Tuesday, 7 October 2014

தவிராத சுங்கத் தவிர்த்தோன்


கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தருக்கு இலக்கியத்தில் ஒரு தனிச் சிறப்புண்டு. இவர் மூன்று சோழ அரசர்களின் (விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராச சோழன்) அவைகளில் அரசவைக்கவிஞராக இருக்கும் பேறு பெற்றவர். அப்பொழுது இவர் அம்மூவர் மீதும் ‘விக்கிரம சோழனுலா’, ‘குலோத்துங்க சோழனுலா’, ‘இராச ராச சோழனுலா’ என்று  இயற்றிய உலாக்கள் “மூவருலா” என்று அழைக்கப்படுகிறது. இவர் இவ்வரசர்களைப் புகழ்ந்துப் பாடிய இம்மூவருலாப் பாடல்கள் கண்ணி வகையைச்சார்ந்தது.  அதாவது இரண்டு கண்களைப் போன்று, இருவரிகள் கொண்டு அமைவதால் “கண்ணி” என்ற வகையில் அடங்குகிறது.
கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்  மூவருலாவில்  இம்மூன்று மன்னர்களின் புகழையும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.  அவ்வாறு பாடுகையில் அவர்களது முன்னோர்களான பிற சோழ மன்னர்களையும் போற்றிப்பாடி, இத்தகைய முன்னோர்களின் வழி வந்தவனே என்றும் பாடுகிறார்.  இவ்வாறு பாடுகையில் ஒவ்வொரு மன்னனின்  உலாவிலும் 24 முதல் 27 வரை உள்ள கண்ணிகளை முதற்குலோத்துங்கனின் சிறப்பிற்காக ஒதுக்கியுள்ளார். அதிலும் அனைத்து உலாக்களிலும்   அவற்றின் 26 ஆவது கண்ணிகள்  முதற்குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்த செய்கையைப் பாராட்டும் வகையில் அமைந்துள்ளன.
விக்கிரம சோழனுலா:
… உடலை
இறக்கி வடவரையே யெல்லையாத் தொல்லை
மறக்கலியுஞ் சுங்கமு மாற்றி …  (26)
குலோத்துங்க சோழனுலா:
…எங்கோன்
புவிராசராசர்  மனுமுதலோர்  நாளில்
தவிராத சுங்கத் தவிர்த்தோன் …  (26)
இராச ராச சோழனுலா:
… நாடும்
கலகமுஞ் சுங்கமுங் காய்கலியு மாற்றி
உலகை முன்காத்த வுரவோன் …  (26)
முதலாம் குலோத்துங்கன் “சுங்கம் தவிர்த்த சோழன்” என்ற சிறப்புப் பெயருடையவன் ஆவான். “சுங்கம் தவிர்த்து இருள் நீக்கி உலகாண்ட குலோத்துங்க சோழ தேவன்” எனக் கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. கி.பி. 1194 கல்வெட்டு ஒன்று “சோழ நாட்டில் சுங்கம் வசூலிப்பதில்லை” (288 – 1907)  என்று சுட்டுகிறது. சோழநாட்டில் நிலவரிகள் மட்டுமே இருந்ததாகத் தெரிகிறது. தஞ்சாவூரைச் சேர்ந்த கருந்திட்டைக்குடி (‘கரந்தட்டாங்குடி’ என்றும் சுருக்கமாக ‘கரந்தை’ என்றும் அழைக்கப்படுகிறது) ‘சுங்கம் தவிர்த்த சோழநல்லூர்’ எனப் பெயர் பெற்றது (374 – 1908).
நாட்டு மக்களின் வரிப்பளுவை உணர்ந்து, சோழர்களின் ஆதிகாலத்து மனுநீதிச் சோழன் காலம் முதல் பண்டு தொட்டு வசூலிக்கப்பட்டு வந்த  சுங்கவரியை நீக்கியவன் குலோத்துங்கன் என்கிறார் ஒட்டக்கூத்தர். அதனால் சுங்க வரி நீக்கியதன் சிறப்பும் தெளிவாக விளக்கப்படுகிறது.
இந்த முதலாம் குலோத்துங்கனே சாளுக்கிய சோழர்களில் முதன்மையானவன். ஒட்டக்கூத்தர் பாடிய விக்கிரம சோழனுக்குத் தந்தை, இரண்டாம் குலோத்துங்கனுக்கு பாட்டன், இரண்டாம் இராசராச சோழனுக்கு கொள்ளுப்பாட்டன். இவர்கள் சோழ நாட்டை ஆண்ட காலங்கள் கீழ்காணுமாறு அமைகிறது.
