை கூறினார்: மரணம் என்பது நிச்சயம் என்பதால், நற்காரியத்திற்குத் தன்னைத் தியாகம் செய்வது சிறந்தது. சனாதன தர்மத்தின் சாரமான இது போன்ற கருத்துகளை இளைஞர்களுக்குக் கற்பிக்க வேண்டும். நம் வாழ்வில் இவற்றைக் கடைப்பிடித்து, அவர்கள் லட்சிய புருஷர்களாக விளங்க உதவ வேண்டும்.
இந்தியக் கலாச்சாரத்தை மதிக்கத் தவறிய தன்மையை இன்று நாம் காண்பதற்கு நமது சமூக அமைப்பு, நமது இன்றைய கல்வி முறை, கண்மூடித்தனமாக மேலைநாட்டை காப்பியடிக்கும் போக்கு, அதனால் மாறிவிட்ட நம் வாழ்க்கை முறை இவையே காரணம். இவை யாவும் பயம், கவலை மற்றும் கோழைத்தனத்தை உருவாக்குகின்றன. மனித இனம், வாழ்க்கையை ஒரு வீர விளையாட்டு அல்லது சவாலாகத் தைரியத்துடன் எதிர்நோக்கத் தேவையான பலத்தை இழந்து நிற்கிறது.
நம் இளைஞர்கள் ஒன்றுக்கும் உருப்படாதவர்கள் அல்ல; எல்லாவற்றுக்கும் ஏற்றவர்களே. பொறுப்பற்றவர்கள் அல்ல, பொறுப்பாகக் கவனத்துடன் கையாளப்படாதவர்கள். அவ்வளவே. இந்தியாவின்-ஏன் – உலகின் எதிர்காலமே அவர்கள் கையில்தான் உள்ளது. அவர்கள் விழித்தெழுந்தால் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும்.
மனம் மற்றும் புத்தியின் சக்தி குறுகிய காலத்திற்கு உட்பட்டது. இவற்றின் வீரியமும் சிறிது காலத்திற்குப் பின் மறைந்துவிடும். அதனால்தான் நம்முள் உறைந்து கிடக்கும் ஆத்ம சக்தியின்பால் நம்பிக்கையைச் செலுத்த வேண்டும்.
இதை உடனடியாகப் பெற்றுவிட முடியாது. நம் செயல்களைச் சரணாகதியாகச் செய்யும்போது, நாம் சக்தி பெற்று, நம் இலக்கை நோக்கிப் பயணிப்போம். நமது எதிரிகள் வெளியில் இல்லை; உள்ளேயே உள்ளனர். நாமே நமக்கு எதிரி. நமது அறியாமை, ஆசைகளுக்கு வயப்படும் நம் அடிமைத்தனம், வாழ்க்கையைப் பற்றிய தவறான புரிதல்கள் ஆகிய தளர்வுகள் நம்மைச் சுருக்கி விடுகின்றன.
எல்லா அறிவின் அடிப்படையும் நம்முள் உறையும் சுத்த சத்வம் என்பதை ரிஷிகள் கண்டனர். நாம் இந்த உண்மையை நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுடன் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும்.
அன்பு, ஆசி, அருள், கருணை என்பவை யாவும் கடவுள் என்பதன் மறுபெயர்களே. நம் தர்மத்தை மலர்ச்சியுடன் நாம் திறந்த மனத்துடன் செய்யும்போது இந்தச் சக்தியும் அருளும் நம்முள் ஊடுருவிச் செல்கின்றன.
மனிதர்களைக் கடவுளாக, அதாவது நரனை நாராயணனாகக் காணும் தத்துவத்தை சனாதன தர்மம் மட்டுமே கற்றுக் கொடுக்கிறது. விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட, விவரிக்க முடியாத, அருவமும் கடவுளே என வணங்கும் ஒரே மதம் இந்து மதம் மட்டுமே. எந்த உருவத்தை நாம் இறைவனாகக் காண்கிறோமோ அதில் அன்புருவான இறைவனின் இருப்பை உணர்கிறோம்.
இயற்கையைப் போற்றி எல்லா உயிரினங்களையும் மதிக்கும் நீண்ட காலப் பாரம்பரியம் நமக்கு உண்டு. அளவில் சிறிய ஒரு தேனீ இல்லாவிட்டால் மகரந்தச்சேர்க்கையின்றி ஒரு பூவினமே முழுவதும் அழிந்துவிடும். உண்மையிலேயே, ஒவ்வொன்றுக்கும் ஒரு பணியும் தேவையும் உண்டு. எதுவும் முக்கியமற்றதல்ல.
மதம் என்பது என்றோ பிரிந்து போன மக்களை இணைக்கும் பாலமே, பிரிக்கும் சுவர் அல்ல. இதை அறிய ஒவ்வொருவரும் மதத்தின் உட்கருத்துகளை உணர்ந்து கொள்ள வேண்டும். அவை அன்பு மற்றும் கருணை என்பவை. இந்த வழியில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையும், வாக்கும் அனைவருக்கும் உந்துசக்திகள்.
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒரு வருடமாவது கிராமங்களில் சேவை செய்ய வேண்டும் என்பது போல, ஒவ்வொரு குடும்பத்தையும் சேர்ந்த ஒரு குழந்தையாவது தன் கல்லூரிப் படிப்பை முடித்தபின் கிராம சேவை செய்ய வேண்டும். அரசு இதற்கு உதவ வேண்டும். இந்த இளைஞர்கள் ஏழைகளுடன் தங்கி, அவர்களது பிரச்னைகளை நேருக்கு நேர் உணர்ந்து அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இப்படி, இளைஞர்களிடம் கருணையை ஊக்குவித்து ஏழைகளை உயர்த்தினால் அதன் மூலம் நாடே முழுமையான வளர்ச்சி பெறும். இதே போன்று, பணி ஓய்வு பெற்றவர்களும் ஏழைகளின் சேவைக்காக ஒரு வருடத்தை ஒதுக்கினால், நாட்டுக்கு இன்னும் நல்ல பயன் ஏற்படும்.
ஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்வு ஒரு சில நாட்களே. எனினும் அக்குறுகிய காலத்திற்குள் எத்தனை அழகையும் மகிழ்ச்சியையும் உலகில் பரப்பி விடுகிறது!
நாமும் உலகை மேலும் அழகானதாக மாற்ற, நமது வாழ்க்கையைப் பயன்படுத்த வேண்டும்.
பாரதம், ஆத்மஞானம் மற்றும் பண்டைய ரிஷிகள் தந்த சாஸ்திரங்களுடன் மீண்டும் உயிர்த்தெழுந்து உலகம் முழுவதும் பவனி வர வேண்டும். இதனை மெய்ப்பிக்க நாம் ஒற்றுமையுடன் கூட்டாகப் பணி புரிய வேண்டும்.
உலகிற்கே ஏற்புடைமைத் தத்துவத்தைக் கற்றுத் தந்த இப்பூமி அந்த நற்குணத்தில் ஆழப் பதிந்து இருக்க வேண்டும். சனாதன தர்ம சங்கொலி உலகைச் சுற்றி ஒரு புது எழுச்சியை ஊட்டட்டும்.
சுவாமி விவேகானந்தர் கண்ட இனிய கனவான அன்பு, பயமின்மை மற்றும் ஒற்றுமை நனவாகட்டும். இதனை மெய்ப்பிக்கும் சக்தியை பரமாத்மன் அனைவருக்கும் அருளட்டும்.
.
விவேகானந்தரின் குரல்

.
ஓர் ஆளுமை என்னும் அளவில் எப்போதும் வியப்புக்குரியவர் விவேகானந்தர். 39 வயதிற்குள் அவர் வாசித்த நூல்கள், ஆற்றிய உரைகள், எழுதிய பக்கங்கள், கையாண்ட விஷயங்கள், மேற்கொண்ட பயணங்கள், நிறுவிய அமைப்புகள் என ஒவ்வொன்றும் பிரமிப்பூட்டுபவை. இதில் ஏதாவது ஒன்றை ஒருவர் 40 வயதிற்குள் செய்திருந்தாலே அவரைச் சாதனையாளர் என்று சொல்லிவிடலாம். எல்லாவற்றையும் செய்திருக்கும் விவேகானந்தரை என்னவென்று சொல்வது?
இந்தியாவின் மரபின் மீது பெருமிதமும் கறாரான விமர்சன நோக்கும் அவரிடம் இருந்தன. நவீன வாழ்வின் அனைத்து விதமான சலனங்களுக்கும் இந்தியாவைத் தயார்ப்படுத்தியவர் அவர். மரபின் சட்டகத்துக்குள் நின்று சீர்திருத்தம் பேசியவர்களின் முன்னோடி. பலதரப்பட்ட கோணங்களிலிருந்தும் உலகைப் பார்க்க முற்பட்டவர்.
ஆழ்ந்த அக்கறையின் விளைவாக உண்மையாகவும் இயல்பாகவும் வெளிப்பட்ட அவரது கருத்துகள் அனைத்தும் ஒருவருக்கு உவப்பானவையாக இராது. அவரது எழுத்துகளை முழுமையாக வாசிக்கும் ஒருவர் பரவசம் கொள்ளும் இடங்களும் கூர்மையான வலியை உணரும் இடங்களும் கணிசமாக இருக்கும். இந்தியாவை ஆன்மிக நாடு என்றும் சமயம்தான் அதன் ஆதாரம் என்றும் அவர் அறிவிக்கும்போது சிலருக்கு உவப்பாக இருக்கும். இந்நாட்டின் ஆதிக்கச் சாதியினரை இறந்த காலத்தின் எலும்புக்கூடுகள் என அவர் வர்ணிக்கும்போது வலிக்கும். இந்தியா உலகுக்கு வழிகாட்டும் என்று சொல்லும்போது உவகை கொள்ளும் ஒருவரது மனம் சேரிகளின் குடிசைகளிலிருந்து மீனவக் குப்பங்களிலிருந்தும் புதிய பாரதம் எழுச்சி பெறும் என்று சொல்லும்போது சுணக்கம் கொள்ளலாம்.
ஒரே தரப்பில் நின்று ஒன்றையே திரும்பத் திரும்பப் பேசும் ஒற்றைக் குரல் அல்ல விவேகானந்தரின் குரல். அது பன்முகத்தன்மை கொண்டது. அதனாலேயே அது இந்தியாவின் ஆன்மாவைப் பிரதிபலிக்கிறது.
சமூக மாற்றம் குறித்தும் சமயம் குறித்தும் அவரது குரலை இங்கே கேட்கலாம்.
.
தேசியப் பெரும்பாவம்!
சாதாரண மக்களைப் புறக்கணித்ததே நமது தேசியப் பெரும்பாவம் என்று கருதுகிறேன். நமது வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம்.
ஏழைக்கோ, தாழ்ந்தவனுக்கோ, பாவிக்கோ நண்பர்கள் இல்லை, உதவுபவர்கள் இல்லை. என்ன தான் முயன்றாலும் அவர்களால் முன்னேற முடிய வில்லை. நாளுக்கு நாள் அவர்கள் அதோகதியில் ஆழ்ந்துவருகின்றனர். கொடிய சமுதாயம் தங்கள் மீது பொழிகின்ற அடிகளை அவர்கள் உணர்கிறார்கள். ஆனாலும், அந்த அடிகள் எங்கிருந்து வருகின்றன என்பது அவர்களுக்குத் தெரியாது.
இந்தியாவில் உள்ள தீமைகள் அனைத்துக்கும் வேராக இருக்கின்ற ஒரே விஷயம், ஏழைகளின் நிலைமை. புரோகித ஆதிக்கமும், அந்நியரின் ஆக்கி ரமிப்பும் நூற்றாண்டுகளாக அவர்களைக் கீழே தள்ளி மிதித்துவந்துள்ளன. இறுதியில், தாங்கள் மனிதப் பிறவிகள் என்பதையே இந்தியாவின் ஏழைகள் மறந்துவிட்டனர்.
மக்கள் ஏமாற்றப்பட்டனர்
நாடு மூழ்கிக்கொண்டே இருக்கிறது. கோடிக் கணக் கான தாழ்த்தப்பட்ட மக்களின் சாபம் நம் தலை மீது இருக்கிறது… அவர்களிடம் நாம் அத்வைதத்தை வாயளவில் பேசி, அதே வேளையில் முடிந்த அளவு அவர்களை வெறுக்கிறோம். உலக வழக்கு என்ற கொடுமையை அவர்களுக்காக ஏற்படுத்தியிருக்கிறோம். நாம் எல்லோரும் சமம், பரம்பொருளுடன் ஒன்றுபட்டிருக் கிறோம் என்றெல்லாம் வாய் கிழியப் பேசுகிறோம், அதில் அணுவளவுகூடச் செயல்முறையில் இல்லை.
மதத்தின் பெயரில் மக்கள்மீது அடக்குமுறை
மனிதனின் மகிமையை இந்து மதத்தைப் போல் உலகின் வேறு எந்த மதமும் இவ்வளவு உயர்வாகக் கூறவில்லை; அதே வேளையில், உலகிலுள்ள எந்த மதமும் இந்து மதம் செய்வதுபோல், ஏழைகள் மற்றும் தாழ்ந்தவர்களின் கழுத்தை நெரிப்பதும் இல்லை.
மதத்தால் மட்டும் இயலாது
சோஷலிசம், அது இது என்று எந்தப் பெயரிலாவது அழையுங்கள். மக்களால் ஆளப்படுகின்ற ஏதோ ஒன்று நடைமுறையில் இருப்பதை ஒவ்வொன்றும் காட்டுகிறது. பொருட் தேவைகளைப் பெறுதல், குறைந்த நேர வேலை, எதிர்ப்பின்மை, போரின்மை, அதிக உணவு முதலியவற்றை மக்கள் அதிகம் விரும்புவார்கள். மதத்தின் மீது, மனிதனின் நல்லியல்பின் மீது நிறுவப்படாத இந்த நாகரிகமோ, எந்த நாகரிகமோ நிலைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?
கல்வி – முதல் தேவை
கல்வி, கல்வி, கல்வி ஒன்றே காரணம். ஐரோப்பாவில் பல நகரங்களின் வழியே யாத்திரை செய்தபோது, அங்கு வாழ்கின்ற ஏழைகளுக்கு உள்ள வசதிகளையும் கல்வியையும் கண்டேன். அப்போதெல்லாம் நம் ஏழைகளை நினைத்துப் பார்த்து நான் கண்ணீர்விட்டு அழுதிருக்கிறேன். இந்த வேறுபாட்டுக்குக் காரணம் என்ன? கல்வி என்ற விடையே நான் கண்டது. கல்வியால் தன்னம்பிக்கை வருகிறது, தன்னம்பிக்கையின் வலிமையால் உள்ளிருக்கும் ஆன்மா விழித்தெழுகிறது. நம்முள் இருக்கும் ஆன்மாவோ மெல்ல மெல்ல செயலிழந்துகொண்டிருக்கிறது.
குறிப்பிட்ட சிலருக்குக் கல்வி
ஆணவம், அரச ஆணை இவற்றின் துணையுடன், விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரிடம் எல்லா கல்வியும் புத்தி நுட்பமும் உடமையாக்கப்பட்டது தான் இந்தியாவின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம். உழைக்கும் வர்க்கத்தினர்கள் எழுவார்கள்.
ஒரு காலம் வரும். அப்போது சூத்திரர்கள் தங்கள் சூத்திரத்தன்மையுடனேயே முக்கியத்துவம் பெறுவார்கள். அதாவது, அவர்கள் வைசிய, சத்திரிய இயல்புகளைப் பெற்று வலிமையை வெளிப்படுத்துகிறார்களே, அதுபோல் அல்ல; சூத்திர இயல்பு மற்றும் வழக்கங்களுடனேயே எல்லா நாடுகளிலும் சமுதாயத்தில் ஆதிக்கத்தை அடைவார்கள். அந்த உதயத்தின் முதல் கிரணம் மேற்கு உலகில் இப்போதே மெல்லமெல்லத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அதன் விளைவு என்ன ஆகுமோ என்று எல்லோரும் திகைத்து நிற்கிறார்கள்.
.
.
ஆன்மிகம்தான் இந்தியாவின் அடித்தளம்!
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்
என்.கோபாலசுவாமி

பெரம்பூர், விவேகானந்த வித்யாலயம் பள்ளியில் சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலையை திங்கள்கிழமை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தர் உள்ளிட்டோர்.
.
சென்னை, ஜன. 6: ஆன்மிகம் என்ற அடித்தளம் இல்லாவிட்டால் அஸ்திவாரம் இல்லாத கட்டடம் போல இந்தியா தகர்ந்துவிடும் என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரும், விவேகானந்தா கல்விக் கழகத்தின் தலைவருமான என். கோபாலசுவாமி தெரிவித்தார்.
.
சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சார்பில் கடந்த 9 மாதங்களாக விவேகானந்தர் ரத யாத்திரை தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை, சென்னை, பெரம்பூருக்கு வந்த ரத யாத்திரைக்கு ஆயிரக் கணக்கான மக்கள் வரவேற்பு அளித்தனர். நிறைவாக பெரம்பூர் விவேகானந்த வித்யாலயம் பள்ளியில் நடைபெற்ற வரவேற்புக் கூட்டத்தில் என். கோபாலசுவாமி பேசியது:
.
சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் பெருமையை இந்தியர்களுக்கு எடுத்துரைத்தவர் அவர். நம் முன்னோரின் பெருமைகளை, அதன்மூலம் நாட்டுக்கு கிடைத்த நன்மைகளை அவர்தான் எடுத்துச் சொன்னார்.
.
ஆன்மிகம் தான் இந்தியாவின் அடித்தளம் என்றார் விவேகானந்தர். ஆன்மிகம் இல்லாத நாடு வளர்ச்சி பெறாது. அப்படியே வளர்ச்சி பெற்றாலும் அந்த நாடு அஸ்திவாரம் இல்லாத கட்டடம் போல தகர்ந்துவிடும் என்றார். எனவே, நம்முள் இருக்கும் ஆன்மிகத்தை நாம் உணர வேண்டும்; மற்றவர்களையும் உணரச் செய்ய வேண்டும்.
.
ஆன்மிகத்துக்கு அடுத்து பிறருக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். உதவி செய்பவரைவிட, அதனை பெற்றுக் கொள்பவரே உயர்ந்தவர். உதவியைப் பெறுபவரால்தான் கொடுப்பவருக்கு மரியாதை ஏற்படுகிறது என்றார். இதன் மூலம் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தார்.
.
அடுத்ததாக அவர் சொன்னது, சொல், செயல், சிந்தனை ஆகியவை ஒன்றாக இருக்க வேண்டும்; எதனைச் சிந்திக்கிறோமோ அதனைச் சொல்ல வேண்டும்; எதனைச் சொல்கிறோமோ அதனை செயல்படுத்த வேண்டும் என்றார். சுவாமியின் இந்த போதனைகளை பின்பற்றினால் நாமும் உயரலாம். நாட்டையும் உயர்த்தலாம் என்றார் கோபாலசுவாமி.
.
சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தர்:
.
சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு கோவையில் தொடங்கிய ரத யாத்திரை தமிழகம் முழுவதும் வலம் வந்து 295-வது நாளான திங்கள்கிழமை (ஜன. 6) சென்னை பெரம்பூர் வந்துள்ளது.
.
ஒரு ரதம் 300 நாள்கள் மாநிலம் முழுவதும் வலம் வருவது வரலாற்று நிகழ்வு.இது போன்ற ரத யாத்திரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மூலம் வட கிழக்கு மாநிலங்கள் உள்பட நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரை மூலம் புதிய யுகம் பிறக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
.
விவேகானந்தர் சிகாகோவில் சொற்பொழிவு ஆற்றியதன் நூற்றாண்டை கடந்த 1993-ல் கொண்டாடினோம். சிகாகோ சொற்பொழிவுக்குப் பிறகு, அவர் இந்தியா திரும்பியதன் நூற்றாண்டை 1997-ல் கொண்டாடினோம். இந்த 2014-ல் அவரது 150-வது பிறந்த ஆண்டை கொண்டாடுகிறோம்.
.
விவேகானந்தரை மீண்டும் மீண்டும் கொண்டாடுவது ஏன் என்றால், அவர்தான் ஹிந்து தர்மத்தைக் காப்பாற்றினார். பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள் உள்ள பாரதத்தில் தர்மத்தால் மட்டுமே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்பதை வலியுறுத்தினார். தெய்வ பக்தி இருந்தால் தான் தேச பக்தி வரும் என்பதையும் அவர் எடுத்துரைத்தார். சுவாமியின் வழியில் தெய்வ பக்தி, தேச பக்தியோடு நாட்டின் உயர்வுக்காக நாம் உறுதியேற்க வேண்டும் என்றார்.
.
தினமணி கார்ட்டூனிஸ்ட் மதி:
.
சிறு வயதிலிருந்தே சுவாமி விவேகானந்தரைப் படித்து வருபவன் நான். விவேகானந்தர் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம். சுவாமியின் 150-வது பிறந்த ஆண்டில் அவரைப் போல வேடமணிய வாய்ப்பு கிடைத்தது இந்தக் குழந்தைகள் செய்த பெரும் பேறாகும். கடவுள் சாதிக்க முடியாததை பக்தி சாதிக்கும் என்பார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர். சிக்கலான நேரத்தில் அறிவை நம்புவதைவிட இதயம் சொல்வதை நம்பு என்பார் விவேகானந்தர். சோதனைகள் ஏற்படும் போதெல்லாம் அவரின் வாசகங்களை எழுதி வீடு முழுவதும் ஒட்டி விடுவேன். அதுதான் என்னை வழிநடத்தி வருகிறது என்றார்.
.
