Thursday, 4 September 2014

ரைஸ் பக்கெட் சேலஞ்சை உருவாக்கிய ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சுலதா கலாநிதிக்கு ஐ.நா. விருது அறிவிக்கப்பட்டுள்ளது.




ஹைதராபாத்தில் தானமாக அரிசி வழங்கும் மஞ்சுலதா| கோப்புப் படம்.
ரைஸ் பக்கெட் சேலஞ்சை உருவாக்கிய ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சுலதா கலாநிதிக்கு ஐ.நா. விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஐஸ் பக்கெட் சாலஞ்ச்' இணையத்தில், மெகா ஹிட்டாக இந்தியாவில் 'ரைஸ் பக்கெட் சேலஞ்ச்' என்ற பெயரில் ஏழைகளுக்கு ஒரு படி அரிசி தானம் வழங்கும் பிரச்சாரம் தொடங்கியது.
ஒரு வாலி நிறைய ஐஸ் கட்டிகள் கலந்த தண்ணீரை எடுத்து அதை அப்படியே தலையில் கொட்டிக் கொள்வது தான் ஐஸ் பக்கெட் சாலஞ்ச். ஏ.எல்.எஸ் (Amyotrophic lateral sclerosis) எனப்படும் நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேர்க்கவும் இந்த ஐஸ் பக்கெட் சவாலை பிரபலங்கள் பலர் மேற்கொண்டனர்.
இது இணையத்தில், மெகா ஹிட்டாக இந்தியாவில் 'ரைஸ் பக்கெட் சேலஞ்ச்' என்ற பெயரில் ஏழைகளுக்கு ஒரு படி அரிசி தானம் வழங்கும் பிரச்சாரம் தொடங்கியது. அதாவது உணவு தேவைப்படும் யாராவது ஒருவருக்கு ஒரு படி அரிசி, வழங்கி அதை படம் பிடித்து பேஸ்புக்கில் பதிவிட வேண்டும். அப்போது பிற நண்பர்கள் இதை செய்ய முன் வருகிறார்களா என்று சவால் விட்டு, அவர்களின் பெயர்களையும் அந்த பதிவில் டேக் செய்யலாம். அதன் மூலம் மேலும் பலர் இதை செய்ய முன்வருவார்கள் என்பதே இந்த சேலஞ்சின் நோக்கம்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சுலதா கலாநிதி (38) இவர்தான் ரைஸ் பக்கெட் சேலஞ்சை துவக்கிவைத்தவர். இவரது சமூக தொண்டை பாராட்டும் வகையில் அவருக்கு கர்மவீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஐகாங்கோ (iCONGO) தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பும், ஐ.நா.வும் விருதினை வழங்குகிறது.
இந்த விருது சிறிய காரியங்கள் மூலம் உலகில் பெரிய மாற்றம் ஏற்படுத்தும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது.
2015 மார்ச் 23-ல் டெல்லியில் நடைபெறும் விழாவில், மஞ்சுலதா கலாநிதிக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இத்தகவலை, ஐகாங்கோ நிறுவனர் ஜெரோனினோ அல்மைதா ’தி இந்து’ (ஆங்கிலம்) அனுப்பியுள்ள மின் அஞ்சலில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விருது எனக்கு ஊக்கமளிக்கிறது:
விருது குறித்து மஞ்சுலதா கூறுகையில்: "ரைஸ் பக்கெட் சேலஞ்ச் கர்மவீர் சக்ரா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நான், 'கூஞ்ச்' 'கிவ் இந்தியா' போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசித்து வருகிறேன். இந்த நற்செயலை மேலும் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன். இந்த விருது எனக்கு மேலும் உத்வேகம் அளிக்கிறது" என்றார்.
'தி இந்து' (ஆங்கிலம்) இச்செய்தியை முதல் முறையாக வெளியிட்ட பின்னர் நாடு முழுவதும் இதற்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டது. மற்ற ஊடகங்களிலும் இது பிரபலமானது. மஞ்சுலதா தொடங்கிய இணையதளத்தை 5 லட்சம் பேர் விசிட் செய்துள்ளனர். 10,000 கிலோ அரிசி தானமாக வழங்கப்பட்டிருக்கிறது.
டோலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான பிரதீப் ஏற்கெனவே ரைஸ் பக்கெட் சால்ஞ்ச் மூலம் பெருமளவில் அரிசியை வழங்கியுள்ள நிலையில், தற்போது பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் ரைஸ் பக்கெட் சால்ஞ்சை ஆதரிப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 2 முதல் 7 வரை கோவா மாநிலத்தில் உள்ள பிர்லா அறிவியல், தொழில்நுட்ப நிலையமும் ரைஸ் பக்கெட் சேலஞ்சை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment