
ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் 1947 லேயே விடுதலை அடைந்து விட்டோம். இந்த விடுதலையை இன்று நாம் எந்த நோக்கத்தில் அணுக வேண்டி இருக்கிறதென்றால், நீ ஏன் இன்னும் என்னை ஆண்டுகொண்டிருக்கிறாய். நீ சென்றுவிடு, என்னை அடிமைப்படுத்துவதற்கு உன் மொழியே போதும் என்று ஆங்கிலேயனை அனுப்பி வைத்துவிட்டு அவன் விட்டுச் சென்ற ஆங்கிலத்திற்கு இன்னும் நாம் அடிமையாய் வாழும் சமூகமாய் நாம் இருக்கிறோம்.

தன் பிள்ளைகளில் ஆங்கிலம் பேசினால் தான் அறிவாளி என்ற மூடநம்பிக்கையின் இருப்பிடமாய் தமிழகம் திகழ்கிறது என்று கூறுவதில் வியப்பில்லை. எனக்கு விபரம் தெரிந்த நாளில் என் அப்பாவை அய்யா என்றும் அம்மாவை அம்மா என்றும் அழைத்தேன். ஆனால் தற்போது வந்த தலைமுறையானது அப்பாவை டாடி என்றது பின் டாட்ஸ் என்றது தற்போது டாட் எனச் சுருக்கி விட்டது. இதே நிலைதான் அம்மாவுக்கும் அம்மாவை மம்மி என்றது பின் மம்ஸ் என்றது தற்போது மம் எனச் சுருக்கி விட்டது.
பள்ளிகளில் தமிழ்:

தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அறிவுறுத்தப்படும் பெரும் அறிவுரை என்னவென்றால் “தமிழில் பேசினால் தண்டனை வழங்கப்படும்” என்பதே சில தனியார் பள்ளியின் வளாகத்திற்குள் நான் சென்ற போது ஆங்காங்கே இந்த அறிவிப்புகள் பதாகைகளில் தொங்கின. இதனால் தமிழ் பாட வேளையைத் தவிர பிற நேரத்தில் எக்குழந்தையும் தமிழில் பேசுவதை தவிர்த்து வருகின்றனர்.
ஆங்கிலம் என்பது ஒரு மொழியே தவிர அறிவு அல்ல, ஆங்கிலம் படித்தால் நாம் உயர்வான வாழ்க்கை வாழலாம் என்றால் ஆங்கிலம் பேசுகின்ற பிற நாடுகளில் உள்ள மாடுமேய்க்கும் தொழிலாளர்கள், சாக்கடையில் தூர் வாரக் கூடியவர்கள் போன்று அடிமட்ட நிலையில் பணியாற்றுபவர்கள் கூட ஆங்கிலம் பேசுகிறார்கள். அதற்காக இந்தி மொழி கற்றால் உயர்வானது என்றார்கள். தற்போது இந்தி மொழி பேசும் வட மாநிலத்தவர்கள் இங்கு பேல்பூரி விற்பதும், கட்டிடப் பணியாற்றுவதும், ஏன் பிச்சை எடுக்கும் தொழிலில் கூட ஈடுபட்டு வருகின்றனர். ஆக ஒரு மொழியை நாம் கற்பதால் நாம் அறிவாளியாகிவிடலாம் அல்லது உயர்ந்த சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும் என்பது அறியாமையின் வெளிப்பாடே தவிர இதை வேறு எப்படிக் கூறுவது?.

ஆலயத்தில் இல்லாது போன தமிழ்:

காட்சி ஊடகங்களில் தமிழ் நிலை:

ஆங்கிலத்தை நுனி நாக்கில் பேசாத அல்லது ஆங்கிலத்தையும், தமிழையும் கலந்து பேசாத சின்னத்திரை, ஊடக நிகழ்ச்சி தொகுப்பாளரை நாம் காண்பது அரிதாகி உள்ளது. இவர்களுக்கு லகர, ழகர வேறுபாடு தெரியாமலேயே தமிழைக் கொலை செய்து வருகின்றனர்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினியாக இருக்கும் திவ்யதர்சனி அவர்கள் நடத்தும் “காபி வித் டிடி” என்ற நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இவர் பேசும் தமிழை கொஞ்சம் பார்ப்போம்.
“ஹாய், வணக்கம் அன்ட் வெல்கம், இது காஃபி வித் டிடி, சிவகார்த்திகேயன் ஸ்பெஷல், வழங்குபவர்கள் என்.ஏ.சி.ஜுவல்லர்ஸ் இப்போது டி.நகரிலும். வெல், விநாயகர் சதுர்த்தி அன்னிக்கே என்னுடைய ஷோவ start பண்றதில் ரொம்ப சந்தோசம். பட் அதவிட சந்தோஷமான விசயம் நான் பார்த்த வளர்ந்த my friend இப்போ ஒரு சக்சஸ்புல் எங் ஹீரோவா மாறி அவருடைய சக்சச எங்களோட செலிபிரேட் பண்றதுக்காக இங்க வந்திருக்காங்க. பட் ஸ்டில் அவரப்பத்தி ஓரிரு வார்த்தைகள் சொல்லியாகனும். இவர் பஃர்ஸ்ட் ஒரு கண்டஸ்டன்டா உள்ள வந்தாரு, அப்புறம் செலிபிரட்டி கண்டஸ்டன்டா ஆனாரு, அப்புறம் ஆங்கர் ஆனாரு, அப்புறம் பிலிம்ல ஹீரோவா ஆனாரு இப்போ ஏலாவது பிலிம் பண்றாரு. இவர இப்போ டெலிவிசனோடு பிரைடுனு சொல்லலாம் நாளைக்கு சில்வர் ஸ்கிரினோட புரோமிஸ் அன் வெரி ஹேப்பி டூ வெல்கம் சிவகார்த்திகேயன் எனத் தங்கிலீசில் பேசுகிறார்.
நீயா நானா கோபிநாத் தமிழ்:

