
பின்பு தரையில் படுத்திருந்த மகன் படாரென எழுந்து சுற்றி வேடிக்கை பார்க்கும் மக்களிடம் தட்டு ஏந்திப் பிச்சை எடுப்பார். தந்தையோ தொடர்ந்து தன் மீது சாட்டையால் அடித்துக் கொண்டிருப்பார். இந்த நிலையைக் கண்டு இரக்ககுணம் கொண்ட பொதுமக்கள் தங்களால் முடிந்த சில்லறைகளை வீசி விட்டுச் செல்வர்.
இவ்வாறு தன்னைத் தானே வருத்திக் கொண்டு ஒரு சாண் வயிற்றுக்காகப் போராடும் இம்மக்களைப் பற்றியும், அவர்களின் அன்றாட வாழ்க்கை முறை பற்றியும் இங்கு எத்தனை பேருக்குத் தெரியும்?
நாடோடிகளாக வாழும் இந்த இனத்தவர்களுக்கு “சோளகா” என்று பெயர். இவர்களின் பூர்வீகம் ஆந்திர மாநிலம் ஆகும். இவர்களின் பெரும்பாலோர் தெலுங்கு மொழி பேசுபவராக உள்ளனர். மதுரையின் கிழக்குப் பகுதியில் உள்ள சிவகங்கை செல்லும் பிரதான சாலையில் கருப்பாபூரணி என்ற ஊர் உள்ளது. இவ்வூரின் வழியே உள்ளே சென்றால் சி.கே. நகர் என்ற பகுதி உள்ளது. இந்த நகரில் ஒதுக்குப்புறத்தில் சாட்டையடி காலனி அமைந்துள்ளது. இங்கு பெரும்பாலான மக்கள் தாங்கள் உடலில் சாட்டை அடித்து வாழ்வதால் இந்தக் காலனிக்குப் பெயர் சாட்டையடி காலனி எனப் பெயர் வந்தது.
இந்தச் சோளகா இனத்தின் தலைவராக இருப்பவர் எல்லப்பன் என்பவர். இவரைச் சந்திக்க நாம் கையில் ஒரு பேனா, நோட்டு, கழுத்தில் புகைப்படக் கருவியோடு சென்றதும் நம்மைக் கண்டு இம்மக்கள் ஒதுங்க ஆரம்பித்தனர். எவரும் பேசவில்லை. அவர்களுக்கு ஏதோ பெரும் துரோகம் இழைத்து விட்டவரைப் போலவே கண்டனர். எல்லப்பனைக் கண்டு உங்கள் பூர்வீகம் பற்றிக் கூறுங்கள் இந்த மாதிரி சிறகு இணைய இதழுக்காக வந்திருக்கிறோம் என்று கூறியதும் மனிதர் பொரிந்து தள்ளினார் என்னிடம்.
“ஆமா இப்படித்தாம்பா பத்திரிக்கைக்காரர்களும், தொலைக்காட்சிக்காரர்களும் வந்து எங்களைக் கண்டு நேர்காணல் எடுத்துச் சென்றனர், இதன் பிறகு உங்கள் வாழ்க்கையே மாறிவிடும் என்றனர். ஆனால் இதுவரை எங்களின் இந்த அவல வாழ்க்கை மாறவில்லை. என்னவோ புதுசா கேட்க நீ வந்துட்ட என்றார் எல்லப்பன். அவர்களின் மனச்சூழலை, வலியை புரிந்துகொள்ள முடிந்தது. பல பேரிடம் தம் குறைகளைக் கூறி ஏமாந்திருந்த இம்மக்களிடம் நாமும் ஆறுதல் வார்த்தை கூறி ஒரு வழியாக பேச சம்மதம் தெரிவிக்க வைத்தோம்.
சாட்டையடித்தலைவர் எல்லப்பன்:

