பெண்களின் உயர்கல்விக்காக, அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ‘தாலிக்குத் தங்கம்’ மற்றும் ‘திருமண நிதி உதவித்’ திட்டங்கள் தற்காலத் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளன. ஆனால் 35 ஆண்டுகளுக்கு முன்னர், இது போன்று பொருளுதவி வழங்கி ஊக்குவிக்கும் முயற்சி இல்லாமலே பெண்கள் உயர் கல்வி பெற்று முன்னேற ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. அதனை வழங்கியது ஒரு கல்விமுறை மறுசீரமைப்பாகும். அந்த வாய்ப்பினை செவ்வனே பயன்படுத்தி பெரும்பான்மையான மகளிர் உயர்கல்வி முடித்து, பணிபுரிந்து, தங்களையும், தங்கள் குடும்பத்தையும், தங்களது சந்ததியினரையும் முன்னேற்றிக் கொள்ள வாய்ப்புக் கிட்டியதை இந்த உலக மகளிர்தின நாளில் திரும்பிப் பார்க்க விரும்புகிறேன்.
இந்த நூற்றாண்டில் உயர் கல்விக்குத் தடை என்றால், ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதமின்றி அது பொருளாதாரம் ஏற்படுத்திய இடையூறாக இருக்கிறது. ஆனால் சென்ற நூற்றாண்டில் இருந்த காரணங்கள் வேறு. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெண்கள் எதிர் கொண்ட தடைகள் வெவ்வேறு. சிலதடைகள் ஆண் பெண் இருவருக்கும் பொது. சில பெண்களுக்கே உரித்தானது. அவையாவும் பெண் கல்விக்கு அளிக்கப்படாத முக்கியத்துவம் என்ற ஒரு பொது வகையில் அடங்கிவிடும்.

ஆண் தேர்வில் தவறினால் அது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று முயன்று ஆண்பிள்ளைகளை பெற்றோர் நெருக்கடி கொடுத்துப் படிப்பை முடிக்க வைத்தனர், உயர் கல்வி கற்க வைத்தனர். ஆனால் அதுவே பெண் தேர்வில் தவறினால், சரி இதற்கு மேல் உனக்கு படிப்பு ஏறாது போலிருக்கிறது, உனக்குத் திருமணம் செய்து வைத்து என் கடமையை முடித்துக் கொள்கிறேன் என்று கையைக் கழுவிவிடும் நிலைமையில் முடிந்தது. ஆனால் இதன் விளைவென்னவோ பெண்களுக்கு அடிப்படை பள்ளிக் கல்வியும், உயர்கல்வியும் தடைபட்டதில்தான் முடிந்தது.
ஒரு தொண்ணூறு ஆண்டுகள் பின்னோக்கிப் பயணித்தால், பெண்களின் கல்வி நிலை இருந்த அவலநிலையை பாரதி போன்றோர் பாடிச் சென்றுவிட்டனர்.
“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று
எண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்”
என்று அவரால் இவ்வாறு ‘கற்பனையில்’ மட்டுமே பாடிடும் நிலை இருந்த காலமது. ஆனால் இன்று அது உண்மையாகிவிட்டது. அன்றைய நிலைக்கும் இன்றைய நிலைக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த மாற்றங்களோ ஏராளம்.
ஒரு அறுபது ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்தால், பெண்களுக்கு அன்று 1950 களின் மத்தியில் இருந்த தடைகள் சமுதாய மனப்பான்மையின் அடிப்படையிலானதும், உயர் கல்விக்கு ஆதரவான சரியானக் கட்டமைப்புகளும் இல்லாமல் இருந்திருப்பதும் தெரிய வரும். சில சமயங்களில், உயர் கல்வி மட்டுமல்ல, இவை பள்ளிப் படிப்பையே தடை செய்த சூழல்களாகவும் அமைந்தன.

இந்த நிலையைத்தாண்டி வெளியே வந்த பெண்கள் சமுதாயத்தில் உயர் மட்டக் குடும்பங்களாகக் கருதப்பட்டக் குடும்பப் பெண்கள். இவர்கள் உயர்நிலைப் பள்ளி வரை தடையின்றிப் படிக்க முடிந்தது. இவர்களும் பெண்கல்வி எதற்கு என்ற சமுதாயகட்டுபாட்டைத் தாண்டினாலும் உயர் கல்விக்கேற்ற வசதியான சூழ்நிலையும், அதற்கேற்ற கட்டமைப்பற்ற சமுதாயத்தால் உயர்நிலைப் பள்ளியுடன் கல்வியை நிறுத்த வேண்டிய முடிவை எதிர் கொண்டார்கள். பணம் கட்டிப் படிக்க வைக்க வேண்டிய நிலையில் சகோதர்கள் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. பெண் புறக்கணிக்கப் பட்டாள்.