இவ்வாறு தமிழை ஓரளவு நன்கு பேசக்கூடியவரான நீயா நானா கோபினாத் கூட தமிழ்+ஆங்கிலத்தைக் கலந்துதான் நிகழ்ச்சி நடத்தி வயிறு பிழைக்க வேண்டியுள்ளது. தமிழை இங்கு எவரும் சரியாகப் பேச அனுமதிக்க வில்லையா? அல்லது பேச கூச்சப்படுகிறார்களா? இல்லை பேசினால் நமக்கு கௌரவக் குறைச்சல் ஏற்பட்டு விடுமோ என்ற நிலையில் தான் இவர்களின் நிகழ்ச்சித் தொகுப்புகள் உள்ளன.
தமிழ் தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சியின் பெயர்கள்:

சன் தொலைக்காட்சி:
சாம்பியன்ஸ், சன் சிங்கர்ஸ், டாப் டென் மூவிஸ், சன்டே கலாட்டா, குட்டீஸ் சுட்டீஸ், சூப்பர் குடும்பம், சொல்லுங்க பாஸ்.
ராஜ் தொலைக்காட்சி:
சூப்பர் டான்சர்ஸ், மெகா டென் மூவிஸ், கோலிவுட் பஃஜ், மூவி பெஸ்டிவல்
கேப்டன் தொலைக்காட்சி: அட்லஸ், கடுப்பேத்துறாங்க மைலார்டு, கோலிவுட் ஹிட்ஸ், ஸ்டார் ஹிட்ஸ்.
ஜெயா தொலைக்காட்சி:
டெலி சீன், டேக் பைஃவ், செம சீன் மா.
இவ்வாறு தமிழ் நாட்டில் தமிழர்களுக்காக இயங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பெயாகளை ஆங்கிலத்தில் வைத்துவிட்டு, நிகழ்ச்சியினுள் அரைகுறை தமிழில் பேசி வழங்கும் இந்த நிகழ்ச்சிகள் தமிழனுக்கும், தமிழுக்கும் எதிரானது என்பதை கூறுவதில் பிழை என்ன இருக்கிறது?
தமிழும் தமிங்கலமும்:
வினையாற்றும் சொற்களை எளிய தமிழில் ஒரே சொல்லில் குறிப்பிடலாம். ஆனால் நாமோ ஆங்கிலம் கலந்து இரு சொற்களாக பயன்படுத்துகிறோம். ஏளிமையான தமிழ் இருக்க தமிங்கலம் எதற்கு?
தமிழ் | தமிங்கலம் |
திற | open பண்ணு |
கட | Cross பண்ணு |
அழை | Call பண்ணு |
தொடங்கு | Start பண்ணு |
மூடு | Close பண்ணு |
தூக்கு | Lift பண்ணு |
சந்தி | Meet பண்ணு |
ஓட்டு | Drive பண்ணு |
அழுத்து | Press பண்ணு |
பதிவேற்று | Upload பண்ணு |
நிறுத்து | Stop பண்ணு |
எளிமையான நம் தாய்மொழி தமிழ் இருக்க இந்த பாழாய்ப்போன பண்ணு தமிழ் எதற்கு நமக்கு?

இன்று இப்படித்தான் அவனவன் ஆங்கிலமும் இல்லாமல் தமிழும் இல்லாமல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மேலே கூறியதை “என் மனைவி தாதியாய் வேலை செய்றாங்க. நான் ஒரு பொறியியலாளர், என் மகன் கல்லூரியில் படிக்கிறான், என் மகளுக்கு திருமணமாகிவிட்டது. அவளுக்கு இரண்டு குழந்தைகள். என் மனைவி நல்லதொரு மருத்துவமனையில் வேலை செய்றாங்க. நல்ல சம்பளம். போன மாதம் தீபாவளிக்கு கூட கடைக்குப் போனோம். நல்லதா பார்த்து வாங்கினோம் நல்ல விலை. ரொம்ப மகிழ்ச்சி.
எனத் தமிழரிடம் தமிழனே பேசத் தயங்குகிறான். இரண்டு கன்னடக்காரன் சந்தித்துக் கொண்டால் கன்னடத்திலேயெ பேசிக்கொள்கிறான். இரண்டு மலையாளிகள் சந்தித்துக் கொண்டால் மலையாளத்திலேயே பேசிக் கொள்கின்றனர். ஆனால் இரண்டு தமிழன் சந்தித்துக் கொண்டால் தான் ஆங்கிலத்திலேயே பேசிக் கொ(ல்)ள்கிற அவலம் நம் தமிழ் நாட்டில் தான் நடக்கிறது.
பணத்திற்காகவும், சுய கௌரவத்திற்காகவும், பகட்டான வாழ்விற்காகவும் தாய் மொழியோடு பிற மொழியை சேர்த்துப் பேசுவது தாய் மொழியைக் கொல்வதற்கு ஒப்பாகும். தமிழ் எழுத்தாளர்கள், வாசகர்கள், தமிழ் இன உணர்வாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் ஓரணியில் நின்று தமிழ்ப்பணி செய்தால் மட்டுமே சிறந்த மாற்றத்தை தமிழ்ச் சமூகத்தில் உருவாக்க முடியும்.
No comments:
Post a Comment