சென்ற கட்டுரையில் சுதந்திர இந்தியாவின் மொழிக் கொள்கையில் இந்தியாவிற்கு முன் மாதிரியாக இருந்த சோவியத் யூனியனில் நடைபெற்ற ரசிய பேரினவாத கொள்கையும் அதனால் ஏற்பட்ட ரத்த சரிதத்தையும் பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் இந்தியாவில் மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிக்க நடந்த வரலாறு பற்றியும் அந்த ஆபத்தை தமிழ் நாட்டில் எண்ணற்ற போராளிகளின் தியாகத்தால் எவ்வாறு தடுத்து நிறுத்தபட்டது என்றும் பார்ப்போம்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட வரை ஆங்கிலம் பொது மொழியாக, இணைப்பு மொழியாக இருந்தது. ஆங்கிலம் அனைவருக்கும் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்டதால் இந்தியர்கள் உலக அறிவைப் பெற்றனர். அன்று சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூட ஆங்கில அறிவு பெற்று அதன் மூலம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சோசியலிசம், அறிவியல் என் அனைத்து அறிவையும் பெற்றனர்.
இனி இந்தி திணிப்பின் அரசியலைப் பார்ப்போம்.

சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியாவின் ஆட்சி/தேசிய மொழி பற்றிய விவாதம் தொடங்கியது. அன்றைய ஆட்சியாளர்களைப் பொருத்தவரை ஆங்கிலம் என்பது அயல்நாட்டு மொழி. அது இந்து-இந்தி-இந்தியா என்னும் ஆதிக்க வர்க்க தத்துவத்திற்கு எதிரானது. எனவே ஆங்கிலத்தை முழுமையாக நீக்கி விட்டு அந்த இடத்திற்கு இந்தியைக் கொண்டு வரவேண்டும் என்று விரும்பினர். சிறுபான்மை மொழி வளர்ச்சியையும் முடிந்த அளவு நசுக்கி விட்டு இந்தியை இந்தியா முழுதும் திணிப்பதன் மூலம் இந்தி அடிப்படையிலான இந்திய தேசியத்தை நிலைநிறுத்துவதும் அவர்களது நோக்கமாக இருந்திருக்கலாம்.
உலகமயமாதல் இல்லாத அந்தக் காலத்தில் ஆங்கிலத்தின் தேவை அந்த அளவு இருந்திருக்கவில்லை. பொதுவாக கல்லூரி படிப்பவர்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலைக்குச் செல்வார்கள். ஆங்கில மொழியில் இருந்த சில அடிப்படை புத்தகங்களை இந்திக்கு மொழி மாற்றம் செய்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளையும் இந்தி வழிப் பாடமாக மாற்றினால் ஆங்கிலம் முழுமையாக நீக்கப்பட்டு இந்தி வந்து விடும். முதலில் மத்திய, அதற்குப் பின் மாநில அரசு வேலை வாய்ப்புகளுக்கு இந்தியை கட்டாயமாக்கி, அனைத்து அரசு அலுவல்களும் இந்தியில் மட்டும் கொண்டு வந்து விட்டால் இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியை கட்டாயப் பாடமாக ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். எனவே அரசு வேலைவாய்ப்புத் தேர்வுகளில் இந்தியை முழுமையாகத் திணிப்பதும், பள்ளிக் கூடங்களில் இந்தியைத் திணிப்பதும் அடிப்படை திட்டமாக இருந்தது.
பிகார், உ.பி, ம.பி போன்ற இந்தி மாநிலங்களைச் (மற்றும் மகாராஸ்டிரா) சேர்ந்த அறிவுஜீவி அரசியல்வாதிகள் இந்தியை மட்டுமே தேசிய மொழியாக்க வேண்டும் என்று விசம் கக்கினர். இந்தி தெரியாதவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை என்று மமதையாகப் பேசினர். இது இந்தி-இந்து-இந்தியா என்ற கோட்பாட்டின் மனப்போக்கே. மிகப் பெரிய விவாதத்திற்குப் பிறகு 17வது இந்திய அரசியல் நிர்ணயப் பிரிவில் இந்தியை தேசிய மொழியாக அறிவிக்காமல் ஆட்சி மொழியாக அறிவித்தனர். சுதந்திரம் அடைந்த 15 வருடத்திற்கு ஆங்கிலமும் துணை மொழியாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. இதை முன்ஷி – அய்யங்கார் தீர்வு என்பர். இந்த முயற்சியில் தென்னகத்தைச் சேர்த்த பிராமணர் மற்றும் பிராமணரல்லாத பெரும்பான்மையான உறுப்பினர்களும் உழைத்தனர். அவர்களுடைய முயற்சியாலே இன்று ஆங்கிலமும், பிற மொழிகளும் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இல்லையென்றால் மொழிவாரி சிறுபான்மையினரின் நலன்களை முளையிலேயே கிள்ளி எறிந்து இருப்பார்கள். திராவிட இயக்கங்கள் ஆரம்பம் முதலே இந்த பாசிசவாதத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தனர்.
ஆனாலும் அந்த சட்டம், ஆங்கிலத்தை அடுத்த 15 வருடங்களுக்கு மட்டுமே அனுமதித்தது. 5 ஆண்டுகளுக்குள் மொழி கமிஷன் ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் இந்தியை எவ்வாறு இந்தியா முழுவதும் பரப்புவது என்றும் ஆங்கிலத்தை எவ்வாறு முழுமையாக நீக்குவது என்றும் முடிவானது.
பி.ஜி.கெர் தலைமையிலான மொழி கமிஷன் இந்தியை எப்படி முழுமையாகத் திணிப்பது என்று ஆய்வு செய்து இந்தியை முதன்மை மொழியாகவும், ஆங்கிலத்தை சில காலம் துணை மொழியாகவும் வைக்கலாம் என்று முடிவு செய்து அறிக்கையை ஜி.பி.பந்திடம் சமர்ப்பித்து அதையும் அவர் ஒப்பு கொண்டார்.
இந்தி தாய்மொழியாக இல்லாத மாநிலங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டு ஆங்கிலத்தின் தேவையை வலியுறுத்தி நாடாளுமன்றத்திலும், வெளியிலும் போராடினர். அப்போது தான் நேரு தன் பிரசித்த பெற்ற உறுதிமொழியை நாடாளுமன்றத்தில் கொடுத்தார். அதன் படி இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும் என்றார்.
I believe also two things. As I just said, there must be no imposition. Secondly, for an indefinite period – I do not know how long – I should have, I would have English as an associate, additional language which can be used not because of facilities and all that… but because I do not wish the people of Non-Hindi areas to feel that certain doors of advance are closed to them because they are forced to correspond – the Government, I mean – in the Hindi language. They can correspond in English. So I could have it as an alternate language as long as people require it and the decision for that – I would leave not to the Hindi-knowing people, but to the non Hindi-knowing people
அதாவது அரசியல் சாசனம் நிர்ணயித்த 15 வருட வரம்பை நீக்கி உறுதி மொழி மட்டும் கொடுத்தார். ஆனால் சட்ட ரீதியான பாதுகாப்பு தரவில்லை. இன்று அனைத்து திராவிட அரசியல்வாதிகள் குறிப்பிடும் நேருவின் உறுதிமொழி இது தான். இது கொடுக்கப்பட்ட ஆண்டு 1959.
அரசியல் சாசனம் கொடுத்த 15 வருட கால கெடு நெருங்கி வர வர அப்போதைய மத்திய அரசு அனைத்து வகையிலும் இந்தியைத் திணிக்க ஆரம்பித்தது. ஒரு புறம் அரசுப் பணியாளர்கள் அனைவருக்கும் இந்திப் பயிற்சி, ஆங்கிலத்தில் உள்ளவற்றை இந்திக்கு மொழிபெயர்ப்பு செய்வது என அனைத்தும் ஜரூராக நடந்தன. மறுபுறம் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை திராவிட இயக்கங்கள் தீவிரப்படுத்தின.

Notwithstanding the expiration of the period of fifteen years from the commencement of the Constitution, the English language may, as from the appointed day, continue to be used, in addition to Hindi,–
திமுகவினர் கேட்ட இந்த மாற்றத்தை ஏற்று கொள்ளாமல் Official Languages Act of 1963 சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பெரிய அளவில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் தொடங்கியது. இந்தி திணிப்பை எதிர்த்து அண்ணா தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார். அவருடைய ஒரு சில உரைகள்.
“If Hindi were to become the official language of India, Hindi-speaking people will govern us. We will be treated like third rate citizens”. (Anti-Hindi Imposition Rally, Chennai Marina (Madras Marina), April 29, 1963)
“Making a language (Hindi) that is the mother tongue of a region of India the official language for all the people of India is tyranny. We believe that it will give benefits and superiority to one region (the Hindi-speaking region)…. This and future generations in non-Hindi areas will suffer immeasurable hardships… Making Hindi the official language of India would destroy the age old language and culture of Tamil Nadu”. (Court Trial for burning the Constitution of India to show opposition to Hindi imposition, December 3, 1963)
ராஜ்ய சபாவில் அதிக மக்கள் பேசும் இந்தியை தேசிய மொழியாக அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்தி பேசும் பகுதி உறுப்பினர்கள் கூறியபோது அண்ணா அதிக எண்ணிக்கை கொண்ட காகத்தை தேசிய பறவையாக்காமல் அழகிய மயிலை தேசிய பறவை ஆக்கியது ஏன் என்று நயமாக பதில் பேசினார்.
நேரு ஐரோப்பிய நாடுகளில் படித்தவர். அவர் ஓரளவு பரந்த மனப்பான்மையும், தனி மனித விருப்பம் போன்றவற்றிற்கு மதிப்பளிப்பவராகவும் இருந்தார். நேரு உயிரோடு இருக்கும்வரை அவரது உறுதி மொழியும் ஓரளவு காக்கப்பட்டது.
நேரு 1964ம் ஆண்டு இறந்த பின் மீண்டும் பிரச்சினை தொடங்கியது. லால் பகதூர் சாஸ்திரி, மொராஜி தேசாய் போன்ற குறுகிய மனபான்மை கொண்ட இந்தி வெறியர்கள் கையில் அதிகாரம் கை மாறியது. அவர்களுக்கு இந்தியை முழுமையாக திணித்து ஆங்கிலத்தை வெளியேற்றுவதே கொள்கையாக ஆனது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்தினர். கீழபழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், அய்யம்பாளயம் வீரப்பன், சத்யமங்களம் முத்து, மாயவரம் சாரங்கபாணி, கீரனூர் முத்து போன்றோர் இந்தியை எதிர்த்து தீக்குளித்து மாண்டனர். மாயவரம் சாரங்கபாணி மாயவரம் A.V.C கல்லூரியில் இரண்டாம் ஆண்டு B.COM படித்துக் கொண்டிருந்த மாணவர் ‘தமிழ்த் தாய்க்காக நான் உயிர் விடுகிறேன்’ என்று கூறியபடியே உயிர் நீத்தார். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. லால் பகதூர் சாஸ்திரி, நந்தா மற்றும் மொராஜி தேசாய் போன்ற இந்தி வெறியர்கள், இந்திய ராணுவம், CRPF,பிற மாநில போலிஸ் என அனைவரையும் தமிழகத்துக்கு அனுப்பி போராட்டக்காரர்களை கண்மூடித்தனமாக கொன்று குவித்து, போராட்டத்தை அடக்க ஆணையிட்டனர். தமிழகமெங்கும் தமிழ் இளைஞர்களின் ரத்த ஆறு ஓடியது. ஆனால் அவர்களின் துணிவும், போராட்டமும் குறையவில்லை. அண்ணாமலை பல்கலைகழக மாணவர் ராஜேந்திரன் போலிசாரின் குண்டுக்குப் பலியானார். அதன் பின் தமிழகமெங்கும் போலிசார் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். தமிழகத்தில் போலிசாரின் வன்முறைக்குப் பலியான மாணவர்களின் எண்ணிக்கை 70 லிருந்து 500 வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலை கழகத்தில் மாணவர் ராஜேந்திரன் சிலை
ஹிட்லர் ஆரிய தேசியவாதம் என்ற பெயரில் மக்களைக் கொன்று குவித்தான். லால்பகதூர் சாஸ்திரி, மொராஜி தேசாய் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர் “இந்தி”ய தேசியம் என்ற பெயரில் மக்களைக் கொன்று குவித்தனர்.
காங்கிரசிலேயே காமராஜர் போன்றோர் இந்தி திணிப்பை எதிர்த்தனர். அவருடன் மாறுபட்ட கருத்து கொண்ட சி.சுப்ரமணியம் மற்றும் ஒவி.அளகேசன் போன்றோர் கூட இந்தி திணிப்பை எதிர்த்து தங்களது மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தனர்.
நிலைமை தீவிரமாவதைக் கண்டு, லால்பகதூர் சாஸ்திரி ஆங்கில மொழி சில காலம் தொடரும் என வாய்வழி உறுதிமொழி அளித்தார். நேருவின் வாய் வழி உறுதிமொழியை காற்றில் பறக்க விட்டு இந்தியைத் திணித்த லால்பகதூர் சாஸ்திரி சட்ட திருத்தத்தை ஏற்படுத்தாமல் பெயருக்கு வாய்வழி உறுதிமொழியை அள்ளி வீசினார்.
இது நடந்து கொண்டிருந்த காலத்தில், பால் தாக்கரேயுடன் மும்பை பத்திரிக்கையில் வேலை பார்த்துக் கொண்டிருத்த R.K.லக்ஷ்மணன் என்ற கேலிச்சித்திரக்காரர், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் சேர்ந்திருந்தார். ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்ளும் சட்ட திருத்தம் வெளிவராத நிலையில், அதற்காக போராடிக் கொண்டிருத்த மாணவர்களை கிண்டல் செய்து உண்மைக்குப் புறம்பான பொய்யான செய்தியைக் கொண்டு தற்போது விமர்சனத்திற்கு உள்ளான கேலிச்சித்திரத்தை போட்டார். இவ்வாறு உண்மைக்கு புறம்பான அவதூறு செய்திகளைப் பரப்புவது வட இந்தியப் பத்திரிக்கைகளின் வாடிக்கை. இதை பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் ஏற்றுக் கொண்டாலும், இந்த அவதூறு கேலிச்சித்திரத்தை சென்ற வருடம் பாடப் புத்தகத்தில் சேர்த்தது கண்டு தான் ஒட்டு மொத்த தமிழகமே கொதித்து எழுந்து உள்ளது.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மரணமடைந்த இளைஞர்களின் உடல்கள் புதைக்கப்படவில்லை. மாறாக விதைக்கப்பட்டார்கள். உண்மையில் புதைக்கப்பட்டது தமிழக காங்கிரசாரின் ஆணவமும், மக்கள் விரோதப் போக்கும், இந்தியை திணிக்க முயன்ற மொழி வெறியும் தான். 1967ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. 1967ல் காங்கிரசுக்கு கட்டபட்ட சமாதி இன்றுவரை தமிழகத்தில் உறுதியாக உள்ளது!

1967ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி, 1963ம் ஆண்டு சட்டத்தில் “virtual indefinite policy of bilingualism” என்ற ஷரத்து சேர்க்கப்பட்டு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ஜனவரி 8, 1968ம் ஆண்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டம் நடைமுறைப்படுத்தபட்டது. கடைசியாக ஒட்டுமொத்த தமிழக மக்களின் கனவு நினைவேறியது.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழக மக்கள் மற்றும் திராவிட இயக்கத்தின் பங்கை பற்றி இந்த கட்டுரையில் பார்த்தோம். இந்தி திணிப்பை தடுத்ததின் பின்ணனியில் இருந்த சில தமிழக காங்கிரஸ் தலைவர்களின் பங்கை பற்றியும் , இந்தி எதிர்ப்பு போராட்டம் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் இனி வரும் கட்டுரைகளில் பார்ப்போம்.
No comments:
Post a Comment