Sunday, 14 September 2014

அருகிவரும் நிலத்தடி நீரால் பெருகி வரும் துயரங்கள்

nilaththadi neerஉலக வரைபடத்தில் நீரின் பரப்பளவு அதிகம். நிலத்தின் பரப்பளவு குறைவு என்பது அனைவரும் நன்கு அறிந்த விடயம். ஆனால் இதில் இயற்கை ஒரு மாபெரும் வஞ்சனை செய்துவிட்டது எனலாம். உலக நீர் பரப்பளவு அதிகம் என்றாலும் இதில் நல்ல தண்ணீர் என்பது மிகக்குறைவு. உப்புநீர்தான் மிக அதிகம்.
இயற்கை நமக்குத்தந்த இச்சூழலில் வெப்பமயமாதல் விளைவின் காரணமாக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மழையில்லாமல் இயற்கை வஞ்சித்து வருவதால் ஆறு, குளம், குட்டை, ஏரி, கண்மாய் என்ற நீர் நிலைகள் எல்லாம் வற்றிக் காயந்து கிடக்கிறது. முதலில் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்ற நிலை மாறி, இப்போது குடிக்கவே தண்ணீர் இல்லை என்ற நிலையை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
nilaththadi neer2சென்ற மாதம் சிவகங்கை, காளையார் கோவில், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு நான் சென்றிருந்த போது இவ்வூரில் வாழும் மக்கள் குடிநீர் இல்லாமல் படும் துயரத்தைக் காண நேர்ந்தது. ஒரு குடம் குடிநீர் 25 ரூபாய்க்கு தெருவில் கூவிக் கூவி விற்பனை செய்யும் அவலத்தை நேரில் கண்டேன்.
கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற பேரில், புதுப்புது பெயரில் குடிநீர்களை குப்பியில் அடைத்து வைத்து வியாபாரம் செய்து வருவது ஒருபுறம் என்றால், கிராமத்தில் கூட அந்த நிலையை மக்கள் அனுபவிக்கின்றனர் எனும்போது வருத்தமாகவே இருந்தது.
கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் மழையின்மை காரணமாக ஆழ்துளைக் கிணறுகள் மூலம் அதிக நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது.
தற்போது தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், திருப்பூர், நீலகிரி, நெல்லை, தூத்துக்குடி, வேலூர் ஆகிய இருபது மாவட்டங்களில் ஒரு ஆண்டில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இவற்றுக்கு மாறாக சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலூர், கரூர், நாகை, ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நிலத்தடிநீர் மட்டம் சற்று அதிகரித்துள்ளது என்பது ஆறுதலான விடயமாக உள்ளது.
nilaththadi neer3நிலத்தடி நீர் வற்றுவதற்கு மனித சமுதாயம் ஒரு காரணம் என்றாலும், மறுபுறம் நம் மண்ணில் அதிகம் விளையும் வேலிகாத்தான் முள் மரங்களைக் கூறலாம். அமெரிக்க தாவரவியல் பூங்கா “வளர்க்கக் கூடாத நச்சு மரங்கள்” என்று ஒரு தனி தாவர பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது இந்த வேலிகாத்தான் முள் மரங்களே.
சாதாரணமாக இந்த முள் மரங்கள் தமிழகத்தின் மூலை, முடுக்கு, இண்டு இடுக்கெல்லாம் விளைந்து நிற்பதைக் காணலாம். மண்ணில் அதிக நீரை உறிஞ்சி நிலத்திற்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வேலிகாத்தான் முள் மரங்களை ஆணிவேரோடு வெட்டி வீழ்த்தி விட்டால் கூட ஓரளவு நிலத்தடி நீர் வளம் பாதுகாக்கப்படும்.
இன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல குடிநீரே கிடைப்பதில்லை. பல இடங்களில் நீரானது உப்புத் தன்மை வாய்ந்ததாகவே உள்ளது. மறுபுறம் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. அப்படியே பெய்தாலும் நிலத்தடி நீரைப் பெருக்க போதிய கட்டமைப்பு இங்கு இல்லை.
தமிழகத் தலைநகரான சென்னையிலும், ராமநாதபுரத்திலும் கடலுக்குப் போய் விரயமாகும், நீரின் அளவு அதிகம். ஆனால் நிலத்தடி நீரைப் பொதுமக்கள் பயன்படுத்துவதிலும், வியாபார நோக்கில் பலர் மிகுதியாக நீரை உறிஞ்சுவதிலும் காட்டுகிற அக்கறையை நிலத்தடி நீரைப் பெருக்குவதில் காட்டுவதில்லை.
அடுத்த 15 ஆண்டுகளில் நம் நாட்டில் 60 சதவீத நிலத்தடி நீர் வற்றிப் போகும் நிலை உள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. நம்நாடு விவசாய நாடு என்பதால் ஆற்றுநீர் பாசனத்தை விட நிலத்தடி நீர் மூலம் தான் அதிகம் பயிர்சாகுபடி செய்யப்படுகிறது. இன்று இங்கு நகரங்களில்தான் நிலத்தடிநீர் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. உலகிலேயே நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்துவது நம் நாடுதான் என்கிறது ஒரு புள்ளிவிபரம்.
நம்நாட்டில் 5,723 நிலத்தடி நீர் பாதைகள் உள்ளன. இவற்றில் 1615 பாதைகளில் நீரோட்டம் குறைந்துவிட்டது. இதில் 108 பாதைகள் அதிக அளவில் நீர் உறிஞ்சப்பட்டதால் வற்றிப்போய்விட்டன.
nilaththadi neer6மதுரையிலிருந்து சென்னைக்கு பயணப்பட்டு வரும்போது வைகை, காவிரி, பாலாறு, செம்பரம்பாக்கம் ஏறி என எந்த ஆற்றுப்படுகையும் நீரில்லாமல் வறண்டு போய் புதர்களாக காட்சியளிப்பதைக் காண முடிந்தது. தமிழகத்தில் நீர் இல்லாத பெரும்பாலான விவசாயிகள், கூலிகள் எல்லாரும் தற்போது பஞ்சு ஆலைகளுக்கும், ஆந்திராவிற்கும் முறுக்கு, மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், கேரளாவிற்கு காட்டு வேலை செய்யும் கூலி ஆட்களாகவும் கூட்டம் கூட்டமாகச் செல்வது தற்போது நான் கண்டுவந்த அதிரும் உண்மை.
விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த மக்கள் இப்படிப்பட்ட துயரை அடைவார்கள் என்று எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. இயற்கையின் விளையாட்டில் விவசாயிகள் இவ்வாறு பந்தாடப்பட்டு வருகின்றனர்.
nilaththadi neer7வடஇந்தியாவில் கரைபுரளும் அளவிற்கு பெய்யும் மழையானது தென்இந்தியாவில் கண்ணீர்புரளும் அளவிற்கு வைத்துவிட்டது. இந்நிலையை மாற்ற மக்களுக்கு இயற்கை சார்ந்த போதிய விழிப்புணர்வை அரசு வழங்கிட வேண்டும். தற்போது மத்திய அரசே பாராட்டிய மழை நீர் சேகரிப்பு போன்ற மகத்தான திட்டத்தைத் தந்த நமது மாநில அரசு, அனைத்து மாட்டங்களிலும் நீர் ஆதாரத்தைப் பெருக்கவும், நிலத்தடி நீர் மட்டம் பெருகவும் விரைவான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு மக்களும், மத்திய அரசும் போதிய ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே நாம் மட்டுமல்லாது நமக்கு பின்னால் வரும் சந்ததியினரும் பயன் பெறுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும்.

No comments:

Post a Comment