அடுத்து அக்காலம் கல்லூரிகளும் பல இல்லாத காலம் வேறு, வெளியூருக்கு அனுப்பி, விடுதியில் தங்கி பெண்கள் கல்வி கற்பதை 60 ஆண்டுகளுக்கு முன்னர் பலகுடும்பங்கள் நினைத்தும் பார்த்துச் சகித்துக் கொள்ள முடியாத மனநிலையில் இருந்தனர். அக்காலக் கட்டத்தில் உயர்நிலைப் பள்ளி முடித்தவர்கள் கல்லூரியில் இண்ட்டர்மீடியட் என்ற வகுப்பை இரண்டாண்டுகள் படித்து, பிறகு மேற்கல்வி பயில வேண்டும். இண்ட்டர்மீடியட் வகுப்புகளின் பயிற்று மொழி ஆங்கிலம்.
பெரும்பான்மையான அக்கால மாணவர்கள் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு பள்ளியில் படித்து, பிறகு கல்லூரியில் உயர்படிப்பில் ஆங்கிலப் பயிற்று மொழிக்கு மாறினார்கள். அவர்கள் இந்த மாறுதலில் சற்றே தடுமாறினாலும், அவர்களை சமாளித்து நிலை நிறுத்திக் கொள்ள இரண்டு ஆண்டுகள் படிக்கும் இண்ட்டர்மீடியட் கல்வி முறை உதவியது. துவக்கத்தில் சற்று சறுக்கியவர்கள் மீண்டெழ வாய்ப்பு கிடைத்தது. ஆனால் 1950 களின் மத்தியில் இந்த இண்ட்டர்மீடியட் கல்வி முறை மாற்றி அமைக்கப் பட்டது, 1955-57 காலத்துக் கல்வியாண்டில் படித்தவர்களே கல்லூரிகளில் இறுதிப் பிரிவு இண்ட்டர்மீடியட் வகுப்பு மாணாக்கர்கள்.
இண்ட்டர்மீடியட் வகுப்புகளுக்குப் பதிலாக ஓராண்டு பயிலும் புகுமுகவகுப்புகள் (Pre University Course, popularly known as PUC) கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. கல்வியாண்டு 1956-57 புகுமுகவகுப்பில் படித்தவர்களே முதல் பிரிவினர். இந்த முறையில் பட்டப்படிப்பிற்கு முன்னர் படிக்க வேண்டிய கல்வி ஓராண்டாக கல்வியாண்டு குறைக்கப் பட்டாலும், அதன் பாடத் திட்ட முறை ஓராண்டு ஆங்கில வழி பயிற்று முறை என்பது பெண்கல்விக்குப் பாதகமாகவே முடிந்தது.
கல்லூரிகள் பல தோன்றினாலும், பெண்கள் விடுதிகளில் சென்று படிக்கும் அளவிற்கு அக்கால சமுதாயத்தின் மனநிலை பரவலாக மாறினாலும், தமிழ்ப் பயிற்று மொழியில் இருந்து ஆங்கிலப் பயிற்று வழிக்கு மாறிய பெரும்பாலான மாணவர்கள் தடுமாறினார்கள். தங்களை சுதாரித்துக் கொள்வதற்குள், சூழல் மாறுதலுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் முன்னர் ஆண்டு இறுதித் தேர்வு வந்துவிடும். ஆண் பெண் இருபாலருக்குமே இந்த வகுப்புகள் மேற் கல்விக்குச் செல்வதில் தடங்கல் ஏற்படுத்தியது. புகுமுகவகுப்பு என்று அழைக்கப்பட்ட கல்லூரி அறிமுகவகுப்பு, மேல்படிப்பிற்குப் ‘புகாமுக’ வகுப்பாக மாறியது. ‘பாட்டில்நெக் எஃப்பெக்ட்’ (bottleneck effect) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும், சீசாவின் குறுகிய கழுத்தினால் வெளிவரும் திரவத்தின் அளவு குறுக்கப்படும் பாங்கில், மேல்நிலைக்குச் செல்லும் பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இந்த புகுமுக வகுப்பு தடை ஏற்படுத்தியது. ஆங்கில பயிற்று வழிக்கு மாறிய மாணவர்கள் தாங்கள் கற்பதிலும் சிரமம் எதிர் கொண்டு, அவ்வாறு கற்றதையும் ஆங்கிலத்தில் சரியாக எழுதத் தெரியாமல் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றார்கள், அல்லது முற்றுமாகத் தோல்வியே அடைந்தார்கள்.