முன்னதாக பெரம்பூர் விவேகானந்தா பள்ளி வளாகத்தில் விவேகானந்தரின் சிலையை என். கோபாலசுவாமி திறந்து வைத்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) நிறுவனத்தின் துணைத் தலைவர் ஹேமா கோபால், செம்பியம் வணிகர்கள் சங்கத்தின் தலைவர் சண்முகதுரை, விவேகானந்தா கல்விக் கழகத்தின் செயலாளர் டி. சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
.
மானாமதுரை சொற்பொழிவு!
வெற்றிகரமான மேற்கத்திய திக்விஜயத்திற்குப் பிறகு, பாரதம் திரும்பிய சுவாமி விவேகானந்தர் தமிழகத்தில் சுற்றுப் பிரயாணம் செய்தார். அப்போது, பிப்ரவரி 1, 1897 அன்று மானாமதுரையில் சிவகங்கை ஜமீந்தார்களாலும், மக்களாலும் அளிக்கப்பட்ட வரவேற்புரைக்குப் பதிலளித்து சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு இது…
நீங்கள் எனக்களித்த இதமான வரவேற்புக்கான எனது ஆழ்ந்த நன்றியை வார்த்தைகளால் விளக்க முடியாது. நான் எவ்வளவு தான் விரும்பினாலும் துரதிர்ஷ்டவசமாக, மிகப் பெரிய சொற்பொழிவை நிகழ்த்தும் நிலையில் நான் இப்போது இல்லை. நமது சமஸ்கிருத நண்பர் மிக மிக அழகிய சொற்களால் என்னைப் பெருமைப்படுத்தி கூறினார். என்னதான் முட்டாள் தனமாகத் தோன்றினாலும் எனக்கும் உடம்பொன்று உள்ளது. அது சில விதிகளையும் முறைகளையும் ஜடப் பொருட்களுக்குரிய சில நியதிகளையும் பின்பற்றவே செய்யும். எனவே களைப்பென்றும் சோர்வென்றும் சில விஷயங்கள் இந்த உடம்பையும் பாதிக்கவே செய்கிறது.
மேலைநாட்டில் என்னால் செய்யப்பட்ட சிறிய வேலை குறித்து நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மக்கள் தெரிவித்து வருகின்ற மகிழ்ச்சியும் பாராட்டும் காண்பதற்குப் பெருமை மிக்க காட்சியாக உள்ளது. எதிர்காலத்தில் வரப்போகின்ற மகான்களுக்கான வரவேற்பாகவே இதனை நான் காண்கிறேன். நான் செய்திருக்கும் இந்த மிகச் சிறிய வேலைக்கே இத்தகைய சிறப்பான வரவேற்பு கிடைக்கிறதென்றால், எனக்குப் பின்னால் வரப் போகின்ற, உலகத்தையே அசைக்கவல்ல ஆன்மிக வீரர்களுக்கு இந்த நாடு அளிக்க போகும் வரவேற்பு எவ்வளவு மகத்தானதாக இருக்கும்!
இந்தியா ஆன்மிக பூமி. ஆன்மிகத்தை, ஆன்மிகத்தை மட்டுமே இந்து புரிந்து கொள்கிறான். நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக நமது கல்வி இந்த வழியில்தான் அமைந்துள்ளது. அதன் விளைவாக ஆன்மிகம் வாழ்வின் முக்கிய நோக்கமாக உள்ளது. இது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஒவ்வொருவரும் பெரிய வியாபாரியாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை; ஒவ்வொருவரும் ஆசிரியர்களாக இருக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை. ஒவ்வொருவரும் போர்வீரராக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை . ஆனால் வெவ்வேறு நாடுகள் சேர்ந்து ஒருங்கிணைந்து இந்த உலகில் ஒருமித்ததொரு விளைவை ஏற்படுத்த முடியும்.
உலக ஒற்றுமையில் ஆன்மிகமாகிய இசையை எழுப்ப வேண்டுமென்று இறைவன் நம்மை விதித்துள்ளார் போலும். எந்த நாடும் பெருமைப்படத் தக்கவர்களான மேன்மைமிக்க நமது முன்னோர் நமக்கு அளித்துள்ள பாரம்பரியச் சிறப்பினை இன்னும் நாம் இழந்து விடாதிருப்பது கண்டு நான் குதூகலம் அடைகிறேன். இது எனக்கு நம்பிக்கையைத் தருகிறது; நமது இனத்தினுடைய விதியின் மீது உறுதியான நம்பிக்கையை அளிக்கிறது. எனது உற்சாகம் எல்லாம், எனக்குத் தனிப்பட்ட முறையில் நீங்கள் அளித்த பெருமைக்காக அல்ல, ஆனால் இந்த நாட்டின் இதயம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது, அதன் வலிமை குன்றவில்லை என்பதை அறிந்தற்காகத் தான்.
இந்தியா இன்னும் வாழ்கிறது, அது இறந்துவிட்டதாக யார் சொன்னது ? நாம் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும் என்று மேலைநாடுகள் விரும்புகின்றன. ஆனால் அவர்கள் நம்மை போர்க்களத்தில் சுறுசுறுப்பாகக் காண விரும்பினால் ஏமாற்றமே அடைவார்கள். அது நமது களம் அல்ல, ஒரு ராணுவ நாடு ஆன்மிகமயமாக வேண்டும் என்று நினைத்தால் எப்படி நாம் ஏமாற்றம் அடைவோமோ, அப்படித்தான் இதுவும். அவர்கள் இங்கு வரட்டும், நாமும் அவர்களுக்கு இணையாக எப்படி உயிர்த் துடிப்போடு செயல்படுகிறோம், நம் நாடு எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறது, அன்று போலவே இன்றும் எப்படி உயிர்த் துடிப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைக் காணட்டும். நாமெல்லாம் தாழ்ந்த நிலையை அடைந்து விட்டோம் என்ற கருத்தை மாற்றி அமைக்க வேண்டும். எவ்வளவு விரைவாக இதைச் செய்கிறோமோ அவ்வளவுக்கு நல்லது.
இப்பொழுது நான் சில கடினமான வார்த்தைகளைச் சொல்லியாக வேண்டியுள்ளது. நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஐரோப்பியர்களின் உலகியல் நம்மை ஏறக்குறைய மூழ்கடித்துவிட்டது என்று சற்றுமுன் குற்றம் சாட்டினார்கள். தவறு ஐரோப்பியர்களுடையது மட்டுமல்ல, பெரும் பங்கு நம்முடையதே. வேதாந்திகள் என்ற நிலையில் நாம் எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும், அதன் உள்நோக்கத்தை, அடிப்படைத் தன்மையைக் கண்டறிய வேண்டும். வேதாந்திகள் என்ற நிலையில் நம்மை நாமே காயப்படுத்திக் கொண்டாலன்றி, பிரபஞ்சத்தில் உள்ள எந்தச் சக்தியும் நம்மைக் காயப்படுத்த முடியாது என்பது உறுதியாக நமக்குத் தெரியும். இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினார் முகமதியர்களாகி விட்டனர். அது போலவே அதற்கு முன்னால் மூன்றில் இரண்டு பங்கினர் பௌத்தர்களாகியுள்ளனர். இப்பொழுது ஐந்தில் ஒரு பங்கினர் முகமதியர்கள், ஒரு லட்சத்திற்கு மேல் ஏற்கனவே கிறிஸ்தவர்கள் உள்ளனர்.
இது யாருடைய தவறால் விளைந்தது? நம்முடைய வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவர் மறக்க முடியாத மொழியில் கேட்கிறார்: நிரந்தர வாழ்க்கையாகிய நீரூற்று அருகிலேயே பொங்கிப் பெருகிச் செல்லும்போது, இந்த ஏழை அப்பாவி பசியாலும் தாகத்தாலும் ஏன் செத்து மடிய வேண்டும் ? சொந்த மதத்தையே உதறிச் செல்பவர்களுக்காக நாம் என்ன செய்தோம் என்பதுதான் கேள்வி. அவர்கள் ஏன் முகமதியர்கள் ஆனார்கள்? நான் இங்கிலாந்தில் இருந்த போது இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டேன் – ஒரு நல்ல குடும்பத்துப் பெண், விலைமகளாக விரும்பினாள். மற்றொரு பெண் அவளைத் தடுத்தபோது அவள், ‘அது ஒன்றுதான் நான் மற்றவர்களின் அனுதாபத்தைப் பெறுவதற்கு வழி. இப்போது எனக்கு உதவி செய்வார் யாருமே இல்லை. நான் வாழ்வு தவறி இழிவான பெண்ணான பின் , கருணையுள்ளம் கொண்ட பெண்கள் என்னைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று, எனக்கு வேண்டியதைச் செய்ய ஒருவேளை முன்வரலாம்’ என்று சொன்னாள்.
பிற மதங்களுக்குப் போய்விட்ட நம் மக்களைக் குறித்து நாம் இப்போது அழுகிறோம். ஆனால் அவர்கள் மதம் மாறுவதற்கு முன் அவர்களுக்காக நாம் என்ன செய்தோம்? நாம் ஒவ்வொருவரும் நம்மையே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்வோம். நாம் என்ன கற்றுக்கொண்டோம்? சத்திய ஜோதியை நாம் ஏந்தியுள்ளோமா? ஏந்தியுள்ளோம் என்றால், எவ்வளவு தொலைவு அதை எடுத்துச் சென்றோம்? இந்தக் கேள்வியை நாம் நம்மிடம் கேட்டே தீர வேண்டும். நாம் அப்போது அவர்களுக்கு உதவவில்லை. இது நாம் செய்த தவறு, நாம் செய்த வினை. எனவே இதற்காக யார்மீதும் பழி போட வேண்டாம். நம் சொந்த வினையையே குறை கூறிக் கொள்வோம் ! நீங்கள் அனுமதிக்காமல் உலகாயதமோ, முகமதியமோ, கிறிஸ்தவமோ அல்லது வேறு எதுவுமோ உங்களை வெல்ல முடியாது. மோசமான உணவாலும் பட்டினியாலும் வெயிலாலும் மழையாலும் உடம்பு சிதைந்தும் சீர்குலைந்தும் போகாத வரை எந்தக் கிருமியும் அதனைக் தாக்க முடியாது. ஆரோக்கியமானவன் விஷக்கிருமிக் கூட்டத்தின் நடுவே கூட ஆபத்தின்றிச் சென்று வர முடியும்.
நமது வழிமுறைகளை மாற்றிக்கொள்வதற்கு இன்னும் அவகாசம் உள்ளது. முட்டாள்தனமான அந்தப் பழைய விவாதங்களையும், பொருளற்றவற்றைப் பற்றிய பழைய சண்டைகளையும் எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள். கடந்த அறுநூறு, எழுநூறு ஆண்டுகளாக நாம் எவ்வளவு இழிநிலையை அடைந்துள்ளளோம் என்பதை எண்ணிப் பாருங்கள். தண்ணீரை வலது கையால் குடிக்க வேண்டுமா, இடது கையால் குடிக்க வேண்டுமா? கைகளை மூன்றுமுறை கழுவுவதா, நான்குமுறையா, ஆறு முறையா? இவை தான் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக நமது அறிவுஜீவிகளின் வாதப் பிரதிவாதமாக இருந்து வந்துள்ளது. இத்தகைய ஈடிணையற்ற வாதங்களில் ஈடுபடுவதிலும் இவற்றிற்கு அற்புதமான தத்துவ விளக்கங்களை எழுதுவதிலும் காலத்தைக் கழிக்கின்ற மனிதர்களிடமிருந்து நீங்கள் வேறு என்னதான் எதிர்பார்க்க முடியும்!
நமது மதம் சமையலறைக்குள் அடங்கிவிடுகின்ற ஆபத்து வந்துள்ளது. நாம் வேதாந்திகள் அல்ல, நம்மில் பெரும்பாலோர் பௌராணிகர்களும் அல்ல, தாந்திரிகர்களும் அல்ல; நாம் எல்லாம் வெறும் ‘தீண்டாதே, தீண்டாதே’ என்ற மதத்தைச் சார்ந்தவர்கள். நமது மதம் சமையலறையில் இருக்கிறது. பானை தான் நமது கடவுள். என்னைத் தொடாதே, நான் புனிதமானவன் என்பதே நமது மதம். இது இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் இப்படியே சென்றால் நம்மில் பெரும்பாலோர் பைத்தியக்கார விடுதியில் தான் இருப்போம். நமது மூளை பலவீனமாகிவிட்டது என்பதற்கு அடையாளம் இது. நமது மனத்தால் வாழ்வின் உயர் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை; மனம் எல்லா வலிமையையும் செயல்திறனையும் இழந்து, எதிரில்பட்ட சின்னஞ் சிறு பிரச்னையைத் திரும்பத் திரும்பச் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதே இதன் பொருள்.
இத்தகைய நிலைமையைத் தலைகீழாக மாற்ற வேண்டும். அதன் பின்னர் உறுதியோடு எழுந்து நிற்க வேண்டும்; செயல்திறனும் வலிமையும் மிக்கவர்களாக வேண்டும். அதன்பிறகு தான் நம் முன்னோர் நமக்கு விட்டுச் சென்றதும், இன்று உலகம் முழுவதற்குமே தேவைப்படுவதுமான கருவூலத்தை, அளவற்ற புதையலாகிய நம் பாரம்பரியத்தை நாம் அறிந்து கொள்வோம். இந்தச் செல்வம் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்றால் உலகமே அழிந்து போகும். அதனை வெளியே கொண்டு வாருங்கள்; எல்லோருக்கும் கொடுங்கள். உலகம் முழுவதற்கும் அதைப்பற்றிக் கூறுங்கள்.
தானம் ஒன்று தான் கலியுகத்தில் செய்யக் கூடியது என்று வியாசர் கூறுகிறார். நம்மால் கொடுக்க முடிந்தவற்றுள் ஆன்மிக தானம் தான் மிக உயர்ந்தது. அதற்கு அடுத்ததாக லௌதீக அறிவு. அதற்கு அடுத்து, ஒருவரது உயிரைக் காப்பாற்றுதல். அதற்கு அடுத்து கடைசியாக, பசித்தவர்களுக்கு உணவைத் தரும் அன்னதானம். நாம் தேவையான அளவு அன்னதானம் செய்துவிட்டோம். வேறு எந்த நாடும் நம்மைப்போல் கொடையாளியாக இருந்ததில்லை. ஒரு பிச்சைகாரன்கூட தன் வீட்டில் ஒருபிடிச்சோறு இருக்கும்வரை, அதில் பாதியைத் தானமாகக் கொடுக்கவே செய்வான் இத்தகைய விசித்திரத்தை இந்தியாவில் மட்டும் தான் காண முடியும். இது போதும் . இப்போது மற்ற இரண்டு தானங்களான ஆன்மிகம் மற்றும் லௌதீக அறிவை அளிப்போம். நாம் எல்லோரும் வீரர்களாக, உறுதி வாய்ந்த உள்ளம் படைத்தவர்களாக முழுக்க முழுக்க உண்மை யானவர்களாக இருந்து, சக்கரம் சுழலத் தோள் கொடுப்போமானால், இருபத்தைந்து ஆண்டுகளில் எல்லா பிரச்னைகளும் தீர்ந்து போகும். அதன்பிறகு நாம் எதிர்த்துப் போரிட எதுவுமே இருக்காது. இந்தியா மீண்டும் ஆரிய நாடாகிவிடும்.
இப்போதைக்கு நான் உங்களிடம் சொல்ல வேண்டுவதெல்லாம் இவை தாம். எனது திட்டங்களைப் பற்றியெல்லாம் நான் அவ்வளவாக எதுவும் சொல்லவில்லை. சொல்வதைவிடச் செயலில் காட்டவே நான் விரும்புகிறேன். அதன் பின்னர் திட்டங்களைப்பற்றிப் பேசுகிறேன். எனக்கென்று திட்டங்கள் உள்ளன. இறைவன் திருவுளம் கொள்ளவும் எனக்கு நீண்ட ஆயுளை அளிக்கவும் செய்வாரானால் அவற்றைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளும் கிடைக்கவே செய்யும். இதில் நான் வெற்றி பெறுவேனா, மாட்டேனா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஓர் உயரிய லட்சியத்தை மேற்கொள்வதும், அதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணிப்பதும் ஒரு மகத்தான காரியமாகும். அப்படி இல்லாமல் உணர்வற்ற கீழான ஜட வாழ்க்கை வாழ்வதில் என்ன பெருமை இருக்கிறது ? ஓர் உயரிய லட்சியத்திற்கு அர்ப்பணிப்பதில் மட்டுமே வாழ்க்கை மதிப்புப் பெறுகிறது. இதுதான் இப்போது இந்தியாவில் செய்யப்பட வேண்டிய மகத்தான காரியம். தற்போதைய மத மறுமலர்ச்சியை நான் வரவேற்கிறேன். இரும்பு பழுத்திருக்கும்போதே அதை அடித்து நீட்டுவதற்கான வாய்ப்பை நழுவவிடுவது முட்டாள்தனம் அல்லவா?
.
கும்பகோணம் சொற்பொழிவு!
3 பிப்ரவரி 1897 அன்று சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்திற்கு வருகைபுரிந்து மூன்று நாட்கள் தங்கினார். அங்கு இந்து மாணவர்கள் அளித்த வரவேற்புரைக்குப் பதிலளித்து சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு இது.
வேதாந்தப் பணி
மிகக் குறைந்த அளவே செய்யப்படுகின்ற மதப்பணி கூட மிகப் பெரிய விளைவைத் தருகிறது – கீதை (2:40) கூறுகின்ற இந்த உண்மைக்கு விளக்கம் வேண்டுமானால் எனது எளிய வாழ்க்கையைப் பார்த்தால் போதும். அதன் நிரூபணத்தை நான் ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் கண்டு வருகிறேன். எனது பணி உண்மையில் மிகச் சாதாரணமானது . ஆனால் கொழும்புவிலிருந்து இங்கு வரை என் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்குத் தரப்படுகின்ற மனமுவந்த, கனிவான வரவேற்புகள் எல்லா எதிர்பார்ப்புகளையும் மீறியவை; அதே நேரத்தில் இது நம் இந்துப் பாரம்பரியத்திற்குத் தகுதியானவை, நமது இனத்திற்கு தகுதியானவை. நம் இந்து இனத்தின் உயிர்ச் சக்தியும் வாழ்க்கைத் தத்துவமும் ஆதார நாடியும் மதத்தில்தான் இருக்கிறது. நான் கீழை மற்றும் மேலை நாடுகளில் பல்வேறு இன மக்களிடையே பயணம் செய்து, இந்த உலகத்தைக் கொஞ்சம் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு மகத்தான லட்சியம் இருப்பதை நான் கண்டேன்.அதுவே அந்த இனத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. சில நாடுகளில் இந்த தேசியப் பின்னணி அரசியலாக இருக்கிறது , சில நாடுகளில் சமுதாய கலாச்சாரமாக உள்ளது, மற்றும் சில நாடுகளில் அறிவுக் கலாச்சாரமாக உள்ளது. ஆனால் நமது தாய்நாட்டின் அடிப்படையாக வும் முதுகொலும்பாகவும் அதன் தேசியவாழ்க்கை முழுவதும் கட்டப்படுவதற்கான உறுதியான அடித்தளப்பாறையாகவும் மதமே உள்ளது.
சென்னை மக்கள் எனக்கு அமெரிக்காவில் அனுப்பிய அன்பான பாராட்டுரைக்கு நான் அனுப்பிய பதில் உங்களுள் பலரது நினைவில் இருக்கும். நம் நாட்டின் ஒரு குடியானவன், மேலை நாட்டிலுள்ள சீமான் ஒருவனைவிடப் பல வழிகளில் சிறந்த மத அறிவு பெற்றவனாக உள்ளான் என்று அதில் நான் குறிப்பிட்டிருந்தேன். எனது அந்தச் சொற்கள் சந்தேகத்திற்கு இடமின்றிச் சரியாக இருப்பதை இன்று நான் காண்கிறேன். சாதாரண இந்தியர்கள் பல விஷயங்களை அறியாதவர்களாகவும் புதிய செய்திகளை அறிவதில் ஆர்வம் இல்லாதவர்களாகவும் இருப்பதைக்கண்டு ஒரு காலத்தில் நான் வெறுப்படைந்தது உண்டு. ஆனால் இப்போது அவர்களின் போக்கிற்கான காரணம் எனக்குப் புரிந்துவிட்டது. அவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ, அதைப் பற்றிய செய்திகளை அறிவதில் , என் பயணத்தில் நான் கண்ட மற்ற நாட்டு மக்களைவிட அவர்கள் பேரார்வம் காட்டுகிறார்கள்.
ஐரோப்பாவின் பரபரப்பான அரசியல் மாற்றங்களையும் ஐரோப்பிய சமுதாயத்தில் நடைபெறும் எழுச்சிகளைப் பற்றியும் நம் குடியானவர்களைக் கேளுங்கள். அவர்களுக்கு அவை எதுவும் தெரியாது. தெரிந்து கொள்வதில் அவர்களுக்கு ஆர்வம் கிடையாது. ஆனால் இந்தியாவிலிருந்து பல வழிகளிலும் பிரிக்கப்பட்ட, இந்திய வாழ்க்கை முறைகளிலிருந்து துண்டிக்கப்பட்ட இலங்கை விவசாயி – இலங்கை வயல்களில் உழைக்கின்ற அவர்கள்கூட, அமெரிக்காவில் ஒரு சர்வசமயப் பேரவை நடைபெற்றதையும் அதற்கு இந்திய சன்னியாசி ஒருவர் சென்றதையும் அங்கு அவர் ஏதோ சிறு வெற்றி பெற்றதையும் தெரிந்து வைத்திருக்கிறான். எனவே தாங்கள் விரும்புவதை அறிந்து கொள்வதில் இவர்களும் பிற நாட்டினரைப் போல் ஆர்வம் நிறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். மதம் ஒன்றுதான் இந்தியர்கள் முழு நாட்டம் கொள்ளக் கூடிய ஒன்றாகும்.
ஓர் இனத்தின் ஆதார சக்தி முழுவதும் மத லட்சியத்தில் இருப்பது நல்லதா அல்லது அரசியல் கொள்கைகளில் இருப்பது நல்லதா என்பது பற்றி இப்போது நான் பேசவில்லை . நல்லதற்கோ கெட்டதற்கோ, நமது ஆதார சக்தி முழுவதும் மதத்தில் தான் ஒருமுனைப்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவு. இதை நீங்கள் மாற்ற முடியாது. அதை அழித்துவிட்டு அதற்குப் பதிலாக வேறு ஒன்றை வைக்க உங்களால் முடியாது. வளர்ந்துவிட்ட பெரிய மரத்தை ஓர் இடத்திலிருந்து பிடுங்கி மற்றோர் இடத்தில் நட்டு, உடனடியாக அது அங்கே வேர் பிடித்து வளரும்படிச் செய்ய உங்களால் முடியாது. நல்லதற்கோ கெட்டதற்கோ ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் மத லட்சியம் நிறைந்து பரவிக் கொண்டிருக்கிறது நல்லதற்கோ கெட்டதற்கோ இந்தியச் சூழ்நிலை மத லட்சியங்களால் நிரப்பப்பட்டு எத்தனையோ நூற்றாண்டுகளாக ஒளிவீசி வருகிறது. நல்லதற்கோ கெட்டதற்கோ நாம் இந்த மத லட்சியங்களை நடுவிலே பிறந்து வளர்க்கப்பட்டு இருக்கிறோம், அவை நம் ரத்தத்தோடு கலந்து, ரத்தக்குழாயில் ஓடுகின்ற ஒவ்வொரு துளியிலும் சிலிர்ப்பை ஊட்டி நம் உடம்போடு ஒன்றிப்போய் இருக்கிறது; நம் வாழ்வின் ஆதாரமாக சக்தியாக ஆகியிருக்கிறது.
அத்தகைய மதத்தை, எதிர்விளைவாக அதே அளவு சக்தியை எழுப்பாமல், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கின்ற அந்தப் பேராறு தனக்கென்று உண்டாக்கிக் கொண்ட கால்வாயை நிரப்பாமல், உங்களால் விட்டுவிட முடியுமா ? கங்கை மீண்டும் பனி மலைகளுக்குள் திரும்பிச் சென்று புதிய பாதையில் பாய வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அது கூட ஒருவேளை முடிகின்ற காரியமாக இருக்கலாம். ஆனால் தன் தனிப் பண்பான மத வாழ்க்கையை ஏதாவது ஒன்றைத் தன் பாதையாக ஏற்றுக் கொள்வது இந்தியாவால் முடியாத காரியம். நீங்கள் வேலை செய்ய வேண்டுமானால், இயன்ற அளவு எதிர்ப்பு குறைவாக இருக்க வேண்டும். இந்தியாவில் அத்தகைய ஒரு பாதை மதம்தான். இந்தியாவில் இதுதான் வாழ்க்கை வழி, இதுதான் வளர்ச்சிக்கான வழி. மதப்பாதையைப் பின்பற்றியே இந்தியா முன்னேற்றம் கண்டிருக்கிறது.
பிற நாடுகளைப் பொருத்த வரை, வாழ்க்கையின் எத்தனையோ தேவைகளுள் மதமும் ஒன்று. நான் அடிக்கடிப் பயன்படுத்தும் ஓர் உவமையைக் கூறுகிறேன்; சீமாட்டியின் வரவேற்பறையில் பல்வேறு பொருட்கள் இருக்கும், ஐப்பானிய ஜாடி ஒன்றையும் வைப்பது இந்நாளில் ஒரு நாகரிகம் ஆயிற்றே! அதை அவள் வாங்கியே தீர வேண்டும், அது இல்லாமல் வரவேற்பறை நன்றாக இருக்குமா என்ன! அதைப்போல், அன்பர்களே, பிற நாட்டினருக்கு வாழ்க்கையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன; அதனை முழுமையாக்க மதம் என்பதும் கொஞ்சம் தேவையாக இருக்கிறது. அதற்காக அவர்கள் அதையும் சிறிது வைத்திருக்கிறார்கள். ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் அரசியல், அதாவது சமுதாய முன்னேற்றம், அதாவது இந்த உலகம் தான் மேலை நாட்டினரின் லட்சியம். கடவுள், மதம் என்ப தெல்லாம் அந்த லட்சியத்தை அடைவதற்காக உதவுபவை, அவ்வளவுதான். அவர்களே இன்னும் கற்க வேண்டியுள்ளது, இதில் நம்மை விடத் தெரிந்தவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள். கடந்த நூறு இருநூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்திய மதத்திற்கு எதிராக அவர்கள் கூறிவருவதெல்லாம் என்ன தெரியுமா ? நமது மதம் இவ்வுலக வாழ்க்கைக்கு ஆவன செய்யவில்லை, அது நமக்கு காசு பணங்களைத் தரவில்லை, நம்மை மற்ற நாடுகளைக் கொள்ளை அடிப்பவர்களாக ஆக்கவில்லை, பலசாலிகளைப் பலவீனமானவர்கள் மீது நின்றுகொண்டு அவர்களின் உயிர்ச் சக்தியை உறிஞ்சி தங்களை வளமாக்கிக் கொள்ளச் சொல்லவில்லை என்பதுதான். நிச்சயமாக நமது மதம் இதைச் சொல்லவில்லை. தன் காலடியில் உலகையே நடுங்கச் செய்கின்ற படைகளை அனுப்பி, மற்ற இனங்களைச் சூறையாடி நாசப்படுத்த அதனால் முடியாது. எனவே அவர்கள், இந்த மதத்தில் என்ன இருக்கிறது, வாய்க்குத் தீனியும் உடலுக்குப் பலமும் அளிக்காத ஒரு மதத்தில் என்னதான் இருக்க முடியும் என்று கேட்கிறார்கள்.
நமது மதம் இவ்வுலக வாழ்க்கைக்கு எதையும் செய்யவில்லை, என்ற அவர்களுடைய இந்த வாதத்தைவைத்துக் கொண்டே நாம் நமது மதத்தின் சிறப்பை உறுதி செய்யலாம் என்பதை அவர்கள் உணரவில்லை. நமது மதம் மட்டுமே உண்மையான மதம். ஏனெனில் மூன்று நாட்களே நிலைப்பதும் புலன்களால் உணரப்படுவதுமான இந்தச் சின்னஞ்சிறு உலகை வாழ்வின் அனைத்து மாகக் கொள்ளக் கூடாது, நமது மகத்தான லட்சியம் அதுவல்ல என்று நமது மதம்தான் கூறுகிறது. சில அடிகளுக்குள் அடங்கிவிடுகின்ற பூமியாகிய இந்தக் கோளம் ; நமது மதத்தின் காட்சியைக் கட்டுப்படுத்தவில்லை. நமது மதத்தின் லட்சியம் இவைகளுக்கு அப்பால், இன்னும் அப்பால் உள்ளது; புலன்களுக்கு அப்பால், இடத்திற்க்கு அப்பால், காலத்திற்கு அப்பால் இன்னும் அப்பால், ஆன்மாவின் கடல்போல் பரந்து விரிந்த மகிமையில் இந்த உலகம் சூன்யமாகி, பிரபஞ்சமே ஒரு துளிபோலாகின்றன அந்த இடமே நமது லட்சியம்.
நமது மதம்தான் உண்மையான மதம். ஏனெனில் கடவுள் ஒருவரே உண்மையானவர், இந்த உலகம் பொய்யானது, கணம் தோன்றி மறைவது, உங்கள் காசு பணமெல்லாம் தூசியைத் தவிர வேறல்ல, உங்கள் அதிகார மெல்லாம் வரம்பிற்கு உட்பட்டது, வாழ்க்கையே பல நேரங்களில் தீமையாகத்தான் இருக்கிறது என்று அது கூறுகிறது. எனவேதான் நமது மதம் உண்மையானது.
நமது மதம் தான் உண்மையான மதம். ஏனெனில் எல்லாவற்றையும் விட மேலாக, அது துறவைப் போதிக்கிறது. காலங்காலமாகப் பெற்ற ஞானத்தோடு எழுந்து நின்று, இந்துக்களாகிய நம்மோடு ஒப்பிட்டால், நமது முன்னோர்களால் இங்கே இதே இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்ட பழுத்த பண்பட்ட ஞானத்தை உடையவர்களான நம்மோடு ஒப்பிட்டால், நேற்றுதான் பிறந்த வர்களாகத் தோன்றும் நாடுகளுக்குத் தெளிவான சொற்களில் அது கூறுகிறது; குழந்தைகளே, நீங்கள் புலன்களின் அடிமைகள். புலன்களுக்கு வரையறை இருக்கிறது, புலன்களில் அழிவு மட்டுமே உள்ளது. இரண்டொரு நாட்களே நிலைக்கின்ற இந்த ஆடம்பர வாழ்க்கை இறுதியில் அழிவைத்தான் கொண்டு வரும். இவை அனைத்தையும் விட்டுவிடுங்கள். புலன்களிடமும் உலகத்திடமும் கொண்டுள்ள பற்றை விடுங்கள்; அது தான் மதத்தின் வழியாக அல்ல துறவின் மூலமே லட்சியத்தை அடைய முடியும் . அதனால் நம்முடையது மட்டுமே உண்மையான மதம்.
வினோதமானதோர் உண்மையைப் பாருங்கள். ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ நாடுகள் உலக மேடைக்கு வந்து, ஒரு சில கணங்கள் தங்கள் பாத்திரங்களை ஆரவாரமாக நடித்துவிட்டு, காலப் பெருங் கடலில் நீர்க்குமிழி போல், ஏறக்குறைய எந்த அடையாளத்தையும் நிறுத்தாமல் அழிந்து போய்விட்டன, இங்கு நாமோ நிரந்தரமானது போன்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மிகப் பெரும் தகுதி பெற்றதே வாழும் என்பதைப் பற்றிய புதிய பல கொள்கைகளையெல்லாம் அவர்கள் பெரிதாகப் பேசுகிறார்கள் ; வாழ்வதற்கான மிகப் பெரும் தகுதியாக உடல் வலிமையையே கருதுகிறார்கள். அது உண்மையென்றால் பிற நாடுகளை ஆக்கிரமித்ததான பழைய நாடுகளுள் ஒன்றாவது இன்றும் பெருமையோடு வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும், ஒருபோதும் எந்த இனத்தையோ நாட்டையோ வெல்லாத பலவீனமான இந்துக்கள் அழிந்திருக்க வேண்டுமே ! ஆனால் நாம் முப்பதுகோடி பேர் இன்னும் வலிமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். (ஒருமுறை இளம் ஆங்கிலப் பெண்ணொருத்தி, இந்துக்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் ஓர் இனத்தைக்கூட வெற்றி கொள்ளவில்லையே! என்று என்னைக் கேட்டாள்).
இனி, நமது ஆற்றல்கள் எல்லாம் செலவழிந்து விட்டன என்பதோ, நம் நாடு படிப்படியாக அழிந்து வருகிறது என்பதோ சிறிதும் உண்மை அல்ல. நம்மிடமிருந்து போதுமான வலிமை இருக்கிறது. தேவை ஏற்படும் போது சரியான நேரத்தில் அது வெள்ளமெனப் பொங்கியெழுந்து உலகை நிரப்பவே செய்கிறது.
மிகப் பழங்காலத்திலிருந்தே நாம் உலகத்திற்க்குச் சவால் விட்டுக்கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஒரு மனிதன் எவ்வளவு அதிகமாக வைத்துக்கொள்ள முடியும் என்ற பிரச்சனையைத் தீர்க்க மேலை நாட்டினர் முயன்று கொண்டிருக்கிறார்கள். இங்கோ ஒரு மனிதன் எவ்வளவு குறைவான உடைமைகளைக் கொண்டு வாழ முடியும் என்ற கேள்விக்கு விடை காண முயன்று கொண்டிருக்கிறோம். இந்தப் போராட்டமும் இந்த வேறுபாடும் பல நூற்றாண்டுகள் தொடரவே செய்யும். ஆனால் வரலாற்றில் ஏதாவது உண்மையாகி இருக்குமானால், ஆருடங்கள் எப்போதாவது உண்மையாகி இருக்கிறதென்றால், அது யார் குறைவான பொருட்களைக் கொண்டு வாழக் கற்றுக் கொள்கிறார்களோ, கட்டுப்பாட்டுடன் வாழ்கிறார்களோ அவர்களே முடிவில் வெல்கிறார்கள், யார் போகத்தின் பின்னாலும் ஆடம்பரத்தின் பின்னாலும் ஓடுகிறார்களோ அவர்ளின் வாழ்க்கை எவ்வளவு பரப்பரப்பாக அந்ந நேரத்தில் காணப்பட்டாலும் அவர்கள் அழிந்தே தீர வேண்டும், மாய்ந்தேயாக வேண்டும் என்பதுதான்.
மனித வாழ்க்கையில், ஏன் நாடுகளின் வரலாற்றில் கூட ஒரு வகையான களைப்பு, வேதனை தரத்தக்க வகையில் அதிகமாக நிலவுகின்ற சில நேரங்கள் உண்டு. அத்தகையதோர் அலை இப்போது மேலைநாடுகளில் மோதுவது போல் தோன்றுகிறது. அங்கும் மகத்தான சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள். இப்படிப் பணம் பதவி என்று அவற்றின் பின்னால் ஓடுவது வெறுமையிலும் வெறுமை என்று அவர்களும் கண்டுபிடித்து விட்டார்கள். அங்குள்ள பலரும், ஏன், பண்பாட்டோருள் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் இந்தப் போட்டி, போராட்டம், வாணிப நாகரிகத்தின் காட்டு மிராண்டித்தனம் இவைகளால் ஏற்கனவே களைத்துப் போய்விட்டார்கள். மேலான ஒன்றை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதேவேளையில் ஐரோப்பாவின் தீமைகளுக்கெல்லாம் அரசியல் மற்றும் சமுதாய மாற்றங்களே ஒரே தீர்வு என்றும் சிலர் இன்னும் அங்கே பிடிவாதமாக நம்பிக்கொண்டு தான் இருக்கின்றனர்
ஆனால் அங்குள்ள மகத்தான சிந்தனையாளர்களிடம் வேறு சிந்தனைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. மனித வாழ்வில் எவ்வளவு தான் அரசியல் மற்றும் சமுதாய மாற்றங்களைக் கொண்டு வந்தாலும் தீமைகளைத் தீர்க்க முடியாது என்பதை அவர்கள் கண்டு விட்டார்கள். அக வாழ்வில் ஓர் உறுதியான மாற்றம் மட்டுமே வாழ்க்கையின் தீமைகளை நீக்கும். படைகளோ அரசாங்கமோ சட்டக் கொடூரங்களோ எவ்வளவு தான் இருந்தாலும் ஓர்இனத்தின் நிலையை மாற்ற முடியாது. ஆன்மிகப் பண்பாடும் நீதிநெறிப் பண்பாடும் மட்டுமே மனித இனத்தின் தவறான போக்குகளை மாற்றி, அதை நல்ல வழியில் திருப்ப முடியும் ,எனவே மேலைநாட்டினர் ஏதாவது புதிய சிந்தனைகளையும் புதிய தத்துவங்களையும் பெறுவதற்காக ஆர்வத்தோடு இருக்கிறார்கள். அவர்களது மதமான கிறிஸ்தவம் பல விஷயங்களில் நல்லதாகவும் பெருமை மிக்கதாகவும் இருந்தாலும் அதனை அவர்கள் முழுமையாக உணரவில்லை; உணர்ந்தபோதோ அது அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. எனவே மேலை நாட்டின் அறிவுஜீவிகள், நம் பழைய தத்துவங்களில், அதிலும் குறிப்பாக வேதாந்தத்தில், தாங்கள் தேடிக் கொண்டிருக்கின்ற புதிய சிந்தனைத் துடிப்பையும் தங்கள் பசிக்கும் தாகத்திற்கும் ஏற்ற ஆன்மீக உணவையும் நீரையும் காண்கிறார்கள். இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
ஒவ்வொரு மதத்திலும் உள்ள எத்தனை எத்தனையோ விந்தையான கருத்துக்களைக் கேட்பது எனக்குப் பழக்கமாகிவிட்டது. சிறிதுகாலத்திற்கு முன்பு கூட, கிறிஸ்தவ மதம் மட்டுமே உலகம்தழுவிய மதம் என்று என் சிறந்த நண்பரான டாக்டர் பரோஸ் உரிமை பாராட்டியதை நீங்கள் கேட்டிருக்கலாம் . இந்த விஷயத்தைப்பற்றிச் சிறிது சிந்திக்க விரும்புகிறேன். வேதாந்தம், வேதாந்தம் மட்டுமே உலகம் தழுவிய மதமாக முடியும்; வேறெந்த மதமும் அத்தகைய ஒன்றாக இருக்க முடியாது என்றே நான் கருதுகிறேன். அதற்கான காரணங்களை இப்போது கூறுகிறேன்.
நமது மதத்தைத் தவிர, ஏறக்குறைய உலகின் மற்ற பெரிய மதங்கள் எல்லாமே அதைத் தோற்றுவித்த ஒருவர் அல்லது பலரது வாழ்க்கையோடு இணைக்கப்பட்டடுள்ளன. அந்த மதங்களின் கொள்கைகளும் போதனைகளும் கோட்டுபாடுகளும் அற நெறிகளும் அவைகளைத் தோற்றுவித்தவர்களின் வாழ்க்கையைச் சுற்றியே அமைந்திருக்கின்றன. அவர்களின் வாழ்க்கையே அந்த மதங்களின் ஆதாரமாகவும் அதிகாரமாகவும் ஆற்றலாகவும் உள்ளது. விசித்திரம் என்னவென்றால் அத்தகைய மதங்களாகிய கட்டிடம் அவர்களது வாழ்க்கையின் வரலாற்று ஆதாரம் என்ற அஸ்திவாரத்தின் மீதுதான் முற்றிலும் கட்டப்பட்டுள்ளது. அந்த வரலாற்று ஆதாரத்தில் மட்டும் ஓர் அடி விழுமானால், பாறை போன்ற அஸ்திவாரம் என்று பெருமைப்பட்டுப் கொள்கிறார்களே அது மட்டும் அசைக்கப்படுமானால், தூளாக்கப்படுமானால் முழுக்கட்டிடமுமே நொறுங்கிக் சுக்கல் சுக்கலாகி விடும். அவை மீண்டும் பழைய பெருமையைப் பெறுவதே இல்லை. இன்று அப்படித்தான் நடைபெறுகிறது. அத்தகைய மதங்களைத் தோற்றுவித்தவர்களின் வாழ்க்கை வரலாற்றில் பாதி நிச்சயமான உண்மை என்று நம்பப்படவில்லை; மீதிப் பாதியும் தீவிரமான சந்தேகத்திற்கு உரியதாகக் கருதப்படுகிறது.
நமது மதத்தைத் தவிர மற்ற பெரிய மதங்கள் அனைத்தும் இத்தகைய வரலாற்று மனிதர்கள் மீதே அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது மதம் தத்துவங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது. வேதங்களை உரு வாக்கியதாக எந்த ஆணோ பெண்ணோ உரிமைபாராட்ட முடியாது. அவை என்றும் அழியாத உண்மைகளின் திரண்ட வடிவமாகும். ரிஷிகள் அவற்றைக் கண்டுபிடித்தார்கள். வேதங்களில் அந்த ரிஷிகளின் பெயர்கள் வெறும் பெயர்கள் மட்டுமே இங்குமங்குமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் யார், என்ன செய்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. பலருடைய தந்தையின் பெயர் இல்லை ; அவர்கள் எப்போது எங்கே பிறந்தார்கள் என்ற குறிப்புகூட பெரும்பாலும் இல்லை. அவர்கள், அந்த ரிஷிகள் தங்கள் பெயரைப்பற்றிக் கவலைப்பட்டார்களா என்ன அவர்கள் உண்மைகளைப் போதித்தார்கள். தங்கள் போதித்த உண்மைகளுக்கு, தங்களால் இயன்ற அளவு உதாரணமாக விளங்கினார்கள்.
நமது கடவுள் சகுணமாகவும் அதே வேளையில் நிர்க்குணமாகவும் இருப்பதைப்போல் நமது மதமும் அழுத்தமான வகையில் தத்துவங்களின் மீது கட்டப்பட்ட ஒன்றாகவும், அதே நேரத்தில் மனிதர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப எண்ணற்ற விதங்களில் பின்பற்றுவதற்கு ஏற்ற விதமாகவும் அமைந்துள்ளது. நமது மதத்தை விட அதிகமான அவதார புருஷர்களை, மகான்களை, தீர்க்கதரிசிகளை வேறு எந்த மதம் தந்துள்ளது இன்னும் எண்ணற்றறோரைத் தருவதற்கும் தயாரக இருக்கிறது?
அவதாரங்கள் கணக்கற்றவை என்று பாகவதம் கூறுகிறது; நீங்கள் விரும்புகின்ற அளவு அதிகமாக இன்னும் வைத்துக்கொள்வதற்கு போதுமான வாய்ப்பைத் தந்துள்ளது. ஆகையால் நம் இந்திய மத வரலாற்றிலுள்ள அவதாரபுருஷர்களிலும் சரி, மகான்களிலும் சரி, ஒருவரோ பலரோ வாழ்வதற்கு வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டாலும் அதனால் நம் மதத்திற்க்கு எந்தவித தீங்கும் இல்லை. அப்போதும் நம் மதம் எப்போதும் போல் உறுதியாகவே இருக்கும். ஏனென்றால் அது தத்துவங்களை ஆதாரமாகக் கொண்டுள்ளதே தவிர மனிதர்களை அல்ல. உலகிலுள்ள அனைவரையும் ஒரே மனிதரைச் சுற்றித் திரளும்படிச் செய்ய முயல்வது வீண். ஏன் உலகம்தழுவியதும், அழிவேயில்லாத உண்மைகளின் கீழும்கூட உலக மக்கள் எல்லோரையும் ஒன்றுசேர்ப்பது என்பது முடியாத ஒன்று.
மதம் என்ற துறையில் மனித இனத்தின் பெரும் பகுதியையேனும் ஒரே மாதிரியாகச் சிந்திக்கச் செய்ய வேண்டுமானால், அது தத்துவ உண்மைகளின் மூலம் தான் முடியுமே தவிர, மனிதர்களின் மூலம் முடியாது என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள். நான் முன்பு கூறியதுபோல் நமது மதம் அதற்கு வேண்டிய அதிகாரத்தையும் ஆற்றலையும் மிகுதியாகப் பெற்றதாக உள்ளது. இஷ்ட தெய்வக் கொள்கை இருக்கிறதே, அது அற்புதமானது. உங்களுக்கு உகந்த மகான்களை நீங்கள் தேர்ந்துதெடுத்துக் கொள்வதற்க்கு முழுமையான சுதந்திரத்தைக் இது அளிக்கிறது. இவர்களுள் எந்த மகானையோ ஆச்சாரியரையோ உங்கள் வழிக்காட்டியாக, வழிபாட்டிற்கு உரியவராக நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம், அது மட்டுமல்ல, நீங்கள் தேர்ந்தெடுப்பவரே மகான்களுள் மிக மேலானவர், அவதாரபுருஷர்கள் மிக உயர்ந்தவர் என்று நினைக்கவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதில் தவறில்லை. ஆனால் அதற்குப் பின்னணியாக உறுதியான, நிரந்தரமான தத்துவ உண்மைகள் இருக்க வேண்டும். ஓர் ஆச்சரியகரமான உண்மை என்னவென்றால் நமது அவதார புருஷர்களின் மதிப்பெல்லாம் அவர்களின் வாழ்க்கை வேத உண்மைகளுக்கு விளக்கமாக அமையும் போது மட்டுமே. ஸ்ரீகிருஷ்ணரின் பெருமை யெல்லாம், அவர் நமது சனாதன தர்மத்தின் கொள்கைகளை மிகச் சிறப்பாகப் போதித்தவர் என்பதிலும், இந்தியாவில் இதுவரை வாழ்ந்த வேதாந்த ஆச்சாரியர்களுள் மிகச் சிறந்தவர் என்பதிலும் தான் இருக்கிறது.
உலகத்தின் கவனத்திற்கு வேதாந்தம் விடுக்கின்ற இரண்டாவது கருத்து; உலக சாஸ்திரங்கள் அனைத்திலும் வேதாந்த போதனைகள் மட்டுமே, இக்கால விஞ்ஞானத்தின் புறவுலக ஆராய்ச்சி முடிவுகளோடு முழுக்கமுழுக்க இயைபு உடையதாக உள்ளது. அடிப்படை, பரஸ்பரத் தொடர்பு, மற்றும் உறவு இவற்றைப் பொறுத்தவரை ஒரே மூலத்தைக் கொண்டு இரண்டு மனங்கள் வரலாற்றின் மங்கலான கடந்தகாலத்தில் வெவ்வேறு பாதைகளில் புறப்பட்டன. ஒன்று புராதனமான இந்து மனம், மற்றொன்று புராதனமான கிரேக்க மனம். இந்துக்கள் அகவுலகத்தை ஆராய்வதன் மூலம் பயணத்தை தொடங்கினார், கிரேக்கர்கள் புறவுலகத்தை ஆராய்வதன் மூலம், அப்பாலுள்ள அந்த லட்சியத்தை நோக்கித் தங்கள் பயணத்தைக் தொடங்கினர். மனங்களின் பயண வரலாறுகள் எவ்வளவோ வேறுபாடுகளை உடையதாக இருந்தாலும், அந்த இரண்டு வகையான சிந்தனை அலைகளும் அப்பாலுள்ள அந்த இரண்டு வகையான சிந்தனை அலைகளும் அப்பாலுள்ள அந்த லட்சியத்தின் ஒரே மாதிரியான எதிரொலிகளையே எழுப்புகின்றன; இதனை நாம் எளிதாக அறிய முடிகிறது அறிய முடிகிறது. தற்கால விஞ்ஞானத்தின் முடிவுகள் வேதாந்திகள் அல்லது இந்துக்களின் மதத்தோடுதான் இயைபாகப் பொருந்துவதாகத் தோன்றுகிறது. இன்றைய விஞ்ஞானம் தன் முடிவுகளை வைத்துக்கொண்டு, அதே நேரத்தில் வேதாந்தத்தின் முடிவுகளின் வாயிலாக ஆன்மீகத்தையும் நாடலாம் என்றே தோன்றுகிறது. இன்றைய விஞ்ஞானத்தின் முடிவுகள் நெடுங்காலத்திற்க்கு முன் வேதாந்தம் கண்ட முடிவே என்றுதான் , நமக்கு மட்டுமல்லாமல் ஆராய்ச்சியில் விருப்பம் உள்ள அனைவருக்கும் தோன்றுகிறது. ஒரு வித்தியாசம் என்னவென்றால், இன்றைய விஞ்ஞானம் தூல மொழியில் எழுதப்பட்டுள்ளது.
தற்கால மேலை நாட்டறிஞர்களை வேதாந்தம் கவர்வதற்கான மற்றொரு காரணம், வேதாந்ததின் அற்புதமான பகுத்தறிவுக் கொள்கை வேதாந்தத்தின் முடிவுகள் மிகவும் ஆச்சரியமான வகையில் அறிவுபூர்வமாக இருப்பதாக இன்றைய மிகச் சிறந்த மேலை நாட்டு அறிஞர்கள் பலர் என்னிடம் கூறினர். அவர்களுள் ஒருவரை எனக்க நெருக்கமாகத் தெரியும். உண்பதற்கோ தன் ஆராய்ச்சிக்கூடத்தை விட்டு வெளியே செல்வதற்கோகூட நேரமில்லாத அவர் என் வேதாந்தச் சொற்பொழிவுகளைக் கேட்பதற்க்காக மணிக்கணக்கில் காத்திருப்பார். வேதாந்தம் மிகவும் அறிவுபூர்வமானது; காலத்தின் தேவையை முழுக்க முழுக்க அது பூர்த்தி செய்கிறது; தற்கால விஞ்ஞானம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன முடிவுகளுடன் அப்படியே இயைந்திருக்கிறது என்பார் அவர்.
மத ஒப்புமையிலிருந்து பெறப்பட்டுள்ள அத்தகைய இரண்டு விஞ்ஞான முடிவுகள் மீது உங்கள் கவனத்தைச் சிறிது திருப்ப விரும்புகிறேன்- ஒன்று, மதங்களின் சமரசம்; மற்றொன்று, எல்லாம் ஒன்றே என்னும் கொள்கை. பாபிலோனிய வரலாற்றிலும் யூத வரலாற்றிலும் ஒரு சுவையான விஷயத்தை நாம் காணலாம். பாபிலோனியர்களும் யூதர்களும் பல்வேறு குழுக்களாக பிரிந்துள்ளனர். ஒவ்வொறு குழுவிற்கும் ஒரு தெய்வம் உண்டு. இந்தக் தெய்வங்கள் பெரும்பாலும் ஒரு பொதுவான பெயரைப் பெற்றிருந்தனர். பாபிலோனியர்களின் தெய்வங்கள் பால் என்று வழங்கப்பட்டனர். இவர்களுள் பால் மெரோடக் தலைமை தெய்வம். நாளடைவில் இந்தக் குழுக்களில் ஒன்று மற்றவற்றை வென்று, அவற்றைத் தன்னுடன் ஒன்று சேர்த்துவிட்டது. அதன் விளைவாக , வென்ற குழுவின் தெய்வம் எல்லா குழுக்களின் தெய்வங்களுக்கும் தலைமை தெய்வமாகிவிடுவார். இவ்வாறுதான், இன்று தம்பட்டம் அடித்துக் கொள்வதான, செமிட்டிக் இனத்தின் ஒரே கடவுள் கொள்கை உருவாகியது.
யூதர்களின் தெய்வங்கள் மொலாக் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். இவர்களுள் இஸ்ரேல் என்னும் குழுவிற்க்கு சொந்தமானவர் மொலாக்-யஹ்வா அல்லது மொலாக் -யாகவா என்று அழைக்கப்பட்டார். காலப்போக்கில் இஸ்ரேல் குழு அதே இனத்தைச் சேர்ந்த மற்ற குழுக்களை வென்று, அவர்களின் மொலாக்குகளை எல்லாம் அழித்துத் தங்கள் சொந்த மொலாக்தான் மொலாக்குகள் அனைவரிலும் உயர்ந்தவர் என்று அறிவித்தது. இத்தகைய ஒரு மத வெற்றிக்காகச் சிந்தப் பட்ட ரத்த வெள்ளங்களும், நடத்தப்ட்ட கொடுமைகளும் எவ்வளவு என்பது உங்களுள் பலருக்கும் தெரியும். பிற்காலத்தில் பாபிலோனியர்கள் இஸ்ரேலியர்களின் மொலாக் யஹ் வாவின் அழிக்க முயன்றார்கள், ஆனால் மடியவில்லை.
மத விஷயங்களில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவதற்க்கு பல்வேறு குழுக்கள் நிகழ்த்திய இத்தகைய போராட்டம் இந்தியா எல்லைகுள்ளும் நடந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இங்கும் ஆரியர்களின் பல்வேறு இனங்களுக்குள் தங்கள் தெய்வங்களின் தலைமைக்காகக் கருத்து வேற்றுமைகள் நிலவியிருக்கலாம். ஆனால் இங்கு நிகழ்ந்தது வேறு. இந்திய வரலாறு யூதர்களின் வரலாற்றிலிருந்து. மற்ற நாடுகள் எதைவிடவும் சகிப்புத் தன்மைக்கும் ஆன்மீகத்திற்க்கும் இருப்பிடமான நாடாக இந்தியா மட்டுமே இருக்க வேண்டியிருக்கிறது. எனவே இனச் சண்டைகள் இங்கு நெடுங்காலம் நீடிக்கவில்லை.
வரலாறு எட்ட முடியாத, பாரம்பரியங்கள் தங்கள் பார்வையைச் செலுத்தத் துணியாத அளவிற்கு மிகத் தொலைவான, அடர்ந்ததான அந்தப் பழங்காலத்தில் இந்தியாவில் தோன்றிய மகத்தான ரிஷிகளுள் ஒருவர், ‘ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி’ – இருப்பவர் ஒருவரே, ரிஷிகள் அவரைப் பலவாறாக அழைக்கிறார்கள் என்று கூறினார். இது இதுவரை கூறப்பட்ட வாக்கியங்களுள் நினைவில் நிறுத்த வேண்டிய வேண்டிய ஒன்றும், இது வரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மகத்தான உண்மைகளுள் மிகச் சிறந்த உண்மையும் ஆகும். இந்துக்களாகிய நமக்கு இந்த உண்மை, தேசிய வாழ்வின் முதுகெலும்பாக அமைந்துள்ளது. ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி என்கின்ற இந்த ஒரு கருத்து நமது தேசிய வாழ்வில் எத்தனையோ நூற்றாண்டுகளைக் கடந்து நம்மிடம் வந்துள்ளது; காலந்தோறும் அளவிலும் நிறைவிலும் புதிய வேகம் பெற்று இன்று அது நமது தேசிய வாழ்வில் இரண்டற ஒன்றுபட்டுள்ளது, ரத்தமாகக் கலந்து நம்மில் ஒன்றாகியுள்ளது. இந்த உண்மை நம் ரத்தகுழாய் தோறும் ஓடிக் கொண்டிருக்கிறது; நம் நாடு மத சகிப்புத்தன்மையின் மகத்தான நிலமாக ஆகிவிட்டது. இங்கே இந்த நாட்டில் மட்டுமே மக்கள் தங்கள் மதத்தையே இகழ வந்த மதங்களுக்கும் கோயில்களும் சர்ச்சுகளும் கட்டித் தருகின்றனர். இந்த மகத்தான ஒரு கருத்தைத்தான் உலகம் நம்மிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
மேலைநாடுகளில் எந்த அளவிற்க்குச் சகிப்பற்ற தன்மை நிலவுகிறது என்பது பற்றி உங்களுக்குப் பெரிதாக எதுவும் தெரியாது. அங்கேயே உயிரைவிட நேருமோ என்றுகூட நான் பலமுறை நினைக்கின்ற அளவிற்கு அங்கே மதச் சகிப்பின்மை தலைவிரித்து ஆடுகிறது. மதத்திற்காக ஒரு மனிதனைக் கொல்வது என்பது அங்கே சர்வ சாதாரணமான ஒன்று. தங்கள் நாகரீகத்தைப்பற்றிப் பெருமையடித்துக் கொள்கின்ற அவர்கள் அதையும் ஒரு நாகரீகமாகச் சொல்லி, இன்று இல்லா விட்டால் நாளைக்குச் செய்யலாம். மேலை நாட்டில், மேலை நாட்டில், நாடு ஏற்றுக் கொண்டுள்ள மதத்திற்க்கு எதிராக யாராவது ஒரு வார்த்தை சொன்னால் போதும், அவன் மிகக் கொடூரமான வகையில் சமுதாயத்தைக் விட்டு விலக்கப்படுவான். அவர்கள் நமது ஜாதி முறைகளைப் பற்றிச் சரளமாக அதே வேளையில் நயமாகக் குறை கூறுவார்கள். நீங்கள் மேலைநாடுகளுக்குச் சென்று என்னைப்போல் அங்கே சில ஆண்டுகள் வாழ்ந்து பாருங்கள். மிகப் பெரிய பேராசிரியர்கள் என்று நீங்கள் கேள்விப்படுகின்ற சிலர் கூட மதத்தைப்பற்றித் தாங்கள்கொண்டுள்ள கருத்தில், நூற்றில் ஒரு பங்கைக்கூட வெளியே சொல்வதற்கு தைரியமில்லாத வடிக்கட்டின கோழைகளாக இருப்பதைக் காண்பீர்கள்.
இந்தச் சகிப்புத்தன்மை என்றும் மகோன்னதமான கருத்திற்காக உலகம் காத்திருக்கிறது. நாகரீகத்திற்கு அது ஒரு மகத்தான செல்வமாக விளங்கும்; அது மட்டுமல்ல இந்தக் கருத்தைக் ஏற்றுக்கொள்ளாமல் எந்த நாகரீகமும் நீண்ட காலம் வாழ முடியாது.வெறியும் ரத்த வெள்ளமும் கொடூரமும் நிறுத்தப்பட்டாலன்றி எந்த நாகரீகமும் வளர முடியாது. மனிதர்கள் ஒருவருக்கொருவரை அன்புணர்வுடன் அணுகாதவரை எந்த நாகரீகமும் தலை நிமிரவே முடியாது. மிகவும் தேவையான அந்த அன்புணர்வின் முதல் படி, பிற மதக் கருத்துக்களை அன்போடும் கனிவோடும் பார்ப்பதாகும் அன்புணர்வுடன் இருந்தால் மட்டும் போதாது, நமது மதக் கருத்துக்களை அன்போடும் கனிபோடும் பார்ப்பதாகும். அன்புணர்வுடன் இருந்தால் மட்டுமே போதாது, நமது மதக் கொள்கை களும் நம்பிக்கைளும் எவ்வளவுதான் வேறுபட்டதாக இருந்தாலும், அந்த மதங்களுக்கு ஊக்கத்துடன் உதவவும் வேண்டும். சற்றுமுன் நான் கூறியது போல் இந்தியாவில் அதையே இப்போது செய்து கொண்டிருக்கிறோம். இங்கே இந்தியாவில் தான் இந்துக்கள் கிறிஸ்தவர்களுக்கு சர்ச்சுகளும், முகமதியர்களுக்கு மசூதியும் கட்டித் தந்தனர்; இன்றும் கட்டித் தருகின்றனர். அது தான் செய்யப்பட்ட வேண்டிய, கொடூரங்கள் அவர்களின் கொடுமைகள் ஆதிக்க வெறி இவற்றிற்கு இடையிலும் நம்மைப்பற்றிப்பேசும் இழிவான பேச்சுக்களுக்கு இடையிலும், நாம் அவர்களை அன்பினால் வெற்றி கொள்ளும்வரை நிச்சயும் கிறிஸ்தவர்களுக்கு சர்ச்சுகளையும் முகமதியர்களுக்கு மசூதிகளையும் கட்டிக் கொடுப்போம்; கொடுத்துக்கொண்டே இருப்போம். அன்பு மட்டுமே நிலைக்கக்கூடிய ஒன்று வெறுப்பு அல்ல; மென்மைதான் நெடுங்காலம் வாழ்வதற்குரிய வலிமையையும் பலனையும் தரவல்லது அன்றி வெறும் காட்டுமிராண்டித்தனமோ உடம்பின் வலிமையோ அல்ல என்பதை உலகத்திற்கு நிரூபிக்கும் வரை நாம் இவ்வாறு செய்துகொண்டே இருக்க வேண்டும்.
நம்மிடமிருந்து இன்றைக்கு உலகம் பெற விரும்புகின்ற மற்றொரு மகத்தான கருத்து , உலகம் முழுமையின் ஆன்மிக ஒருமை ஐரோப்பாவின் சிந்தனையாளர்களுக்கு, இல்லை, இந்த உலகம் முழுவதற்க்கும் – உயர்ந்தோரைவிடப் பாமரருக்கு, படித்தவர்களைவிடப் படிக்காதவர்களுக்கு, பலசாலிகளை விடப் பலவீனருக்கு- தேவையானது இந்தக் கருத்தே. மேலை நாட்டின் தற்கால ஆராய்ச்சிகள்,தூல உப கரணங்கள் மூலமே பிரபஞ்சத்தின் ஒருமைப்பாட்டையும் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள எல்லாமே ஒன்றையொன்று சார்ந்திருப்பதையும் நிரூபித்துள்ளது. ஜடப் பொருட் கடலில் சின்னஞ்சிறு அலைகளாகவோ அலைத் தொகுதிகளாகவோ இருக்கிறோம்; அது போலவே உடம்பும் மனமும் ஜடப்பொருளாகிய கடலில் சின்னஞ்சிறு அலைகளே, அதாவது பெயர் வேறுபாடே என்பதை நெடுங்காலத்திற்கு முன்பே இந்திய மன இயல் காட்டியுள்ளது. வேதாந்தம் இதற்கும் ஒரு படி மேலாகச் சென்று, இந்த பிரபஞ்சத்தின் ஒருமைப் பாட்டுக் கருத்தின் பின்னணியில் மகத்தான, ஒன்றேயான உண்மை ஆன்மா இருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறது. இவற்றை யெல்லாம் சென்னைப் பல்கலைக் கழகப் பட்டதாரிகளாகிய உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே ஓர் ஆன்மாதான் உள்ளது. இருப்பவை எல்லாம் ஒன்றே.
பிரபஞ்சம் முழுமையின் இந்த அடிப்படை ஒருமைப்பாட்டுக் கருத்து இந்த நாட்டில் கூடப் பலரைப் பயமுறுத்தி இருக்கிறது. இன்றும் சில நேரங்களில் அந்தக் கருத்தை ஆதரிப்பவர்களைவிட எதிர்ப்பவர்களே அதிகம் உள்ளனர் என்றாலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; புத்துயிர் அளிக்கின்ற இந்த ஒரு மகத்தான கருத்தைத் தான் இன்றைக்கு உலகம் நம்மிடம் வேண்டி நிற்கிறது. தங்கள் உரிமைக்காக குரல் எழுப்ப முடியாத பாமர மக்களின் விடிவிற்கு இந்தக் கருத்து தான் தேவை. அனைத்தின் இந்த ஒருமைப்பாட்டுக் கருத்தை நடைமுறையிலும் அன்றாட வாழ்க்கையிலும் செயல்படுத்தாமல் யாராலும் நமது நாட்டில் முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியாது.
எதையும் ஆராய்ச்சிக் கண்ணுடன் அணுகுகின்ற மேலைநாடு தன் தத்துவம், நீதிநெறி முதலிய அனைத்திற்கும் ஆதாரமான பகுத்தறிவை ஆர்வத்துடன் தேடுகிறது. எவ்வளவு மகத்தானவர்களாக இருந்தாலும் தெய்வீகமானவர்களாக இருந்தாலும், ஒரு தனிமனிதனின் ஒப்புதலினால் மட்டுமே நீதி நெறியை உண்டாக்க முடியாது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும் நீதிநெறிக்கு இத்தகைய ஆதாரத்தை உலகின் சிந்தனையாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நீதி நெறியும் ஒழுக்க விதிகளும் மக்களைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், மனித ஆதாரத்தைவிடச் சற்று மேலான ஆதாரம் ஏதாவது வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். நிரந்தரமான சில உண்மையிலிருந்து அல்லாமல் அந்த எல்லையற்ற ஒரே உண்மையிலிருந்து அல்லாமல் அந்த நிரந;ஞூதர ஆதாரத்தை வேறு எங்கே காண முடியும்? ஆன்மாவின் எல்லையற்ற ஒருமையே எல்லா ஒழுக்க விதிகளின் ஆதாரமாகும். மனிதனின் முக்கிக்கான போராட்டத்தைப்பற்றிச் சொல்கின்ற ஒவ்வொரு நாலும் சகோதரர்கள் என்பது மட்டுமல்ல, உண்மையில் நீங்ககளும் நானும் ஒன்றே. இதுதான் இந்தியத் தத்துவத்தின் ஆணித் தரமான கருத்து இந்த ஒருமைதான் எல்லா நீதி நெறிக்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படை இது நமது பாமர மக்களுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவையோ, அவ்வுளவு அவமசரமாக ஐரோப்பியர்களுக்க தேவைப்படுகிறது. இங்கிலாந்திலும் பிரான்சிலும் அமெரிக்காவிலும் இன்று உருவாகி வருகின்ற நவீன அரசியல் மற்றும் சமுதாய மலர்ச்சிகளுக்கு, அவர்கள் அறியாமலே, இந்த மகத்தான கருத்துதான் அடிப்படையாக இருக்கிறது.
நண்பர்களே, நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். தனிமனித முக்திக்காகவும், சர்வ முக்திக்காகவும் மனிதனின் போராட்டதைப்பற்றிக் கூறுகின்ற எல்லா நூல்களிலிலும் இந்திய வேதாந்தக் கருத்துக்கள் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றை எழுதியவர்களுள் சிலருக்கு தாங்கள் எழுதியள்ளவற்றின் மூலகாரணம் எது என்பது தெரியவில்லை. சிலரோ அவை தங்கள் சொந்தக் கருத்துக்கள் போல் தோன்றுகின்ற அளவிற்கு எழுதியுள்ளனர். தைரியமும் நன்றியுணர்வும் கொண்ட ஒரு சிலர் மட்டுமே மூல நூலைக் குறிப்பிட்டுத் தங்கள் நன்றியைச் செலுத்தியுள்ளனர்.
நான் அளவுக்கு அதிகமாக அத்வைதத்தைப் போதிப்பதாகவும் பக்தியைப் பற்றிக் குறைவாகவே கூறுவதாகவும் குற்றம் சாட்டப்படுவதை அமெரிக்காவில் இருந்தபோது கேள்விப்பட்டேன். துவைத நெறிகளிலம் உள்ள பிரேம பக்தியும் பரவச நிலைகளும் அவை தருகின்ற எல்லையற்ற ஆனந்தமும் எனக்கு நன்றாகவே தெரியும். அவை எல்லாவற்றையுமே நான் அறிவேன். ஆனால் நமக்கு இது அழுவதற்கான நேரமல்ல ஆனந்தக் கண்ணீர்கூட இப்போது கூடாது. போதுமான அளவு நாம் அழுதாயிற்று. மென்மையானவர்கள் ஆவதற்க்கு இது தருணம் அல்ல . மென்மை மென்மை என்று நாம் வெறும் பஞ்சுப் பொதிகளாகி விட்டோம், பிணங்களாக மாறிவிட்டோம். நமது நாட்டிற்கு வேண்டுவது இரும்பாலான தசையும், எஃகாலான நரம்புகளும், அவற்றுடன் இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளையும் ரகசியங்களையும் ஊடுருவிப் பார்க்கவும், அவசியமானால் அதற்ககக் கடலின் அடியாழம் வரை சென்று மரணத்தையும் நேருக்கு நேராகச் தடுக்க முடியாததான சங்கல்பமும் தான் நமக்கு இப்போது தேவை. நமக்குத் தேவையானது இது தான். இதனை உருவாக்கி நிலைநிறுத்தி பலப்படுத்த, லட்சியத்தை நன்குணர்ந்து, அதனை அனுபவத்தில் கொண்டு வருவதால்தான் முடியும்.
நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடம் நம்பிக்கை, நம்பிக்கை, இறைவனிடம் நம்பிக்கை. இதுவே மனோன்னதத்தின் ரகசியம். உங்களுடைய புராண தெய்வங்கள் முப்பத்து முக்கோடிபேரிடமும், வெளிநாட்டினர் அவ்வப்போது உங்களிடமே திணிக்கின்ற அனைத்து தெய்வங்களிடமும் நம்பிக்கை வைத்து, அதே வேளையில் உங்களுக்குக் கதிமோட்சமில்லை. உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். அந்த நம்பிக் கையை ஆதாரமாகக் கொண்டு எழுந்து நில்லுங்கள் வலிமை உடையவர்களாக இருங்கள். நமக்குத் தேவைப்படுவது இதுதான்.
வருவோரும் போவோருமான விரல்விட்டு எண்ணக்கூடிய அன்னியர் முப்பத்து மூன்று கோடி மக்களாகிய நம்மை மதித்து அரசாளக் காரணம் என்ன? அவர்களுக்குத் தன்னம்பிக்கை இருந்து, நமக்கு இல்லை. மேலைநாட்டில் நான் என்ன கற்றுக்கொண்டேன்? மனிதன்பாவி, இழிந்தவன் என்று திருப்பித்திருப்பிச்சொல்கின்றன கிறிஸ்தவ மதப் பிரிவுகளின் வெற்று உபதேசங்களுக்குப் பின்னால் நான் கண்டது என்ன? மனிதர்கள் தங்களிடமே கொண்டுள்ள நம்பிக்கையாகிய மாபெரும் சக்தி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தேசிய நீரோட்டத்தின் மையத்தில் ததும்பி நிற்பது தான் எனக்குத் தெரிந்தது. நான் ஆங்கிலேயன் என்னால் எதையும் செய்ய முடியும் என்றே ஆங்கிலேயச் சிறுவன் ஒருவன் சொல்வான், அமெரிக்கச் சிறுவனும் இதையே சொல்வான், ஐரோப்பாவிலுள்ள எந்தச் சிறுவனும் இதையே தான் சொல்வான் . ஆனால் இங்குள்ள நம் சிறுவர்கள் இதைச் சொல்வார்களா ? மாட்டார்கள். சிறுவர்கள் ஏன் அவர்களின் தந்தையரே சொல்ல மாட்டார்கள். நாம் தன்னம்பிக்கையை இழந்து விட்டோம். எனவே தங்கள் சொந்த ஆன்மாவின் மகிமையை மக்களுக்குக் காட்டுவதற்கும் அவர்களுடைய இதயத்தில் உறைந்துள்ள ஆற்றலைக் கிளார்ந்தெயச் செய்வதற்கும் வேதாந்தத்தின் அத்வைதக் கருத்தை உபதேசித்தேயாக வேண்டும், அதனால் தான் நான் அத்வைதத்தை எடுத்துக் கூறினேன். வேதாந்த மதத்தைச் சாந்தவன் என்ற ஒரு பிரிவு மனப்பான்மையுடன் அதை நான் கூறவில்லை. அது மிகப்பரந்த அளவில் உலகம் முழுவதிலும் ஒப்புக்கொள்ளப்படுவதான ஒன்று என்பதால் தான் அதை நான் கூறினேன்.
துவைதியையோ விசிஷ்டாத்வைதியையோ வருத்த முறச் செய்யாமல் எளிதாக ஓர் இணைப்பு வழியைக் கண்டறிய முடியும். கடவுள் நம்முள் இருக்கிறார், எல்லாவற்றிலும் தெய்வீகம் உறைகிறது என்ற கொள்கை இல்லாத ஒரு நெறிகூட இந்தியாவில் இல்லை. தூய்மையும் பூரணத்துவமும் வலிமையும் எல்லாமே நம் ஆன்மாவில் முழுமையாக இருக்கிறது என்பதை எல்லா வேதாந்த நெறிகளும் ஏற்றுக் கொள்கின்றன. இந்தப் பூராணத்துவம் சில வேளைகளில் சுருங்குவது போலவும் சில நேரங்களில் விரிவது போலவும் ஆகிறது, ஆனாலும் அது இருக்கவே செய்கிறது என்று வேதாந்தத்தின் சில நெறிகள் கூறுகின்றன. அத்வைதத்தின்படி அது சுருங்குவதும் இல்லை விரிவதும் இல்லை; அவ்வப்போது மறைக்கப்படவும் மீண்டும் மறைப்பு விலக்கப்படவும் செய்கிறது. ஏறக்குறைய விஷயம் ஒன்றுதான். ஒன்று மற்றொன்றை விடச் சற்று தர்க்கரீதியானதாக இருக்கலாம், ஆனால் விளைவும் நடைமுறை விளக்கங்களும் ஒன்றுபோலவே உள்ளன இந்த ஒரு முக்கியக் கருத்தே இப்போது உலகத்திற்குத் தேவையாக உள்ளது; மற்ற இடங்களைவிட நம் தாய் நாட்டிற்குத்தான் இதன் தேவை அதிகமாக உள்ளது.
நண்பர்களே, வருத்தம் தரக்கூடிய சில உண்மைகளை உங்களுக்கு சொல்லியே ஆக வேண்டும். நம் இந்தியன் ஒருவன் ஓர் ஆங்கிலேயனால் கொலை செய்யப்பட்டான் என்றோ கேவலமாக நடத்தப்பட்டான் என்றோ பத்திரிக்கையில் வருகிறது. உடனே நம் நாடு முழுதும் கூக்குரல்கள் எழுகின்றன . நானும் படிக்கிறேன், அழுகிறேன். அடுத்த வினாடியே இதற்கெல்லாம் யார் பொறுப்பு என்ற கேள்வி என் மனத்தில் எழுகிறது. ஒரு வேதாந்தி என்ற முறையில் எனக்குள்ளே இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்க என்னால் முடியாது. இந்து தனக்குள் மூழ்குபவன். அவன் தனக்குள்ளும் தன் மூலமும், தன்னை அடிப்படையாகக் கொண்டும் எதையும் பார்க்க விரும்புகிறோன். எனவே என்னையே நான் கேட்டுக்கொள்கிறோன் இதற்கு யார் பொறுப்பு? எனக்கு ஒவ்வொரு முறையும் கிடைக்கின்ற பதில் இதுதான்; ஆங்கிலேயர்கள் அல்ல, அவர்கள் பொறுப்பல்ல; நமது எல்லா துன்பங்களுக்கும் எல்லா இழிவுகளுக்கும் நாம், நாம் மட்டுமே பொறுப்பாளிகள்.
பிரபுத்துவ வெறி பிடித்த நமது முன்னோர்கள் இந்த நாட்டுப் பாமர மக்களைத் தங்கள் காலின் கீழிட்டு மிதித்துக் கொடுமைப்படுத்தினார்கள். பாவம் அவர்களுக்கு எந்த உதவியும் இல்லை. காலப்போக்கில் அந்த ஏழைகள் தாங்கள் மனிதர்கள் என்பதையே மறந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் பல நாற்றாண்டுகளாக அவர்கள் வெறும் விறகுவெட்டிகளாகவும் தண்ணீர் இறைப்பவர்களாகவுமே வாழ்வதற்குக் கட்டாயபடுத்தப்பட்டார்கள். விளைவு அவர்களை தங்களை பிறவி அடிமைகள் என்றும் விறகு வெட்டவும் தண்ணீர் இறைக்கவும் மட்டுமே பிறந்தவர்கள் என்றும் நம்பவே தொடங்கி விட்டார்கள். பெருமையடித்துக் கொள்கிறோம். ஆனால் யாராவது அவர்களுக்குப் பரிந்து ஒரு வார்த்தை சொன்னாலும், தாழ்த்தப்பட்ட அந்த அப்பாவிகளைக் கைதூக்கி விடுவதான கடமையை விட்டுவிட்டு, நம் மக்கள் பின்வாங்குவதையே நான் காண்கிறேன். முட்டாள்தனமான சில பரம்பரைக் காரணங்கள், அவை போன்ற சில மேலை நாட்டு உளறல்கள் , இவற்றிலிருந்தே சில காட்டுமிராண்டிகள், மிருகத்தனமான, மிருகத்தனமான வாதங்கள் இவையெல்லாம் அந்த ஏழைகளை மேலும் அடங்கி ஒடுக்குவதற்காக முன்வைக்கப்படுகின்றன.
அமெரிக்காவில் சர்வசமயப் பேரவையில் நீக்ரோ இளைஞன் ஒருவன் கலந்து கொண்டான். உண்மையான ஆப்ரிக்க நீக்ரோ அவன். அழகாகப் பேசினான். எனவே அவனிடம் பேச வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அவனிடம் அவ்வப்போது பேசினேன். ஆயினும் அவனைப் பற்றி எதையும் தெரிந்துகொள்ள முடியவில்லை ஒரு முறை இங்கிலாந்தில் இருந்தபோது சில அமெரிக்கர்களைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் அவனைப்பற்றிக் கீழ்வரும் செய்திகளைச் சொன்னார்கள். அந்த இளைஞன் மத்திய ஆப்ரிக்காவில் வாழ்ந்த ஒரு நீக்ரோ இனத்தலைவனின் மகன். ஒருநாள் மற்றோர் இனத்தின் தலைவன் அந்த இளைஞனின் தந்தை மீது கோபம் கொண்டு அவனது தந்தையையும் தாயையும் கொன்று விட்டான் . கொன்றதுடன் தின்றும் விட்டான். குழந்தையையும் கொன்று சமைக்கக் கட்டளையிட்டான் அவன். ஆனால் சிறுவன் தப்பிவிட்டான் பல பயங்கரமாக இன்னல்களை அனுபவித்து, பல நூறு மைல்கள் பயணம் செய்து கடற்கரையை அடைந்தான். பின்னர் அமெரிக்காக் கப்பல் ஒன்றில் அமெரிக்கா கொண்டு வரப்பட்டான். அந்தப் பையன் தான் அவ்வளவு சிறப்பாக உரையாற்றினான். அதை கேட்ட பிறகு உங்கள் பரம்பரை வாதத்தைப்பற்றி என்னதான் எண்ண இருக்கிறது?
ஏ பிராமணர்களே, பரம்பரை காரணமாக பிராமணர்களுக்குக் கீழ் ஜாதியினரைவிட நன்றாகப் படிக்கின்ற திறமை இருக்கிறது என்றால் பிராமணர்களின் படிப்பிற்கு எந்தப் பணமும் இனி செலவழிக்காதீர்கள்; எல்லாவற்றையும் கீழ் ஜாதியினருக்காகச் செலவிடுங்கள். உதவியற்றவர்களுக்கு கொடுங்கள், ஏனெனில் அவர்களுக்குதான் எல்லா செல்வமும் தேவைப்படுகிறது. பிராமணன் பிறவியிலேயே அறிவாளி அல்லாத பிறர் எல்லா போதனைகளையும் ஆசிரியர்களையும் பெறட்டும். இதுதான் நான் புரிந்து கொண்ட நீதியும் பகுத்தறிவுமாகும்.
நமது ஏழைகளும் தாழ்த்தப்பட்ட இந்தப் பாமர ஜனங்களும்தான் உண்மையில் தாங்கள் யார் என்பதைக் கேட்கவும் அறிந்து கொள்ளவும் வேண்டியிருக்கின்றது. ஜாதி, குலம், பலம், பலவீனம் போன்ற எவ்வித பாகுபாடுமின்றி ஒவ்வோர் ஆணும் பெண்ணும் குழந்தையும் இதைக் கேட்கட்டும்; வலிமையானவர் வலிமையற்றவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் ஆன்மா உள்ளது மகத்தானவர்களாக மேலோர்களாக ஒவ்வொருவரும் மாறுவதற்கான எல்லையற்ற வாய்ப்பும் எல்லையற்ற ஆற்றலும் அந்த ஆன்மாவில் உள்ளது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும்‘உத்திஷ்டத! ஜாக்ரத! ப்ராப்ய வரான் நிபோதத!’ எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! லட்சியத்தை அடையும்வரை நில்லாமல் செல்லுங்கள்! என்று ஒவ்வொருவரிடமும் முழங்குவோம். விழித்திருங்கள், பலவீனமாகிய இந்த மனவசியத்திலிருந்து விடுபட்டெழுங்கள். உண்மையில் யாரும் பலவீனர் இல்லை. ஆன்மா எல்லையற்றது எல்லா ஆற்றலகளும் உடையது எல்லாம் அறிந்து எழுந்த நில்லுங்கள், உங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், உங்களுள் உறைகின்ற இறைவனை வெளிப்படுத்துங்கள், அவரை மறுக்காதீர்கள்.
அளவுக்கு அதிகமான சோம்பல் அளவை மீறிய பலவீனம், ஆழ்ந்த மனவசியம் இவை நம் இனத்தின் மீது படிந்துள்ளது, படிந்தவண்ணம் உள்ளது. ஓ தற்கால இந்துக்களே, மனவசியத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். அதற்கான வழி உங்கள் சாஸ்திரங்களில் உள்ளது. அதைப் படியுங்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் உண்மை இயல்பைப் போதியுங்கள். உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள், அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும் பெருமை வரும், நன்மை வரும் தூய்மை வரும், எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும். கீதையில் நான் விரும்பும் பகுதி ஏதாவது ஒன்று இருக்கிறது என்றால், அதன் சாரமாகவும் சுருக்கமாகவும் உள்ள கண்ணனின் இந்த இரண்டு சுலோகங்கள்தாம்- யார் எல்லா உயிர்களிலும் பரம்பொருளாய் சமமாக உறைவதைக் காண்கிறானோ, அழிகின்ற பொருட்களில் அழியாதவரான இறைவனைக் காண்கிறானோ அவனே உண்மையில் காண்கிறான். ஏனெனில் எங்கும் இறைவன் சமமாக உறைவதைக் காண்பவன் ஆன்மாவை ஆன்மாவால் அழிக்க மாட்டான். இவ்வாறு அவன் உயர் லட்சியத்தை அடைகிறான்.
இங்கும் இதர நாடுகளிலும் வேதாந்தத்தின் மூலம் பயனுள்ள காரியங்கள் செய்வதற்கு இவ்வாறு மகத் தான வாய்ப்பு உள்ளது. மனித இன வளர்ச்சிக்காகவும் மேன்மைக்காகவும் இந்த அற்புதக் கருத்தை, ஆன்மா ஒன்றே, அது எங்கும் நிறைந்தது என்பதான அற்புதக் கருத்தை இங்கும் பிற இடங்களிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும் எங்கெல்லாம் தீமை இருக்கிறதோ, எங்கெல்லாம் அறியாமை நிலவுகிறதோ அஞ்ஞானம் உள்ளதோ அங்கெல்லாம் அவற்றிற்கு மூலகாரணமாகக் காணப்படுவது வேறுபாட்டு உணர்ச்சிகளே. சமத்துவம், பொருட்களின் அடிப்படையாகத் திகழ்கின்ற சமநிலை மற்றும் ஒருமைப்பாடு – இவற்றின் மீதுள்ள நம்பிக்கையிலிருந்தே எல்லா நன்மைகளும் பிறக்கின்றன. நம் சாஸ்திரங்கள் இவ்வாறே கூறுகின்றன. என அனு பவமும் இதையே சொல்கிறது இதுவே வேதாந்தத்தின் மகத்தான லட்சியம். ஒரு லட்சியத்தைக் கொள்வது என்பது ஒன்று, அதனை அன்றாட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நடைமுறையில் கடைபிடிப்பது என்பது முற்றிலும் வேறான ஒன்று ஒரு லட்சியத் தைக் காட்டுவது, மிகவும் நல்லதுதான் ஆனால் அதை அடைவதற்க்கு உரிய செயல்முறை எங்கே இருக்கிறது?
பல நூற்றாண்டுகளாகவே நம் மக்களின் மனத்தை ஆக்கிரமித்திருப்பவையும் வெறுப்டையச் செய்து. வருபவையுமான ஜாதி மற்றும் சமூகச் சீர்திருத்தம் பற்றிய கடினமான சில கேள்விகள் இந்த இடத்தில் இயல்பாகவே எழுகின்றன. நான் ஜாதிகளை உடைப்பவனோ, வெறும் சமூகச் சீர்திருத்தவாதியோ அல்ல என்பதை வெளிப்படையாக உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் ஜாதிகளிலோ சமூகச் சீர்த்திருத்தத்திலோ நேரடியாக எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. நீங்கள் ஜாதியைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் அதற்காக ஏன் மற்றொருவனை, மற்றொரு ஜாதியை நீங்கள் வெறுக்க வேண்டும்? நான் போதிப்பது அன்பு, அன்பு ஒன்றை மட்டுமே. பிரபஞ்சம் முழுவதன் ஆன்மா ஒன்றே, அது எங்கும் நிறைந்தது என்ற மகத்தான வேதாந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டுதான் நான் பிரச்சாரம் செய்கிறேன்.