பிச்சை எடுக்கும் போது எவராவது சும்மா பிச்சை போடுவார்களா? ஊனமாக இருந்தால் அதைக்காட்டி பிச்சை எடுத்து வாழ்ந்திருப்போம். ஆனால் எங்கள் கை கால்கள் நன்கு இருந்தது. அதனால் பிச்சை பெறுவதற்காக எவரும் செய்யாத புதுமையான வழியில், பிறர் இரக்கப்படும் வகையில் எங்களை நாங்களே ஊனப்படுத்திக் கொண்டு வாழ வேண்டிய நிலைக்கு வந்தோம். இதன் காரணமாக, எங்களை நாங்களே பொது மக்கள் மத்தியில் சாட்டையால் அடித்துக் கொண்டு பிச்சை பெற்றோம். பிச்சை போடும் மக்களின் இரக்கத்திற்கு இலக்கணமாக வேண்டி கையில் கத்தியால் கிழித்துக் கொண்டு அந்த ரத்தத்தை எங்கள் பிள்ளைகளின் வயிற்றில் விட்டோம். இன்னும் இரக்கப்பட்டு மக்கள் அதிகச் காசுகளைப் போட்டனர்.

உங்கள் தொழில் ரகசியம்:
இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. இந்த வேலையை எங்கள் இனத்தவரைத் தவிர எவரும், எங்கும் செய்ததில்லை, செய்யவும் முடியாது. ஒரு நாள் முழுதும் இப்படிச் சாட்டையடித்து, ரத்தம் சிந்தினால் அன்று ரூ.50 முதல் ரூ.400 வரை கிடைக்கும். இதில் ஒரு சிரமம் என்னவென்றால் சென்ற ஊருக்கே திரும்பிச் சென்று இந்த நிகழ்வை நிகழ்த்தினால் எவரும் வியந்து காசு போடமாட்டார்கள். பார்த்ததையே திருப்பி எவரும் பார்க்க மாட்டார்கள். அதனால் புதுப்புது ஊர்களுக்குச் சென்று இதை நிகழ்த்தும் போது பார்க்கும் மக்கள் வியந்து பணம் போடுவார்கள்.

சோளகா திருமண முறை:
எங்கள் சோளகா இன வழக்கப்படி நாங்கள் 5 வயது இருக்கும் போதே இவள் எங்களுக்குத்தான் என வெற்றிலை பாக்கு மாற்றி சம்பந்தம் பேசிக் கொள்வோம். இது எதற்கு என்றால் நாளை இந்தப் பெண்ணை எவரும் சம்பந்தம் பேச வர மாட்டார்கள். தவிர இந்தப் பெண்ணை எவரும் சீண்ட மாட்டார்கள். இதனால் அந்தப் பெண்ணின் கற்புப் பாதுகாக்கப்படுகிறது. இப்பெண் வயதிற்கு வந்ததும் சிறு வயதில் நிச்சயம் செய்த உரியவருக்குத் திருமணம் செய்து கொடுப்போம்.
திருமண நாளில் பெண் வீட்டார், ஆண் வீட்டாருக்கு வரதட்சணை, சீர்வரிசை எனக் கொடுக்கும் பழக்கம் எங்கள் இனத்தில் இல்லை. மாறாக மணமகன் வீட்டாரே திருமணத்தின் அனைத்துச் செலவையும் ஏற்றுக் கொண்டு, பெண்ணுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுத்து பெண்ணைக் கட்டிக்கொள்ள வேண்டும். நான் இளைஞனாக இருக்கும் போது பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்குச் சாராயம் வாங்கிக் கொடுக்க வேண்டும். அதே போல் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்கு சாராயம் வாங்கிக் கொடுக்க வேண்டும். இது எங்களின் ஐதீகம்.
ஒருவேளை இதில் எவரேனும் ஒருவருக்கு சாராயம் வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் ஊர்போது மக்கள் மத்தியில் எங்கள் மானம், மரியாதை போய்விடும். ஆனால் இன்று எங்கள் இன இளைஞர்கள் மத்தியில் இந்தப் பழக்கம் இல்லை. பீடி, சிகரெட் குடிக்காமல் அனைவரும் திருந்தி வாழ்கிறார்கள்.