இதில் ஆண் தேர்ச்சியில் தவறினால் பெற்றோர்கள் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாதே என்று அவர்களை எப்படியாவது தேர்வு பெற வைக்கப் பாடுபட்டார்கள். ஆனால் பெண்களுக்காக அவ்வாறு பாடுபட்டவர்கள் குறைவு அல்லது இல்லவே இல்லை என்றும் சொல்லலாம். அதற்குள் பெண்களுக்கும் 18 வயது வந்துவிடுவதால், படிப்பு வராவிட்டால் அடுத்து திருமணம் செய்துகொள், என்று சொல்லி சடுதியில் திருமணம் செய்து அனுப்பிவைப்பதைக் கொள்கையாக வைத்திருந்தார்கள். வாழ்வின் மிக மிக முக்கியமான திருப்புமுனையான காலத்தில், இரக்கமற்றவகையில் பெண்கல்வியை அந்த புகுமுக வகுப்பு முறை பாதித்தது.
அத்துடன் அந்த புகுமுக வகுப்பின் பாடத்திட்டம் மூன்றே பிரிவு பாடத்திட்டம் மட்டுமே கொண்டது.
- முதல் பிரிவில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியல் படிக்க வேண்டும். இப்பாடத் திட்டம் பொறியியல் தொடர்பான தொழிற்கல்விக்காகத் திட்டமிடப்பட்டது.
- இரண்டாம் பிரிவில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் படிக்க வேண்டும். இப்பாடத் திட்டம் மருத்துவம் தொடர்பான தொழிற்கல்விக்காகத் திட்டமிடப்பட்டது.
- மூன்றாம் பிரிவில் கலைக்கல்லூரிகளில் படிக்கும் இளங்கலை பட்டத்திற்கான கல்வியில் அடங்கும் இலக்கியம், பொருளாதாரம், வரலாறு போன்ற பாடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
இவையாவுடனும் ஆங்கிலமும், ஏதோ ஒரு மொழியும் (Part I & II) அவசியம்.
முதல் இரண்டு பிரிவும் தொழிற் கல்விக்கானதாக திட்டமிடப்பட்டு இருப்பினும் இளங்கலை அறிவியல் பட்டப்படிபிற்கும் அவையே அடிப்படை. இம்முறையில் இருந்த இடையூறுகள், முதல் இரண்டு பிரிவில் இருக்கும் மாணவர்கள் பொறியியலோ அல்லது மருத்துவமோ இவற்றில் ஏதேனும் ஒன்றினைத்தான் மேற்படிப்பாகக் கொள்ள முடியும். இரண்டு படிப்புகளுக்குமே விண்ணப்பிக்க இயலாத வகையில் அந்தப் பாடத்திட்டம் அமைந்திருந்தது.
ஓராண்டில் ஆங்கிலவழிமுறை பயிற்று மொழிக்கு தகவமைத்துக் கொள்ள முடியாத திறமைசாலி பள்ளி மாணவர்கள் தட்டுத் தடுமாறி இரண்டாம் வகுப்பிலோ அல்லது மூன்றாம் வகுப்பிலோ தேர்வு பெறுவார்கள். அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுபவர்களே பொறியியல் படிப்பிலோ அல்லது மருத்துவப் படிப்பிலோ சேருவார்கள். இன்றைய காலத்தில் இருப்பது போல பல தனியார் மருத்துவக் கல்லூரிகளும் பொறியியல் கல்லூரிகளும் இல்லாத காலம் அது. எனவே தொழில் கல்வி படிக்கப் போட்டி அதிகம் இருந்தது. இன்றைய நாட்களில் இத்தனை பொறியியல் இடங்கள் காலியாக நிரப்பப் படாமல் உள்ளது என்பதை செய்திகளாகப் படிப்பவர்களுக்கு அக்கால சூழ்நிலை புரியுமா என்பதே சந்தேகம்.