ஏறக்குறைய கடந்த நூறு ஆண்டுகளாக நமது நாடு சமூகச் சீர்திருத்தவாதிகளாலும் பல வகையான சமுதாயச் சீர்திருத்தத் திட்டங்களாலும் மூழ்கடிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சீர்திருத்தவாதிகளிடம் என்னால் தவறு எதையும் காண முடியவில்லை. அவர்களுள் பெரும்பாலானோர் நல்லவர்கள், தெளிவான சிந்தனையுடையவர்கள், சில விஷயங்களில் அவர்களது நோக்கங்கள் கூடப் பாராட்டத் தக்கவையாகவே உள்ளன. அதேவேளையில், இந்த நூறு ஆண்டுகளின் சமுதாயச் சீர்த்திருத்தம் உருப்படியான, பாரட்டத்தக்க, நிலையான எந்த விளைவையும் இந்த நாட்டில் எங்குமே தோற்று விக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆயிரக் கணக்கானோர் மேடையில் முழங்குகிறார்கள். அப்பாவியான இந்து இனத்தின் மீதும் அதன் நாகரிகத்தின் மீதும் மூட்டை மூட்டையாகக் கண்டனங்கள் சுமத்தப்படுகின்றன. ஆனாலும் நடைமுறையில் எந்த நல்ல பலனையும் காணோம். ஏன் ? இதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. அது அவர்களின் கண்டனத்திலேயே உள்ளது. நான் முன்பு கூறியது போல், முதலில் காலங்காலமாக நாம் பெற்று வந்துள்ள நமது நாட்டின் பண்பைக் பாதுகாக்க முயல வேண்டும் . பிற நாடுகளிலிருந்து பல விஷயங்களை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும், வெளியிலிருந்து பல பாடங்களை நாம் கற்றாக வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறோன். ஆனால் பெரும்பாலான நமது நவீனச் சீர்த்திருத்த இயக்கங்கள் சிறிதும் சிந்திக்காமல் மேலை முறைகளைக் காப்பியடிப்பவைகளாக உள்ளன. இது இந்தியாவிற்கு ஏற்றதல்ல என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதனால்தான் நமது சமீப காலச் சீர்த்திருத்த இயக்கங்கள் எதுவும் எந்தப் பலனையும் அளிக்கவில்லை
இரண்டாவதாக, கண்டனம் ஒருபோதும் நன்மை செய்வதற்கான வழியல்ல. நம்முடைய சமூகத்தில் சில கேடுகள் இருக்கின்றன, இதை ஒரு குழந்தையாலும் காண முடியும். எந்தச் சமூகத்தில்தான் தீமைகள் இல்லை? என் நாட்டு மக்களே, நான் பார்த்த பல்வேறு இன மற்றும் நாட்டு மக்களோடு, நம் மக்களை ஒப்பிட்டபின் நான் கண்ட முடிவை இந்த வேளையில் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். என்னவென்றால், நம் மக்களே எல்லோரையும் விட மிகவும் ஒழுக்கம் வாய்ந்தவர்கள், மிகவும் தெய்வீக மானவர்கள். நமது சமுதாய அமைப்புக்களே மனித குலத்தை மகிழ்ச்சிகரமாக்க, அமைப்பிலும் நோக்கத்திலும் மிகவும் பொருத்தமானவை. எனவே நான் எந்த சீர்திருத்தத்தையும் விரும்பவில்லை. எனது லட்சியம் வளர்ச்சி, விரிவு, தேசியப் பாதையில் முன்னேற்றம். நம் நாட்டின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது, இந்த உலகம் முழுவதிலும் எந்த நாடும் இதைப்போல மனித மனத்தின் வளர்ச்சிக்காக அதிகமான காரியங்களைச் செய்யவில்லை என்பதைக் நாம் காண முடியும். எனவே என் நாட்டை நிந்திக்கும் எந்த வார்த்தையும் என்னிடம் இல்லை. அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், நீங்கள் நன்றாகச் செய்திருக்கிறீர்கள், இன்னும் நன்றாகச் செய்ய முயலுங்கள் என்பது தான். இந்த நாட்டில் மகத்தான காரியங்கள் கடந்த காலத்தில் செய்யப்பட்டுள்ளன. அதைவிடச் சிறப்பான காரியங்களைச் செய்வதற்கான நேரமும் வாய்ப்பும் இப்போது உள்ளது. எதுவும் செய்யாமல் நம்மால் இருக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியும் என்பது உறுதி. எதுவும் செய்யாமலிருந்தால் செத்துப்போவோம். ஒன்று நாம் முன்னே செல்ல வேண்டும் அல்லது பின்னே செல்ல வேண்டும்; முன்னேற வேண்டும் அல்லது வீழ்ச்சி அடைய வேண்டும். கடந்த காலத்தில் நம் முன்னோர்கள் மகத்தான காரியங்களைச் செய்தார்கள். நாமும் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து, அவர்கள் செய்ததை விட மகத்தான சாதிக்க வேண்டும் . இந்த நிலையில் நம்மால் எப்படிப் பின்னே சென்று நம்மை நம்மையே இழிவுபடுத்திக் கொள்ள முடியும்? அது முடியாது, அப்படிச் செய்யவும் கூடாது. பின்னால் செல்வது என்பது இந்த நாட்டை நாசத்திற்க்கும் மரணத்திற்க்குமே அழைத்துச் செல்லும். எனவே முன்னேறிச் செல்வோம் மகத்தான காரியங்களைச் செய்வோம். நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது இதுதான்.
அவ்வப்போதைய தேவைகளை மட்டும் நிறை வேற்றுவதான சமூகச் சீர்த்திருத்தத்தைப் போதிக்கின்ற பிரசாரகன் அல்ல நான். தீமைகளை நீக்குவதற்கும் நான் முயலவில்லை , ஆனால் மனித இனத்தின் முன்னேற்றத்திற்காக நமது முன்னோர்கள் மிகவும் சிறப்பாக வகுத்துத் தந்துள்ள திட்டத்தைச் செயல்படுத்த முனைந்து முன் செல்ல வேண்டும் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். மனிதனின் சார்புத்தன்மை மற்றும் அவனது தெய்வீக இயல்பு போன்ற வேதாந்த லட்சியத்தை உணர்ந்துகொள்ளப் பாடுபட வேண்டும் என்று மட்டும்தான் கூறுகிறேன்.
எனக்கு நேரம் இருந்திருந்தால், நாம் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைச் சட்டங்களை வகுத்துத் தந்த நமது முன்னோர்கள் எப்படி பல்லாண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளார்கள், நமது தேசிய அமைப்புகளில் இதுவரை நிகழ்ந்துள்ள மாற்றங்களையும் இனி வரப் போகின்ற மாற்றங்களையும் எப்படி அன்றே உணர்ந்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் மகிழ்ச்சியுடன் எடுத்துச் சொல்லியிருப்பேன். அவர்களும் ஜாதியை ஒழிக்வே விரும்பினார்கள். ஆனால் அவர்கள் தற்கால மனிதர்களைப் போன்றவர்கள் அல்ல. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் அதற்காக, நகர மக்கள் அனைவரும் ஓர் இடத்தில் திரண்டு, எல்லோரும் மதுவும் மாட்டிறைச்சியுமாக விருந்துண்டுகளிக்க வேண்டும்; முட்டாள்களும் பைத்தியங்களும், அவர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்துகொண்டு இந்த நாட்டை ஒரு பைத்தியக்கார விடுதியாக மாற்ற வேண்டும் என்றெல்லாம் அவர்கள் கூறவும் இல்லை. அவ்வாறு வளம் பெற்ற ஒரு நாட்டை நான் இனிதான் காண வேண்டும்.
நம் முன்னோர்களின் லட்சிய மனிதனாகத் திகழ்ந்தவன் பிராமணன். நம் சாஸ்திரங்களிலும் இந்த பிராமணன். நம் சாஸ்திரங்களிலும் இந்த பிராமண லட்சியம் சிறப்பாகக் காணப்படுகிறது. ஐரோப்பாவின் கார்டினல் பிரபு தன் முன்னோர்கள் மேன்மையானவர்கள் என்பதை நிரூபிக்க எவ்வளவே சிரமப்பட்டு ஆயிரமாயிரம் பணத்தைச் செலவழிக்கிறார். இறுதியில் அந்த முன்னோர்கள் ஏதோ ஒரு மலையில் வாழ்ந்து, வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் யாத்திரீகர்களைக் கொள்ளையடித்து வாழ்ந்த சில கொடுங்கோலர்கள் என்பதை அறியும்வரை அமைதி அடையமாட்டார். மேலை நாட்டின் மேன்மை மிக்க முன்னோர்களின் தொழில் இதுதான். ஆனால் கார்டினல் பிரபுவுக்கோ இவர்களிலிருந்தே தன் பரம்பரை வந்துள்ளது என்பதை அறிந்தால் தான் திருப்தி. மாறாக இந்தியாவிலோ, கோவணம் அணிந்து, காடுகளில் வாழ்ந்து, கிழங்குகளை உண்டு, வேதங்களை ஓதிய ஏதோ ஒரு ரிஷியின் சந்ததியாக இருப்பதையே பேரரசர்களும் விரும்புவார்கள். அங்கு தான் இந்திய மன்னர்கள் தங்கள் பாரம்பரியத்தை தேடினார்கள். உங்கள் பரம்பரை ஒரு ரிஷியிடமிருந்து தொடங்குமானால் நீங்கள் உயர்ந்த ஜாதியினர், இல்லை யென்றால் உயர்ந்த ஜாதியினர் அல்ல.
எனவே உயர்குலப் பிறப்பைப் பற்றிய நமது லட்சியம் மற்றவர்களிலிருந்து வேறானது. ஆன்மிகப் பண்பாடும் துறவும் கொண்ட பிராமணனே நமது லட்சியம். பிராமண லட்சியம் என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன்? உலகியல் சிறிதும் இல்லாத உண்மை அறிவு வளம் மிக்க பிராமணத்துவத்தையே நான் கூறுகிறேன். இதுதான் இந்து இனத்தின் லட்சியம். பிராமணன் சட்டத்திற்குக் கட்டுபட்டவனல்ல அவனுக்கு சட்டமே இல்லை, அவன் அரசனுடைய ஆளுகைக்கு உட்பட்டவனல்ல, அவனை யாரும் துன்புறுத்தக் கூடாது என்றெல்லாம் நமது நீதி நூல்கள் கூறுவதை நீங்கள் கேட்டதில்லையா? அது முற்றிலும் உண்மை . சுயநலமிக்க முட்டாள்களின் விளக்கத்தின்படி இதனை நீங்கள் புரிந்து கொள்ளக் கூடாது, வேதாந்தத்தின் உண்மையான ஆதாரபூர்வமான விளக்கத்தின்படி புரிந்துகொள்ள வேண்டும் அறிவையும் அன்பின் ஆற்றலையும் பெறுவதிலும், அதைப் பரப்புவதிலும் முனைந்து ஈடுபடுபவனாகவும், சுயநலம் என்பதே இல்லாதவனாகவும் இருப்பவனே பிராமணன் என்றால் பொதுநலமும் ஆன்மீகமும் நல்லொழுக்கமும் நற்பண்புகளும் இத்தகைய ஆண்களும் பெண்களுமாகிய பிராமணர்கள் மட்டுமே ஒரு நாட்டில் வாழ்வார்கள் என்றால், அந்த நாட்டைச் சட்டங்களுக்குக் கட்டுப்படாததாகவும் கருதுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? அவர்களை ஆள போலீசோ ராணுவமோ எதற்கு? அவர்களை ஏன் ஒருவர் ஆட்சி செய்ய வேண்டும்? அவர்கள் நல்லவர்கள், சான்றோர்கள், மனித தெய்வங்கள். இவர்கள்தான் நமது லட்சிய பிராமணர்கள்.
சத்திய யுகத்தில் ஒரே ஒரு ஜாதிதான் இருந்ததாகவும் அந்த ஒரே ஜாதி பிராமண ஜாதியே என்றும் சாஸ்திரங்களில் நாம் படிக்கிறோம். ஆரம்பக் காலத்தில் உலகம் முழுவதிலும் பிராமணர்கள் மட்டுமே இருந்தார்கள் அவர்கள் இழிவடைய ஆரம்பித்த பின்னரே பல்வேறு ஜாதிகளாகப் பிரிந்தனர், இந்தச் சுழற்சி ஒரு சுற்று முடியும்போது எல்லோரும் மீண்டும் பிராமணர்களாகி விடுவர் என்று மகாபாரதத்தில் படிக்கிறோம். இந்த யுகச் சுழற்ச்சி இப்போது ஒரு சுற்றை நிறைவு செய்யும் நிலையில் உள்ளது. இந்த விஷயத்தில் நீங்கள் கவனம் கொள்ளுமாறு வேண்டுகிறேன். எனவே உயர்ந்த நிலையில் இருப்போரைக் கீழ்நிலைக்கு இழுப்பதோ, குடித்துக் கும்மாளம் அடிப்பதோ, அதிக போகத்தை நாடி எல்லை மீறிக் குதிப்பதோ ஜாதிப் பிரச்சனைக்கான நமது தீர்வு அல்ல நாம் ஒவ்வொரு வரும் ஆன்மீகத்தை நாட வேண்டும் வேதாந்த மதத்தின் நியதிகளைக் கடைபிடிக்க வேண்டும், லட்சிய பிராமணர்களாக வேண்டும். ஜாதிப் பிரச்சனைக்குத் தீர்வு இவ்வாறுதான் ஏற்பட முடியும்.
நீங்கள் ஆசிரியர்களோ, ஆசியர் அல்லாதவர்களோ ரிஷிகளோ பிராமணர்களோ, மிகவும் தாழ்த்தப்பட்ட ஜாதியினரோ யாராக இருந்தாலும் இந்த நாட்டில் உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் முன்னோர்கள் ஒரு நியதியை வகுத்து வைத்துள்ளனர். உங்கள் அனைவருக்கும் நியதி, ஆணை ஒன்றுதான் – மிக உயர்நிலை மனிதனிலிருந்து மிகவும் கீழான நிலையில் இருப்பவன்வரை இந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முயன்று, நில்லாமல் முன்னேரி லட்சிய பிராமணன் ஆக வேண்டும். இந்த வேதாந்தக் கருத்து நமது நாட்டிற்க்கு மட்டுமல்ல உலகிற்கே ஏற்புடைய ஒன்றாகும் அஹிம்சையில் வேரூன்றிய, அமைதியான, உறுதியான வணங்கத்தக்க, தூய்மையான தியான நிலையில் திளைக்கின்ற ஓர் ஆன்மீக மனிதன் என்ற உயர் லட்சியத்திற்க்கு மனித குலத்தையே நிதானமாகவும் மென்மையாகவும் உயர்த்துவதே ஜாதி பற்றிய நமது லட்சியமாகும். இந்த லட்சியத்தில் இறைவன் குடி கொள்கிறார்.
இவற்றையெல்லாம் செய்வது எப்படி? சபிப்பதாலும் கேவலப்படுத்துவதாலும் நிந்திப்பதாலும் எந்த நல்ல விளைவையும் கொண்டுவர முடியாது என்பதைக் நான் உங்களுக்கு அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். இந்த வழிகளில் எல்லாம் ஆண்டுக்கணக்காக முயற்சி செய்தாகிவிட்டது. குறிப்பிடத்தக்க எந்த விளைவும் கிடைக்கவில்லை. அன்பு, கனிவு இவற்றின் மூலமே நன்மை உண்டாக முடியும். இத ஒரு மகத்தான விஷயம். இது சம்பந்தமான எனது திட்டங்களையும் இது பற்றி என் மனத்தில் நாள்தோறும் தோன்றிக் கொண்டிருக்கின்ற கருத்துக்களையும் உங்களிடம் சொல்வதென்றால் அதற்க்கு பல சொற்பொழிவுகள் நிகழ்த்த வேண்டியிருக்கும்.
எனவே ஓர் உண்மையை மட்டும் நினைவுபடுத்தி, எனது சொற்பொழிவை நிறைவு செய்கிறேன். இந்துக்களே, நமது நாடாகிய இந்தக் கப்பல் காலங்காலமாக நமக்கு எவ்வளவோ நன்மை செய்தபடி பயணம் செய்து கொண்டிருக்கிறது. இன்று ஒரு வேளை அதில் ஓர் ஓட்டை விழுந்திருக்கலாம், ஒரு வேளை கொஞ்சம் பழுதுபட்டிருக்கலாம். இந்த நிலையில் ஓட்டைகளை அடைத்து தண்ணீர் உள்ளே செல்வதைத் தடுப்பதுதான் நீங்கள் நான் என்று நாம் ஒவ்வெருவரும் செய்ய வேண்டிய வேலை. நம் நாட்டு மக்களுக்கு ஆபத்தை எடுத்துச் சொல்வோம்; அவர்கள் விழித்தெழட்டும், விழித்து நமக்கு உதவட்டும். மக்களுக்கு நிலைமையை எடுத்துக்கூறி அவர்களின் கடமையை உணர்த்துவதற்காக, நான் இந்த நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று, உரத்த குரலில் அவர்களை அழைக்கப் போகிறேன்! என் குரலை அவர்கள் கேட்காமல் போகலாம். என்றாலும் அவர்களைப்பற்றி ஒரு நிந்தனைச் சொல்லோ ஒரு சாபமோ என் வாயிலிருந்து வராது. கடந்த காலத்தில் நாம் அரிய காரியங்களைச் சாதித்திருக்கிறோம். எதிர்காலத்தில் அத்தகைய காரியங்களைச் செய்யமுடியாமல் போனால், கடந்த காலத்தில் செய்திருக்கிறோம் என்ற ஆறுதலுடன் அனைவரும் ஒன்றாக மூழ்கி, அமைதியாக இறப்போம்.
நாட்டுப்பற்று உடையவர்களாக இருங்கள். கடந்த காலத்தில் இவ்வளவு மகத்தான காரியங்களைச் செய்த இந்த இனத்தை நேசியுங்கள். என் நாட்டு மக்களே உங்களை மற்ற நாட்டு மக்களுடன் ஒப்பிட்ட நோக்குந் தோறும் உங்களை அதிகமாக நான் நேசிக்கிறேன். நீங்கள் நல்லவர்கள், தூயவர்கள், மென்மையானவர்கள். நீங்கள் எப்போதும் அடக்குமுறைக்கே ஆளாகியிருக்கிறீர்கள், இந்த ஜடவுலக மாயையின் கொடுமை அது. அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். காலைப்போக்கில் உணர்வுப் பொருளே வெற்றி பெறும். இதற்கிடையே நாம் உழைப்போம், நம் நாட்டைக் குறை கூறாதிருப்போம். காலத்தின் கடுமைகளைத் தாங்கி உழைப்பால் களைத்துத் தேய்ந்து கொண்டிருக்கின்ற நமது புனிதமிக்க நாட்டின் அமைப்புகளைச் சபிக்கவோ பழிக்கவோ வேண்டாம் மூட நம்பிக்கைகள் மலிந்த அறிவுக்குப் பொருந்தாத அமைப்புகளைக்கூட நிந்திக்காதீர்கள். ஏனென்றால் கடந்தகாலத்தில் அவை ஏதோ நன்மை செய்திருக்கும், நம் நாட்டு அமைப்புகளைவிட உண்மையிலேயே சிறந்த நோக்கங்களையும் முடிவுகளையும் கொண்ட அமைப்புகள் உலகில் வேறு எங்குமே இல்லை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
ஏறக்குறைய உலகின் எல்லா நாடுகளிலுமே ஜாதிகள் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் அவற்றின் திட்டமும் நோக்கமும், நம் நாட்டைப்போல் வேறெங்கும் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஜாதி என்பது தவிர்க்க முடியாதது என்றால், பணத்தால் உருவாகின்ற ஜாதியை விட, தூய்மை, பண்பாடு, தன்னலமின்மை இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஜாதியையே நான் விரும்புகிறேன். எனவே ஒரு கண்டனச் சொல்கூட வேண்டாம். உதடுகளை மூடிக்கொள்ளுங்கள், உங்கள் உள்ளங்கள் திறக்கட்டும் உங்கள் ஒவ்வொருவரின் தோள்மீதுதான் முழுப் பொறுப்பும் இருப்பதாக எண்ணி, இந்த நாட்டின் மற்றும் உலகம் முழுவதன் நற்கதிக்காகப் பாடு படுங்கள். வேதாந்தத்தின் ஒளியையும் வழியையும் ஒவ்வொரு ஆன்மாவிலும் மறைந்துள்ள தெய்வீகத்தை விழித் தெழச் செய்யுங்கள். இதன்பிறகு எந்த அளவிற்கு உங்களுக்கு வெற்றி கிடைத்தாலும், நீங்கள் ஒரு மகத்தான லட்சியத்திற்காக வாழ்ந்தீர்கள், உழைத்தீர்கள் என்ற மனநிறைவோடு இறந்து போகலாம். எப்படியானாலும் இந்த லட்சியத்தின் வெற்றியைப் பொறுத்தே இப்போதும் இனி வரும் காலத்திலும் மனித குலத்தின் கதிமோட்சம் நிர்ணயிக்கப்படும்.
.
ஆதாரம்: ஞானதீபம்- சுடர் 5; பக்கம்: 83-110.
ஞானகங்கை- 2

எல்லாச் சம்பிரதாயங்களையும் தன்னுள் கொள்ளும் விசேஷத் தன்மையை நமது ஆச்சார்யர்கள் அனைவரும் கடைப்பிடித்துள்ளனர். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் “எவ்வளவு நோக்கங்கள் உண்டோ, அவ்வளவு மார்க்கங்களும் உண்டு” என்று கூறியுள்ளனர். தனி மனிதனின் ருசிக்கும், மனப்போக்கிற்கும் ஏற்ப பல்வேறு மதங்களோ சம்பிரதாயங்களோ இருக்க முடியும்.
சாதி அமைப்பு நிறைந்த சமுதாயம் என்று அழைக்கப்படும் ஹிந்து சமுதாயம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, கிரேக்கர்கள், சகர்கள், ஹூணர்கள், இஸ்லாமியர்கள், ஐரோப்பியர்கள் போன்ற பல இனத்தவர் படையெடுத்த அழித்தபோதிலும் கூட சிரஞ்சீவியாக, இறவாது, அழிக்க முடியாத சமுதாயமாக இன்றும் ஒரு ஸ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தர், திலகர், காந்தி போன்றோரை உருவாக்கும் ஜீவனுடையதாய் விளங்குகிறது. அதற்கு மாறாக சாதிப் பிரிவினையற்ற சமுதாயம் என்று கருதப்படும் சமூகங்கள் ஒரே படையெடுப்பிற்குப் பின் மீண்டும் எழ முடியாதவாறு மண்ணோடு மண்ணாகிப் போய்விட்டன.
சத்ரபதி சிவாஜி
நவீன காலத்தில் தேசிய மறுமலர்ச்சி முன்னோடியாக விளங்கிய சுவாமி விவேகானந்தர், அடிக்கடி பல தடவைகளில் சந்தேகத்திற்கு இடமில்லாத சொற்களில், இது ஹிந்து ராஷ்ட்ரம் தான் என்று அறிவித்ததுடன் குரு கோவிந்த சிம்மன், சத்ரபதி சிவாஜி ஆகியோரின் உயர்ந்த லட்சியங்களை நம்முன் வைத்துள்ளார். உண்மையில் ஒரே ஆத்மிக ராகத்திற்கு இசைய, தான் இசைக்கின்ற உள்ளங்களால் உருவானதே நம் ராஷ்ட்ரம் என்ற சொல் – விளக்கவுரை அளித்துள்ளார்.
பணக்காரர் ஒருவர் அழகிய தமது தோட்டத்திற்கு நடுப்பகல் வேளையில் தினந்தோறும் சென்று, அங்குள்ள குளுமையான நிழலில் உட்கார்ந்திருப்பது வழக்கம். ஒரு நாள் மயில் ஒன்று அங்கு வந்து மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டு தனது எழில் மிகுந்த தோகையை விரித்தது. “தினந்தோறும் இதே நேரத்தில் அது வருமாயின் எவ்வளவு அருமையாக இருக்கும்!” என்று அந்த எஜமானன் நினைத்தான். உடனே தின்பண்டங்கள் சிலவற்றைத் தயாரித்து அதில் சிறிதளவு அபினைக் கலந்து அம்மயிலின் முன் வீசினான். மயில் அதனைத் தின்றுவிட்டு கிறுகிறுப்பு அடைந்தது. மறுநாளும், முன்னாள் அடைந்த கிறுகிறுப்பினை நினைத்துக்கொண்டு அம்மயில் வந்தது. அம்மனிதர் மீண்டும் அபினை அதற்கு ஊட்டினார். முடிவாக அபினே இல்லாமற்கூட, அங்கு தினந்தோறும் அந்த நேரத்தில் வருகின்ற அளவுக்கு அந்த மயிலுக்குப் பழக்கமாகிவிட்டது. (*1)
மனத்தின் இயல்பு இப்படிப்பட்டது ஆகும். சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும், மீண்டும் மீண்டும் ஒரு கருத்தை வலியுறுத்தும்போது அது பழக்கமாகிவிடுகிறது.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் கங்கா ஸ்நானத்திற்குச் செல்கின்ற மக்களைப் பற்றி வேடிக்கையாக ஒன்று கூறுவார். “இம்மனிதர்கள் கங்கை கரையை அணுகும்போதே, அவர்களுடைய பாவங்கள் உடலிலிருந்து வெளிவந்து தொலைவிலுள்ள மரக்கிளைகளில் ஏறி உட்கார்ந்து விடுகின்றன. ஆனால் ஸ்நானம் முடிந்த பிறகு, அவர்கள் திரும்பி வந்தவுடன் மறுகணமே அந்த பாவங்கள் மீண்டும் பாய்ந்து தொத்திக் கொள்கின்றன” என்பார். மனிதனுடைய ஒழுக்கப் பண்பாட்டை வெறும் தற்காலிக, ஆவேச எழுச்சிகளால் உருவாக்க முடியாது என்பதே இதிலிருந்து நாம் கற்கின்ற நீதி.
குரு கோவிந்த சிம்மன்
நம்மைச் சுற்றி, பல்வேறு தீய தன்மைகள் உள்ளன. உள்ளமானது அவற்றுடன் இடைவிடாத தொடர்பு கொண்டிருப்பதால் அதனைத் தூய்மைப்படுத்துவது குறிப்பாக அவசியமாகின்றது. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் அத்வைத குருவாக விளங்கிய தோதாபுரியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது அனுபூதி பெற்ற சித்த புருஷராகிவிட்ட பிறகும் கூட, அவர் தினசரி சம்சார சடங்குகளை ஏன் கடைபிடிகின்றார் என்பது கேள்வி. அதற்கு அவர் அளித்த பதில், “உள்ளமானது இந்த உலகத்தில் தொடர்பு கொண்டிருக்கின்ற காலம்வரை, அதனை தினந்தோறும் தூய்மைப்படுத்தியாக வேண்டும். தண்ணீர் குடிப்பதற்காகப் பயன்படுத்துகின்ற பாத்திரத்தை தினந்தோறும் தேய்த்துக் கழுவுவது போல உள்ளத்தையும் கழுவியாக வேண்டும்” என்பதே.
ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் படிப்பினை அளிக்கின்ற ஒரு உதாரணம் உள்ளது.
ஒருமுறை ஒரு அம்மையார் தமது குழந்தையை அவரிடம் கொண்டுவந்து, அக்குழந்தை மிட்டாய் சாப்பிடுவதில் மிக அதிகமான ஆசை கொண்டிருப்பதாகவும், அதனால் அதன் உடல்நிலை கெட்டுவிடுவதாகவும் குறிப்பிட்டு, அதனை குணப்படுத்துமாறு அவரை வேண்டினாள். ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவளை ஒரு வாரம் கழித்து வரச் சொன்னார். அவளும் வந்தாள். மீண்டும் சில நாட்கள் கழித்து வரச் சொன்னார்.
அவள் மீண்டும் வந்தபோது ஸ்ரீ ராமகிருஷ்ணர் அந்தக் குழந்தையை அருகில் அழைத்து, “எனதன்புக் குழந்தாய்! அதிகமான் மிட்டாய் சாப்பிடுவது நல்லதல்ல, விட்டுவிடு” என்றார். குழந்தையும் உடனே விட்டுவிடுவதாக வாக்களித்தது. அந்த நாள்முதல் அக்குழந்தை மிட்டாயை விட்டுவிட்டது. இதைக் கவனித்துக் கொண்டிருந்த சிஷ்யர்கள் அவரை வினவினார்கள். “சுவாமி! நீங்கள் அந்தக் குழந்தையிடம் மிட்டாய் சாப்பிடக் கூடாதென்று முதல்நாளே ஏன் கூறவில்லை? அந்த அம்மையாரை இவ்வளவு தொலைவிலிருந்து மூன்று முறை வரச் சொல்லக் காரணமென்ன? என்றார்கள். அதற்குப் பதிலளிக்கையில் ஸ்ரீ ராமகிருஷ்ணர், “எனக்கும் கூட மிட்டாய் அதிகம் சாப்பிடுகின்ற பலவீனம் இருந்தது. ஆகவே அந்தக் குழந்தையிடம் அந்த பலவீனத்தைக் கைவிடும்படி எப்படிக் கூற முடியும்? அப்படியே நான் உபதேசம் செய்தாலும் எனது சொற்களால் அக்குழந்தை எந்த மாற்றமும் அடையாது. ஆகவே அந்த அம்மையாரை மீண்டும் வரும்படி கோரினேன். எனினும் அந்தக் காலஅளவுக்குள் இந்த விஷயத்தில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. ஆகவே, அவளை மீண்டும் அழைக்க நேர்ந்தது. அதன் பின்னர் மிட்டாய் ஆசையை நான் அறவே கைவிட்டேன். அப்பொழுது அந்தக் குழந்தைக்கு உபதேசம் அளிக்கக்கூடிய தகுதி என்னிடம் இருப்பதாக நான் கண்டுகொண்டேன்”.
ஒருமுறை சுவாமி விவேகானந்தரின் முக்கிய சிஷ்யையான சகோதரி நிவேதிதை அம்மையார் பின்வருமாறு கூறியுள்ளார் – “ஹிந்துக்கள் அனைவரும் கூட்டு நீதியில் தினந்தோறும், காலையிலும் மாலையிலும் 10 நிமிடங்கள் கூட்டுப் பிரார்த்தனை நடத்தினால் – வெறுமனே இதை மாத்திரம் செய்தாலும் ஹிந்து சமாஜமானது வெல்லுவதற்கரிய சமூகமாக ஆகிவிடும்”.
ஒருமுறை ஸ்ரீ ராமகிருஷ்ணரது சிஷ்யர்களில் சிலர் ஏழைகளுக்கு உதவுவது பற்றியும், அவர்களிடம் இரக்கம் காட்டுவது பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பகவத் பிரேமையில் மூழ்கிய நிலையில் அங்கு வந்து அவர்களைக் கண்டித்துவிட்டு, “ஏழைகளிடம் தயவு காட்டவும், அவர்களுக்கு உதவி புரியவும் நீங்கள் யார்? அவர்கள் ஸ்ரீமந் நாராயணனின் நடமாடும் வடிவங்களாயிற்றே! அவர்களுக்குத் தொண்டு செய்கின்ற உரிமை ஒன்று தான் உங்களுக்கு உண்டு” என்று கூறினார்.
சுவாமி விவேகானந்தர் கூறுவது வழக்கம்: “மஹான் குரு கோவிந்த சிங்கைப் போலமக்கள் தொண்டிற்காக அனைத்தையும் சகித்துக் கொள்வதற்காக ஆயத்தமாகஇருங்கள். தமது சொந்த ரத்தத்தையும், நமக்கு நெருங்கியவர்கள், இனியவர்கள்ஆகிய உறவினர்களின் ரத்தத்தையும் சிந்திய பிறகு களத்திலிருந்து அமைதியாகஅவர் வெளியேறினார். தெற்கே அவர் மரணமடைந்தார். ஆனால் மிகுந்த மோசமானநன்றி கொன்ற தன்மையுடன் தம்மைக் கைவிட்டவர்களைப் பற்றிச் சாபமாக ஒருசொல் கூட அவர் வாயிலிருந்து வெளிவரவில்லை”
பிரிட்டிஷார் வெளியேறியவுடன் சீனா பாரதத்தின் மீது படையெடுக்கும் என்று சுவாமி விவேகானந்தர் 70 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்துள்ளார்.
ஒருமுறை துறவி ஒருவர் ஒரு நாயைத் தன் மடியில் வைத்துக் கொண்டு தெரு ஓரத்தில் எச்சில் இலைகளில் எறியப்பட்டிருந்த பொருள்களை அன்புடன் அதனோடும் பங்கு போட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். தெருவழியே சென்ற ஒருவன் இறைவனைக் கண்டுணர்ந்த மஹான் என்று தெரிந்துகொண்டு அவர் அருகே சென்றான். ஆனால் அவனைக் கண்டதும் அவர் ஓடிக்கொண்டே கற்களை எடுத்து வீசித் தம்மைப் பின் தொடராமல் தடுக்க முயன்றார். ஆனால், விடாப்பிடியாக தொடர்ந்து வருகின்ற அவனைக் கண்டதும் அந்தச் சாது நின்று அவனை, “எதற்காக நீ என் பின்னால் வருகின்றாய்?’ என்று கேட்டார்.
”சுவாமி! நீங்கள் இறைவனைக் கண்டு உணர்ந்திருக்கின்றீர்கள் என்று எனக்குத் தெரியும். எனக்கும் அந்தப் பாதையில் வழிகாட்டி அருள வேண்டும்” என்று கோரினான். அதற்குச் சாது, “சரி; இந்த ஊரின் சாக்கடை நீர், இங்கே ஓடிக் கொண்டிருந்ததை நீ காண்கிறாயா? என்றைய தினம் இந்தத் தண்ணீர் கங்கை நீரிலிருந்து எவ்விதத்திலும் வேறுபட்டதல்ல என்ற அனுபூதி உனக்கு ஏற்படுகின்றதோ அன்று நீ இறைவனைக் கண்கூடாக காண்பதற்கு தகுதி பெற்றவனாய்” என்று கூறினார். (*2)
இரு யோகியர்களைப் பற்றிய கதையொன்று உண்டு. அவ்விருவரும் பரம்பொருளை எய்துவதற்காகக் கடுமையான தவமியற்றி வந்தார்கள். அந்த வழியாக நாரதர் இறைவனின் இருப்பிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவ்விரு யோகியர்களும் நாரதரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள். “தாங்கள் இறைவனை தரிசித்துவிட்டுத் திரும்பும்போது, அவரை நாங்கள் கண்கூடாகக் காண இன்னும் எத்தனை பிறவிகள் தவம் செய்ய வேண்டும் என்று விசாரித்து வாருங்கள்” என்று கேட்டனுப்பினார்கள். திரும்பி வந்தபோது நாரதர் அவ்விரு யோகியரையும் மீண்டும் சந்தித்தார். “இன்னும் நான்கே ஜென்மங்கள் தான்” என்று முதலாவது யோகியிடம் நாரதர் கூறினார். அது கேட்டு அந்த யோகி மனமுடைந்து “இறைவனே! இன்னும் நான்கு பிறவிகளா?” என்று அங்கலாய்த்து ஓலமிட்டார். அடுத்த யோகியிடம் நாரதர், அதோ அங்கே இருக்கின்ற புளிய மரத்தில் எத்தனை இலைகள் இருக்கின்றன்வோ அத்தனை பிறவிகள் நீ எடுக்க வேண்டும்” என்று கூறினார். அது கேட்டு அவர் ஆனந்தக் கூத்தாடுவதைக் கண்டு நாரதர் வியப்படைந்தார். அதன் காரணத்தை நாரதர் வினவியபோது, இனி நான் இறைவனை அடைவதற்கு திட்டவட்டமாக எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டும் என்ற எண்ணிக்கை தெரிந்துவிட்டது. அவற்றிற்குப் பிறகு நான் நிச்சயமாகவே இறைவனைக் காண்பேன். இது மனதுக்கு எவ்வளவு ஊக்கமும் தெம்பும் தருகின்றது!” என்று விடையளித்தார். அவ்வாறு அந்த யோகி கூறி முடித்ததும் அசரீரியான ஒரு குரல் ஒலித்தது. “இந்தக் கணமே நீ ஆத்ம ஞானியாகிவிட்டாய்” என்று அது கூறிற்று.
இதைப் போன்று வாழ்நாள் முழுவதும் விடாமுயற்சியுடனும், பூரண நம்பிக்கையுடனும், அசைக்க முடியாத மன உறுதியுடனும் பாடுபட்டு உழைத்தால் மட்டுமே பெரும் அற்புதங்களைச் சாதிக்க முடியும்.
அனைத்தையும் தியாகம் செய்ய வல்ல தூய தொண்டர்களைக் குறித்து, சுவாமி விவேகானந்தரின் சொற்களில், “அவர்கள் பயங்கரத்தை வழிபடுகின்றார்கள்.அபாயங்களுக்கிடையே வாழ்க்கை நடத்த அவர்கள் ஆசைப்படுகிறார்கள்”.
(நிறைவு)
அடிக்குறிப்பு:
*1- இது ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறிய உபகதைகளுள் ஒன்று.
*2- இதுவும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறிய உபகதைகளுள் ஒன்று. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹமஸரின் ஜீவிதத்தில் வரும் நிகழ்ச்சி இது. ஸ்ரீ ராமகிருஷ்ணர், அந்த்த் துறவியைப் பார்த்தவுடனேயே அவர் ஞானம் வாய்க்கப் பெற்றவர் என்பதைப் புரிந்துகொண்டார். பிறகு தனது உறவினரான இருதயரை அத்துறவியிடம் அனுப்பி வைத்தார். ‘தெருவழியே சென்ற ஒருவன்’ என்று குறிப்பிடப்படுபவர் இருதயரே ஆவார்.
.
கட்டுரையாளர் அறிமுகம்:ஸ்ரீ குருஜி கோல்வல்கர் என்று அழைக்கப்படும் பரமபூஜனீய குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) இரண்டாவது தலைவராக இருந்தவர்; பெரும் தபஸ்வி; சிந்தனையாளர்; சுவாமி விவேகானந்தர் கனவு கண்ட இயக்கச் செயல்வீரர்; தேசிய மறுமலர்ச்சிப் பணியில் தனது வாழ்வையே அர்ப்பணமாக்கியவர். ‘ஞானகங்கை’ என்ற நூல் தொகுப்பு குருஜியின் சிந்தனைக் களஞ்சியமாகும்.காண்க: குருஜி கோல்வல்கர் (விக்கி)இக்கட்டுரை ‘தியாகபூமி’ வார இதழில் வெளியானதாகும்.
ஞானகங்கை- 1
பல நூற்றாண்டுகளாக நமது சமுதாயமானது மகாத்மாக்களைப் பெற்றெடுத்திருக்கிறது. உலக சிந்தனையாளர்களின் வான அரங்கத்திலே அவர்கள் ஒவ்வொருவரும் ஒளி மின்னும் நட்சத்திரங்களாவர். இன்றளவும் நம்நாடு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போன்ற மகான்களை வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறது.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், மனிதர்களின் சுகதுக்கங்களில் மட்டுமே பங்கெடுக்கவில்லை. உயிருள்ள, உயிரற்ற எல்லாப் பொருள்களுடன் கூடவும் அவர் தம்மை இணைத்து வாழ்ந்தார்! ஒரு பசு சாட்டையால் அடிக்கப்படுவதைக் கண்டு அவர் வேதனையால் கதறினார். அவரது முதுகில் பட்டை பட்டையாகச் சிவந்து சாட்டையடி காணப்பட்டது! மற்றொரு சந்தர்ப்பத்தில் புல்வெளியொன்றில் மேய்ந்துகொண்டிருந்த எருதைக் கண்டதும், புல்மீது ஏற்பட்ட அந்தச் சுவடு அவரது மார்பில் குளம்படிச் சுவடாகப் பதிந்து காணப்பட்டது. ஆத்மீக விஞ்ஞானத்தை உபதேசித்த மகான்களான நமது ஆச்சார்ய புருஷர்கள் அந்த அளவுக்கு உயர்நிலை எய்தியும், உபதேசித்தும் வந்தார்கள்.
நமது முன்னோர்கள் ‘நமது மக்களே நமது தெய்வம்’ என்று கூறினார்கள். மனித குலத்துக்கே மகத்தான குருநாதர்களாக விளங்கியவர்களில் ஒருவரான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், ‘மனிதனுக்குத் தொண்டாற்று’ என்று உபதேசித்தார். மகானாக விளங்கிய அவரது சீடரான சுவாமி விவேகானந்தரும் அதையே ஆணித்தரமாக எடுத்துக் கூறினார்.
நாற்புறமும் நம்மைச் சூழக் கோடிக் கணக்கான மக்கள் பட்டினியிலும், ஏழ்மையிலும் பரிதவித்து வாழ்கிறார்கள். உயிர் வாழ அத்தியாவசியமான பொருள்களும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. துயர் நிறைந்த அவர்கள் வாழ்க்கைக் கதையானது கல்மனத்தையும் கரைத்துவிடும். நிராதரவான ஏழைகள், துயருறும் மக்கள் இனம் ஆகியோரின் வடிவத்தில் சாக்ஷாத் பரம்பொருளே வந்திருக்கிறார். எதற்காக? அவருக்குத் தேவையானது ஏதாவதிருக்கிறதா? சக்திகளனைத்துக்கும், அறிவுக் கலைகளனைத்துக்கும் அவரே உறைவிடம், அனைவருக்கும் எஜமானர் அவரே. அப்படியிருக்கும்போது அவருக்கு வேண்டுவதென்ன? அந்த வடிவங்கள் மூலமெல்லாம் வந்து தெய்வத் தொண்டாற்ற அவர் நமக்கு வாய்ப்பளித்திருக்கின்றார். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அத்தகையோரை ‘தரித்ர நாராயணர்கள்’ என்றழைத்தார்.
ஒரு சாரார் ஆடல், பாடல், சினிமா, நாடகம் ஆகிய அனைத்தும் தான் ‘கலாச்சாரம்’ என்று கருதுகின்றார்கள். இத்தகைய கலாச்சார நிகழ்ச்சிகள் நாட்டின் எல்லா இடங்களிலும் நிகழ்ந்து வருவதை நாம் பார்க்கின்றோம். தரக்குறைவான கேளிக்கைகளுக்கு மறுபெயராக கலாச்சாரம் என்பது ஆகிவிட்டது. இது எத்தகைய முட்டாள்தனமான அவமானகரமான நிலைக்குத் தாழ்ந்துவிட்டதென்றால், ஒழுக்கக் கேடான நடத்தைகளில் மூழ்கிப் புரண்டு நெளியும் இழிபெயரெடுத்த சினிமா நட்சத்திரங்கள் அன்னிய நாடுகளுக்குச் செல்லும் ‘கலாசார தூது கோஷ்டி’யில் இடம் பெறுகிறார்கள்! ஒரு ராமனையும் சீதையையும் ஈன்றெடுத்த நாடு; கடந்த காலத்தில் மிக உயர்ந்த ஞானிகளையும், தத்துவதரிசிகளையும் தனது கலாசாரத் தூதுவர்களாக உலகுக்கு அனுப்பிய நாடு; சமீப காலத்தில் உலகனைத்தின் அன்பையும் பக்தியையும், தாமாகப் பொங்கியெழுந்த வணக்கத்தையும் பெற்ற விவேகானந்தர், ராமதீர்த்தர் ஆகியோரின் நாடு- இந்நாட்டின் கலாச்சாரப் பிரதிநிதிகளாக மேற்குறிப்பிட்ட கோஷ்டிகள் செல்வது இன்றைய பயங்கரமான இழிநிலைக்கு உதாரணமாகும்.
அத்துடன் பிரபலமான ’கலாச்சாரப் புருஷர்கள்’ பலர் ‘மிஸ் இந்தியா’ அழகிப்போட்டியில் நீதிபதிகளாகச் சென்று கலந்து கொள்வதையும் காண்கின்றோம். அவர்களது ‘கலாச்சாரப் பொதுக்கருத்தில்’ நம் நாட்டுப் பெண்மையின் லட்சியங்களான சீதை, சாவித்ரி, பத்மினி, நிவேதிதை ஆகியோருக்கு இடமே இல்லை போலும்! அந்தப் போட்டியில் பாரதத்தின் உண்மையான அழகை நாம் காண முடிவதில்லை.
சுவாமி ராமதீர்த்தர்
முதற்தேவை வெல்ல முடியாத உடல் பலமாகும். உலகில் எவரும் நம்மை மிரட்டவும் கீழடக்கவும் முடியாத அளவுக்குச் சக்தி படைத்தவர்களாக நாம் ஆக வேண்டும். அதற்காக நாம் வலிமையும் வளமும் வாய்ந்த உடல்களைப் பேண வேண்டும். மனித உருவில் வந்த அவதாரங்கள் அனைவரும் அவ்வாறே வாழ்ந்தார்கள். ‘வலிமையே வாழ்வு; வலிவின்மையே மரணம்’ என்பதே நமது புனித நூல்களனைத்தின் சாரம்.