சோளகா குழந்தைகளின் படிப்பு :
உங்கள் இன குழந்தைகளின் படிப்பு பற்றி கூறுங்கள்? என்று நாம் கேட்டது தான் தாமதம். எல்லப்பன் அவர்கள், எல்லையில்லா கோபத்திற்கே சென்று விட்டார். கடந்த 120 வருடமாக நாங்கள் கை நாட்டே போடும் இன மக்களாகவே இருந்து விட்டோம். மழைக்குக் கூட பள்ளிக்கு ஒதுங்காத நாங்கள், தற்போது எங்கள் குழந்தைகளாவது படித்து நன்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தில், எங்கள் இனத்திலேயே என் மகன் இரண்டு பேரை பள்ளியில் சேர்க்கச் சென்றேன். சாதிச்சான்றிதழ் இல்லாமல் சேர்க்க முடியாது என்றனர். நான் அவர்களிடம் கடும் வாக்குவாதம் செய்து ஒரு வழியாக என் மகன் இரண்டு பேரை பள்ளியில் சேர்த்து விட்டேன்.
10 ஆம் வகுப்பு வரை இருவரும் சாதிச்சான்றிதழ் இல்லாமலே படித்தார்கள். ஆனால் அதற்கு மேல் படிக்க வேண்டும் என்றால் சாதிச் சான்றிதழ் கட்டாயம் வேண்டும் எனக் கண்டிப்புடன் கூறிவிட்டனர்.
நாங்களும் சாதிச்சான்றிதழ் வாங்குவதற்காகத் தாலுகா அலுவலகம், பஞ்சாயத்தார், மாவட்ட ஆட்சியர், எனப் பல பேரைப் பார்த்தும் இது வரை இச்சான்றிதழ் கிடைக்காததால் 10 வது முடித்த இரண்டு பெரும் இன்று படிக்க முடியாமல் எங்கள் குலத்தொழிலையே செய்யத் தொடங்கி விட்டனர். சாதிச்சான்றிதழ் கேட்டுக் கடந்த 10 வருடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தி விட்டோம்.
சில அரசு அதிகாரிகள் எங்களிடம் சாதிச் சான்றிதழ் தர முடியாது. அப்படி இதற்கு முன் உங்கள் இனத்தில் எவரேனும் சாதிச்சான்றிதழ் வாங்கி இருந்தால் கொண்டு வந்து காட்டுங்கள் நான் தருகிறேன் என்றார். தமிழ் நாட்டிலுள்ள 7 மாவட்டத்தில் வாழும் எங்கள் இன மக்களில் இது வரை ஒருவருக்குக் கூட சாதிச்சான்றிதழ் வழங்கியதில்லை. அதனால் நீங்கள் தான் எங்கள் குழந்தைகளின் எதிர்கால படிப்பை கருத்தில் கொண்டு இச்சான்றிதழ் வழங்க வேண்டும் என மன்றாடி நாங்கள் அந்த அதிகாரியிடம் கேட்டும், இன்றுவரை அந்த அதிகாரியும், இந்த அரசும் எங்களுக்கு இரக்கம் காட்டவில்லை.
இதனால் இன்று எங்கள் இனக் குழந்தைகள் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்கின்றனர்.
இதனால் 10 ம் வகுப்பை நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து முடித்தும் சாதிச்சான்றிதழ் இல்லாததால், மேல் வகுப்பிற்குச் சென்று படிக்க முடியாமல் மீண்டும் எங்கள் குலத்தொழிலையே பார்க்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் இந்த ஓட்டு கேட்பதற்கு மட்டும் எங்கள் மீது தனிப்பாசம் கொண்டு வரும் நபர்களிடமும் முறையிட்டு விட்டோம். உங்களுக்கு அதை நான் செய்து தருகிறேன் என பொய் வார்த்தை கூறிச்சென்ற அவர்கள் எங்களை இதுவரை என்னவென்று எட்டிக் கூடப்பார்க்க வரவில்லை.

எங்கள் ஆசை, கனவு எல்லாம் எங்களைப் போல் எங்கள் குழந்தைகளும் ஆகிவிடக்கூடாது, சமுதாயத்தில் அவர்களும் படித்துப் பெரிய நிலைக்கு வரவேண்டும் என்பதே என்று இவர் எல்லாம் கூறி முடிக்கும் போது என்னைச் சுற்றி 60-க்கும் மேற்பட்ட மக்கள் ஏக்கத்தோடு நம்மைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இதன் மூலமாவது நமக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்து விடாதா? என்ற ஏக்கம் அவர்களின் கண்களில் தெரிந்ததைக் காண முடிந்தது. ஆசையோடு ஒரு அம்மா ஒரு சொம்பு நீர் குடிக்கக் கொடுத்தது. வாங்கிக் குடித்து விட்டு மனபாரத்தொடு அவர்களை விட்டுப் பிரிந்தோம்.
No comments:
Post a Comment