புகுமுக வகுப்பில் தோல்வியுற்ற ஆண்கள் மேற்கொண்டு படித்து முன்னேற குடும்பத்தினர் ஆதரவு உண்டு. பெண்களுக்கு திருமணம் செய்து அடுத்த கட்டத்திற்கு நகர்வது ஒன்றே வழியாக இருந்தது. அத்துடன் சில குடும்பங்களில் தொழிற்கல்வியில் சேரும் அளவிற்கு மதிப்பெண் எடுக்காத மாணவிகளிடம், “படித்தால் டாக்டருக்குப் படி இல்லாவிட்டால், திருமணம் செய்து கொள், நான் என் கடமையை முடித்துக் கொள்கிறேன்”, என்ற முடிவுகளும் பெற்றோர்களால் கொடுக்கப்பட்டன. புகுமுக வகுப்பில் தோல்வியுற்ற பெண்களும், தொழிற்கல்வியில் சேரும் அளவிற்கு அதிக மதிப்பெண் பெறாதவர்களும் உயர்கல்வியில் இருந்து விலகிச் சென்றதைக் கண்கூடாகக் கண்ட சொந்த அனுபவமே இங்கு காட்டப்பட்டுள்ளது.
பதினொன்றாம் வகுப்பாக பள்ளியிறுதி வகுப்பு படித்து, கல்லூரியில் ஓராண்டு ஆங்கிலத்தில் புகுமுக வகுப்பு படித்த முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது 1978 – 1979 கல்வியாண்டில். தொடர்ந்து வந்தது புதிய ப்ளஸ் டூ முறை. முப்பதாண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த பிளஸ் டூ முறை. பள்ளியிறுதி வகுப்பு என்பது பத்தாம் வகுப்பு என மாற்றப்பட்டது. கல்வியாண்டுகள் 1978 -1980 இல் முதல் மேல்நிலை வகுப்பு அல்லது ப்ளஸ் டூ வகுப்புகள் அறிமுகப்படுத்தப் பட்டன. உயர்நிலைப் பள்ளிகள் யாவும் மேல்நிலைப்பள்ளிகளாக மாறின. இம்முறை வழங்கிய ஆக்கபூர்வமான விளைவுகள் பலருக்கும் முட்டுக்கட்டையாக இருந்த உயர்கல்வித் தடையை நீக்கியதுதான்.
கல்லூரி உயர்கல்விக்குத் தேவையான கல்வி பள்ளிகளிலேயே போதிக்கப்பட்டது. இதனால் வெளியூர்க்கல்வி, புதிய கல்லூரி மற்றும் விடுதி வாழ்க்கை என்ற மாறுதல்கள் தவிர்க்கப்பட்டது. வாழ்க்கையின் முக்கியமான திருப்புமுனையான காலத்தில், அனைத்து மாணவர்களுக்கும் படிக்கும் சூழலில் எந்த ஒரு மாறுதலுமே இல்லாது, இது போன்ற தேவையற்ற சூழ்நிலை மாறுதல்கள் என்ற மாற்றத்தடைகள் அறவே நீக்கப்பட்டது.

ஒரு முப்பது ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1970 களின் இறுதியில் இந்த இரு முக்கியத் தடைகளும் நீங்கிய காலத்தில் பெண்கல்வியின் கண்ணோட்டமும் சமூகத்தில் முற்றிலும் மாறிவிட்டிருந்தது. அத்துடன் பல தனியார் கலைக்கல்லூரிகளும், பற்பல தொழிற்கல்வி வழங்கும் பல்கலைக் கழகங்களும் தோன்றியதில் பலருக்கு உள்ளூரிலேயே உயர் கல்வி கற்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த மாற்றங்கள் பெண்கள் உயர்கல்வியில் அதிக அளவில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ இப்பொழுது உயர்கல்வியில் தடை என்றால் இருவருக்கும் பொதுவாக அது பொருளாதார அடிபடையினால் ஏற்படும் தடங்கல் மட்டுமே என்ற நிலைக்கு தமிழகம் மாறியுள்ளதாகத் தெரிகிறது.
No comments:
Post a Comment