‘இரும்பையொத்த தசைகளும் எஃகினையொத்த நரம்புகளும் வாய்ந்த மனிதர்கள் எனக்குத் தேவை’ என்று சுவாமி விவேகானந்தர் கூறுவது வழக்கம். அவரும் அவ்வாறே வாழ்ந்தார். உடனிருந்த சீடர்கள், எப்பொழுதும் உட்கார்ந்து கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பதைக் கண்டபோது அவர் இடிபோல் முழங்கினார்; ‘இது பக்தியே அல்ல, இது நரம்புக்கோளாறு பலவீனம் தான். சிறு பெண் குழந்தைகள் போல உட்கார்ந்துகொண்டு, அழுது கொண்டிராதீர்’ என்றார்.
“முதன்முதலாக ‘ஹிந்து’ என்பதைப் பற்றி என்ன வரையறை விளக்கம் சொல்கிறீர்கள்?” என்று கேட்கிறார்கள். ஆம், உண்மையில் அது கடினமான காரியந்தான். ஒரு கனவான் ஒருமுறை கூறினார். முஸ்லிம், கிறிஸ்தவர் என்றால் யார் என்று என்னால் வரையறுத்து விளக்க முடியும். ஆனால் ஹிந்து என்றால் யாரென்று விளக்க முடியவில்லையே என்றார். அப்படி அவர் கூறியது சரி தான். நம்மால் சூரியனையும் சந்திரனையும் வரையறுத்து விளக்க முடியும். ஆனால் எந்த ஆதிக்காரணப் பொருளிலிருந்து இவையெல்லாம் வெளித்தோன்றினவோ அதனை வரையறுத்து விளக்க முடியாது. அப்படியானால் அது இல்லையென்று பொருளா? அடையாளச் சின்னங்களால் மூடி மறைக்கப்படவும், வரையறை விளக்கங்களால் விளக்கப்படவும் அது அனுமதிப்பதில்லை என்பதற்காக, அது இல்லை என்று நிரூபணமாகிவிடுகிறதா?
இறைவன் ஒருவனே அனுச்சிஷ்டன் (எச்சிற்படாதவன்) என்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறினார். அவன் தூயவன், மாசுபடுத்தப்படாதவன். ஏனெனில் அவன் ஒருநாளும் விளக்கப்படவில்லை;எந்த நாவினாலும் எச்சிற்படுத்தப்படவில்லை. மற்ற எல்லாவற்றையும் விளக்கி வரையறுக்க முடியும். ஆனால் ‘பேருண்மை’ என்று அழைக்கப்படும் அனைத்தையும் அரவணைக்கும் பொருளை மட்டும் விளக்க முடியாது.
ஸ்ரீ ராமன், சிவாஜி, விவேகானந்தர் ஆகியோரெல்லாம் ‘நவநாகரிக பாணி’யின் சிருஷ்டி அல்ல என்பதை மறக்க வேண்டாம். ராமாயணம், மஹாபாரதம் இவற்றில் கோயில் கொண்டுள்ள லட்சியங்களால் சிவாஜி தெய்வீக ஊக்கம் பெற்றார். நமது ஹிந்து வாழ்க்கை முறையில் அவருக்கிருந்த இணையற்ற பக்தியும், மக்களை ஒன்றுதிரட்டி இணைப்பதில் அவருக்கிருந்த தன்னிகரற்ற அறிவுக் கூர்மையும் இணைசேர்ந்து நடைமுறைக்கொத்த செயல் துடிப்பு மிக்க வடிவம் பெற்றது. அது அவரை பெருஞ்சக்தியாக மாற்றி நமது வரலாற்றின் போக்கு முழுவதையுமே திருப்பிவிட்டுவிட்டது.
வேதரிஷிகள் முதல் அண்மையில் ஸ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ராமதீர்த்தர் போன்ற நவயுக வல்லமையாளர் வரை அனைவரும் தமது ஆக்கரீதியான அன்புவழி வாழ்க்கையாலும், புராதன லட்சியங்களை வாழ்வில் நடத்திக் காட்டியதன் மூலமும் தெய்வீக ஊக்கமளித்து நமது மக்களின் வாழ்வில் தமது சக்தி நிரம்பிய அழியாத முத்திரையைப் பதித்துச் சென்றிருக்கிறார்கள். எதிர்ப்புச் சக்திகள் அனைத்தும் தடுத்தாலும், அவர்களின் தலையுயர்த்தி நிமிர்ந்து நின்று சவால் விடுகின்ற முறையில் உலகத்தை நோக்கிப் பேசமுடிந்தது.
அவர்களது குழந்தைகளாகிய நாம் எவ்வளவு பரிதாபமான நிலைக்குத் தாழ்ந்துவிட்டோம்! அந்த மாவீர ஆன்மாக்களை ஊக்கிச் செயல்படுத்தியும் உருவாக்கியும் வந்த லட்சியங்களைப் பற்றிய ஆரம்பப்பாட எழுத்துக்களைக் கூட நாமறியோம்!
பிரிட்டிஷார் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட காலத்தில், அதற்கு எதிராகத் தோன்றிய தேசிய புத்தெழுச்சியில் ஆத்மிக உட்பொருளைக் கண்டோம். ஆத்மிக ஆதவன் முழுப் பேரொளியுடன் வங்கத்தில் ஸ்ரீராமகிருஷ்ண- விவேகானந்த இயக்க வடிவத்திலும், பஞ்சாபில் சுவாமி தயானந்தர், ராமதீர்த்தர் வடிவங்களிலும், தெற்கில் மகரிஷி ரமணர், யோகி அரவிந்தர் வடிவங்களிலும் கதிர் பரப்பி வெளிவந்தான். அவர்களனைவரும் தேசியத்தின் ஆத்மிக உட்பொருளை மக்கள் மனதில் பாய்ச்சிப் புகட்டினார்கள்.
விழுமிய மேன்மையான தெய்வீகக் காட்சி நமது உள்ளங்களில் ஆழப் பதிந்து இருக்கும்போது, அரசியல் சக்தி என்னும் கானல்நீரை நோக்கி நாம் எதற்காக ஓட வேண்டும்? ஒருமுறை தட்சிணேசுவரம் கோயிலில் களவு நிகழ்ந்தது. ராதாகாந்த சுவாமியின் மேலிருந்த நகைகள் திருடப்பட்டன. “தனது சொந்த நகைகளையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவர் என்ன கடவுள்?’’ என்று ஒரு ஒருவர் வினவினார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவரைக் கண்டித்து, “இதுபோன்ற அபத்தமான நோக்கை வைத்திருப்பது வெட்ககரமானது ஆகும். ஏனெனில் செல்வங்களுக்கெல்லாம் நாயகியான ஸ்ரீ லட்சுமியைத் தன் வேலைக்காரியாகக் கொண்டிருக்கும் இறைவன், பயனற்ற இந்தத் துண்டுக் கற்களையும் உலகத்தையும் எப்படி, எவ்வளவு தூரம் மதிக்க முடியும்?” என்று பதிலளித்தார். அதுபோலவே தேசிய வாழ்க்கை முழுவதையும் இணைத்துக் கோர்த்த முழுப்பார்வையும் பெற்றுள்ள நாம், தோன்றி மறையும் அரசியல் சக்தி போன்ற ஒன்றன்பின் எதற்காக ஓட வேண்டும்?
நம் முன்னோர் இப்பாரத பூமியை உலகிலேயே மிகப் புனித பூமியாகக் கொண்டாடினர். இங்கு செய்யப்படும் ஒவ்வொரு சிறு நற்செயலும், நூறு மடங்கு பன்மடங்கு பலன் தரும் என்பதை உணர்ந்தனர்.
இதே கருத்தோடு தான் சுவாமி விவேகானந்தர் “இவ்வுலகில் எவனொருவன் இறைபதம்நோக்கி, ஆன்மிக வாழ்வில் முன்னேற்றம் அடைந்து தனது இறுதிப் பிறப்பைக்கழிக்கும் நிலையில் உள்ளானோ, அவன் இப்பாரதப் பூமியில் பிறப்பெடுப்பான்.ஆகவே உலகில் எந்த நாடாவது புண்ணிய பூமி என்றழைக்கும் பேறு பெற்றுள்ளதுஎன்றால் அது பாரதமேயாகும்” என்று கூறினார்.
.
பாரம்பரியம் தொடருகிறது
நம் நாட்டிற்கே விசேஷமான குறிப்பு பண்டைக்காலத்தோடு நின்றுவிடவில்லை. இன்றைய நவீன காலத்திலும், ஸ்ரீ ராமகிருஷ்ணரும், ஸ்ரீ நரேந்திரரும் (பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர்) சந்தித்த சந்தர்ப்பம் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
நரேந்திரன் கல்லூரி மாணவனாக இருக்கும்போது, இளமை மிடுக்கும், அறிவு விளக்கமும் பொருந்திய மேனாட்டு, கீழ்நாட்டு தத்துவ விசாரணைகளில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தார். இருப்பினும் உண்மை ஞானத்தைத் தேடித் திரியும் அவர் ஆத்மா அதில் திருப்தியடையவில்லை. அவர் தம் காலத்தில் வாழ்ந்த கற்றறிந்த பெரியார்கள் பலரையும், பக்தர்கள் பலரையும் சந்தித்தார். அவர்களும் அவரது ஆத்மதாகத்தைத் தீர்க்க முடியவில்லை.
ஒருசமயம் நரேந்திரர் தட்சிணேசுவரக் கோவிலில் ஒரு பரமஹம்சர் (சுகானுபவம் பெற்ற ஆத்மா) இருப்பதாகத் தெரிந்து கொண்டார். நரேந்திரர் அவரிடம் சென்று பல ஆண்டுகளாகத் தன் மனதை உலுக்கிவரும் அக்கேள்வியை அப்பட்டமாகக் கேட்டார். “சுவாமி! தாங்கள் கடவுளைக் கண்டதுண்டா?” என்று அவர் கேட்டார். உடனே ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு கணமும் தயங்காமல் “ஆம்! உன்னை நான் காண்பது போல் கடவுளை நான் காண்கிறேன். அதைவிடச் சற்று திவ்யமாகவும் தெளிவாகவும் காண்கிறேன். அவரை உனக்கும் காண்பிக்க முடியும்” என்றார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் நரேந்திரரக்குத் தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவும் செய்தார்.
நரேந்திரர், நவீனகாலத்துப் பிறவி. உயர்ந்த அறிவும் அசைக்க முடியாத மனோதிடமும் பெற்றவர். அவர், ஏதோ மனோவயத்தில் அடிபட்டுக் கண்மூடித்தனமாக விஷயங்களை நம்பும் கோஷ்டியைச் சேர்ந்தவரல்லர். கடவுளையே நேருக்கு நேர் கண்கூடாகக் கண்டபொழுது, கடவுள் உள்ளார் என்ற உண்மையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளாமல் இருக்க முடியவில்லை. இவ்வாறு தெய்வ தரிசனம் பெற்ற பலபுருஷர்கள் தொடர்ந்து நம் நாட்டை ஆத்மஞானம் பெறும், முக்தி பெறும் தர்ம பூமி என்றும், மோட்ச பூமி என்றும் அழைத்து வந்துள்ளனர்.
சுவாமி விவேகானந்தர் இங்கிலாந்திலிருந்து பாரத நாட்டிற்குத் திரும்பவிருந்த சமயத்தில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “செல்வத்திற் சிறந்த நாடுகளான இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குத் தாங்கள் விஜயம் செய்துள்ளீர்கள். இப்போது உங்கள் தாய்நாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்பதே அக்கேள்வி.
அதற்குப் பதில் கூறுகையில், சுவாமி விவேகானந்தர், “ பாரத நாடு! அதனை நான் முன்புநேசித்தேன். ஆனால் இப்பொழுது அதன் ஒவ்வொரு தூசும் எனக்குப் புனிதமானது.அது புண்ணிய ஸ்தலமாகும்” என்றார்.
குறுகத் தரித்த குரல் – 3
பாறை வகுத்த பாதை
எப்படி கிழக்கிந்தியக் கம்பெனியும் ஆங்கில அரசும் தங்கள் காலனி இந்தியாவில் மேற்கத்திய நாகரிக மோகத்தை உண்டாக்க முயன்றார்கள் என்பதை சென்ற பதிவில் பார்த்தோம். “இன்னும் 30 ஆண்டுகளில் ஆங்கிலக் கல்வி பெற்ற வங்காளக் குடும்பங்களில் உருவ வழிபாடு செய்யத் தயங்குவார்கள்” என்று சார்லஸ் டிரெவெல்யன் சவால் விட்டதையும் பார்த்தோம்.
ஆனால் அதே வங்காளத்தில் நடந்தது என்ன? மெக்காலேயும் டிரெவெல்யனும் இந்துமதத்தை இல்லாமல் செய்துவிடத் தீர்மானித்து விட்ட அதே காலகட்டத்தில் தான் 1836 பிப்ரவரியில் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் தோன்றினார். அவர் தான் தாயின் கருவில் உதித்த திரு.
இந்த நாட்டில் எத்தனையோ ஞானிகள், அவதார புருஷர்கள் தோன்றியிருந்தாலும் ராமகிருஷ்ணரின் அவதாரச் சிறப்பின் மகிமை மகத்தானது. அவரது மகிமை வெளிப்படையாக ஆன்மிகமாக மட்டுமே தெரிந்தாலும், அதற்கு உள்ளார்ந்த ஒரு தேசியப் பரிமாணம் உண்டு.
எந்த வங்கத்தில் உருவ வழிபாடு இருக்காது என்று கொக்கரித்தார்களோ- அதே வங்கத்தில் அதே ஆண்டில் அவதரித்த பரமஹம்சர் உருவ வழிபாடு மட்டுமே தெரிந்தவர் போன்று தோற்றமளித்தார்.
அன்றைய வங்காளத்தில் சமயச் சீர்திருத்தம் என்ற பெயரில் தோன்றிய பிரம்ம சமாஜம், அதிலிருந்து பிளவு பட்டு கேசவ சந்திர சென் தலைமையில் புதியதாய் தோன்றிய பிரம்ம சமாஜம் போன்றவை உருவ வழிபாட்டை ஏற்கவில்லை. சனாதன முறையில் நம்பிக்கையுள்ள ஆரிய சமாஜம் கூட உருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை.
அன்றைய படித்த இந்தியாவானது பாரம்பரிய தர்மத்தின் வழிமுறைகளில் இருந்து மாறி சமயத்தில் சமயத்துக்கேற்றவாறு சமரசம் செய்ய முயற்சித்தார்கள். இப்படி ஒரு பெரிய அறிவுச் சமுதாயமே ஆன்மிகத்தின் போக்கை மாற்றிக் கொண்டு இருக்கும் போது தான், ராமகிருஷ்ணர்- விவேகானந்தர் சந்திப்பு நிகழ்ந்தது.
அவன் பெயர் அப்போது நரேந்திரன். இளமையும் அறிவும் ஆன்மத் தேடலும் கொண்டிருந்த அடலேறு; உருவ வழிபாட்டை ஒத்துக் கொள்ளாத அறிவுலகப் போக்கின் அடையாளமாக விளங்கினான். கேசவ சந்திரரின் பிரம்ம சமாஜத்தில் தன்னை இணைத்துக் கொண்டவன்.
ஒரு நாள் கல்லூரியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ‘வில்லியம் ஹஸ்தி’ என்ற பேராசிரியர், வேர்ட்ஸ் வொர்த்தின் ‘The Excursion’ என்ற கவிதையைச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அதில் வரும் ‘Trans’ என்ற ஒரு உரிய பொருள் புரிய வேண்டுமானல் நீங்கள் ராமகிருஷ்ணரைச் சந்தியுங்கள் என்று மாணவர்களுக்கும் கூறினார். நரேந்திரன் மட்டுமல்ல அவனுடன் இன்னும் சில மாணவர்களும் கொல்கத்தாவின் தக்ஷிணேஷ்வர் கோவிலின் காளி உபாசகர் பரமஹம்சரைச் சந்தித்தனர்.
ஆனால் விதி நரேந்திரனை மட்டுமே வேறுவிதமாய் வழி நடத்தியது. முதல் சந்திப்பின் போதே பெரிதாக எதுவும் ஆன்மிக அனுபவம் ஏற்பட்டு விடவில்லை என்றபோதும் அடுத்திருந்த சந்திப்புகள் நரேனின் வளர்ச்சிக்கும் நாட்டின் எழுச்சிக்கும் அடித்தளமிட்டது எனலாம். இன்னும் சொன்னால் ‘நவீன இந்தியா’வின் பிறப்பு இந்த இரு ஆன்மாக்களும் இணைந்ததன் விளைவே எனலாம்.
பரமஹம்சரின் மறைவுக்குப் பின் பரிவ்ராஜிகராக இந்தியாவை வலம் வந்தார் அந்த இளம் சந்நியாசி. எங்கெங்கு பார்த்தாலும் வறுமை, பஞ்சம், கல்வியறிவின்மை, பெண்ணடிமை, பணக்காரர்களின் சுகபோகம், மன்னர்களின் மமதை, ஆங்கில மோகம், தீண்டாமை போன்ற கொடிய நோய்கள் நாட்டை உலுக்கி எடுத்திருந்தன.
மூன்று கடல்கள் சங்கமிக்கும் கன்னியாகுமரியின் பாறை மீது மூன்று நாட்கள் இருந்த தவம் அவரின் பார்வையையும் பாதையையும் தெளிவாக்கியது. உண்மையில், இது பாறை வகுத்த பாதைதான்.
சென்னை சீடர்கள் மூலம் அமெரிக்கா செல்கிறார் சுவாமிஜி. இன்று ஓர் இந்தியர் அமெரிக்கா செல்வது என்பது மிக எளிது. ஆனால் விவேகானந்தர் காலத்தின் நிலை அப்படியல்ல; ஒரு சொற்பொழிவுக்காகச் சென்றது என்பதே பெரிய சாதனை தான்.
- முதல்முதலில் கடல் கடந்து சென்ற சந்நியாசி இவர் தான். அதுவரையில் கடல் கடப்பது சந்நியாச தர்மம் அல்ல என்றே கருதப்பட்டது. இந்தியா திரும்பிய பின்னும் இந்தக் கேள்வியை அவர் சந்தித்துக் கொண்டே இருந்தார்.
- மிலேச்ச தேசத்தினர் கடல் கடந்து இந்தியாவை ஆக்கிரமிக்காத வரை நாமும் கடல் கடக்க வேண்டியதில்லை. ஆனால் அவர்களது ஆக்கிரப்பு தொடர்ந்து நடைபெறும் என்றால் நாமும் செல்வது தான் யுகதர்மமே.
- முதன்முதலில் ஆங்கிலம் பேசிய துறவி விவேகானந்தர் தான். இந்து மதத்தை அழிக்கவே ஆங்கிலம் என்ற மெக்காலேயின் கனவு அறுபது ஆண்டுகளுக்குள் தகர்ந்து போனது. மெக்காலேயின் அதே ஆங்கிலத்தை வைத்தே இந்து தர்மத்தின் பெருமையை உலகறியச் செய்தார் சுவாமிஜி. எனவே விவேகானந்தரின் ஆங்கிலம் இந்தியாவை மேற்கத்திய நாடுகளுக்கு நன்றாகப் புரிய வைத்தது மட்டுமல்ல அவர்களுள் சிலருக்காவது குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது.
- பாரத நாட்டின் மற்றைய தலைவர்கள் எல்லாம் மேற்குலகிற்கு மாணவர்களாகச் சென்றார்கள்; பட்டம் பெற்றுத் திரும்பினார்கள். ஆனால் சுவாமி விவேகானந்தர் மட்டும் தான் மேற்கத்திய மக்களுக்கு பாடம் சொல்ல ஆசிரியராகச் சென்றார். எனவே, ‘கற்க அல்ல; கற்பிக்க’ என்பதே அவரது மேல்நாட்டுப் பயணம் நமக்குத் தரும் செய்தி.
- ‘இந்தியா’ என்ற வார்த்தைப் பிரயோகத்தை அழுத்தியும் அப்படிச் சொல்லும்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள நிலப்பரப்பை மனதில் இருத்தியும் சொன்ன முதல் நபர் விவேகானந்தர் தான். இதைத் தாயாகவும் பாரத மாதாவாகாவும் உருவகம் செய்தார் சுவாமிஜி.
- அமெரிக்காவில் நடைபெற்ற அத்தனை உரையாடல்களிலும் விவாதங்களிலும் இந்தியாவை உயர்த்தியே பேசி வந்தவர் சுவாமிஜி. எந்த தர்க்கத்திலும் அவர் தாய்நாட்டை தோற்க விட்டதில்லை. அவ்வளவு ஆழமும் அழுத்தமும் கொண்டிருந்தார் அவர்.
அவரது இத்தகைய பங்களிப்பு தான் இந்தியர்களை விழித்தெழ வைத்தது. பாரதியின் வார்த்தைகளில் சொன்னால்,
வையத்து நாட்டில் எல்லாம்
தாழ்வுற்று வறுமை விஞ்சி
விடுதலைத் தவறிக் கெட்டு
பாழ்பட்டு நின்றதம் பாரதம் தன்னை…
(மகாத்மா காந்தி பஞ்சகம்)
என்ன வலி! என்ன வேதனையோடு இந்த வரிகளை எழுதியிருப்பான் பாரதி. இத்தகைய தாழ்வுற்று நின்ற பாரதத்தை தலைநிமர வைத்தவர் சுவாமிஜி.
அட! நம்மவர்களும் ஆங்கிலம் பேசமுடியும். ஆங்கிலம் பேசினாலும் பாமரர்களை நேசிக்க முடியும். பாமரரின் நண்பனுக்கும் கூட அமெரிக்கர்களைத் தன் அறிவுத்திறத்தால் ஆளமுடியும் என்றெல்லாம் இந்தியர்கள் இந்தியாவை யோசிக்கவும்- இந்தியாவை நேசிக்கவும், ஏன் இந்தியாவை மட்டுமே சுவாசிக்கவும் ஒரு இளந்துறவி எழுந்தருளியிருக்கிறார் என்பதே அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருந்தது.
No comments:
Post a Comment