குலோத்துங்க சோழன் I – கி.பி. 1070-1120
விக்கிரம சோழன் – கி.பி. 1118-1135
குலோத்துங்க சோழன் II – கி.பி. 1133-1150
இராசராச சோழன் II – கி.பி. 1146-1163
ஒட்டக்கூத்தர், விக்கிரமசோழன் காலத்தில் அவைப் புலவராக இருந்துள்ளார். தொடர்ந்து அவன் மகன் குலோத்துங்கன் காலத்திலும் அவன் மகன் இராசராசன் காலத்திலும் அவைப்புலவராக இருந்துள்ளார். இம்மூவர் காலத்தைக் கி.பி. 1118-1163 வரை என்று வரலாறு குறிக்கிறது.
இவ்வாறு முதற் குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்ததற்கு  காரணம் என்ன? அவ்வாறு சுங்கம் தவிர்த்ததால் அரசிற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு எவ்வாறு ஈடுகட்டப்பட்டது என்பது வரலாற்று சான்றுகளான, இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. சோழர் வரலாற்றை ஆய்வு செய்த அறிஞர்களான இராசமாணிக்கனார், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆகியோரும் இப்பிரச்சினை குறித்துத் தெளிவுபடுத்தவில்லை.  ஆதலால், இது பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தினை தங்கள் ஆய்வின்படி முன் வைத்து வருகிறார்கள். இங்கு அவ்வாறு கூறப்பட்ட கருத்துக்களைப்  பார்ப்போம்.  ஆராய்ச்சி முடிவுகள் அரசன் சோழ நாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்ற காரணத்தையும் கருத்தில் கொள்வதால், இங்கு குலோத்துங்கன் சோழ மன்னனான வரலாற்றையும் சுருக்கமாக விளக்க வேண்டிய அவசியம் நேரிடுகிறது.
குலோத்துங்கன் வேங்கி நாட்டு சாளுக்கிய அரசின் ஆண் வழித்தோன்றல்.  இவனது தந்தை இராசஇராச நரேந்திரன் என்பான், முதலாம் இராசஇராச  சோழனின் மகள் குந்தவைக்கும், வேங்கி நாட்டை ஆண்ட கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தனுக்கும் பிறந்த மகன்.  இராசஇராச நரேந்திரன் தனது மாமன் முதலாம் இராசேந்திரனின் மகளான அம்மங்காதேவியை மணந்து கொண்டான்.  சோழ குலத்தோன்றல் அம்மங்கா தேவிக்கும், சாளுக்கிய இராசஇராச நரேந்திரந்திரனுக்கும் பிறந்தவன் குலோத்துங்கன்.  குலோத்துங்கன் என்ற பெயர் அவனது அரசாட்சிக்காகச் சூட்டப்பட்ட பெயர்.  பிறந்த பொழுது தாய்வழிப் பாட்டன் பெயரான இராசேந்திரன் என்னும் பெயரும், தந்தைவழி சாளுக்கிய அரச பெயராக விஷ்ணுவர்த்தன் என்ற பெயரும் பெற்றிருந்தான்.  இவனும் தனது தந்தையைப் போலவே, சோழகுலத் தோன்றலான தனது மாமன் இரண்டாம் இராசேந்திர சோழனின் மகள் மதுராந்தகியை மணந்து கொண்டான்.
முதலாம் இராசேந்திர சோழனுக்குப் பிறகு அவனது மகன்கள் மூவர் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக ஆட்சி புரிந்தனர்.  அவ்வரிசையில் இறுதியாக வீர இராசேந்திரன் சோழன்  அரசனானான். தந்தை வீர இராசேந்திர சோழன் மறைவுக்குப்  பிறகு அரியணை ஏறிய அதிராசேந்திர சோழன்  ஆட்சி காலம் மிகவும் குறுகியது. பதவியேற்ற அதே ஆண்டிலேயே, சில மாதங்களில் அவன் மரணமடைந்தான். இவ்வாறு குறுகிய காலத்தில் அவன்  மரணம் அடைய நேர்ந்ததன் காரணமாக இந்த மரணத்தில் சதி ஏதும் இருக்கக்கூடும் என்ற ஐயப்பாடு அக்காலத்திலும்,  இக்கால ஆராய்ச்சியாளர்களிடமும்  தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.
அதிராசேந்திர சோழன் இறப்புப் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. வைணவ நூலொன்று இவன் நோய் வாய்ப்பட்டு இறந்ததாகக் கூறினும், அதிராசேந்திரன் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது.  குலோத்துங்கனின் எதிரியான மேலைச்சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தனின் அவைப்  புலவர்  ‘பில்கனர்’ என்பார் குலோத்துங்கன் அதிராசேந்திரனை சதி செய்து கொன்று ஆட்சியை பிடித்தான் என்று கூறுகிறார். மற்றொரு கருத்தின்படி அக்காலத்தில் இருந்த சைவ வைணவ கலவரம் தீவிரமடைந்ததால்,  அக்கலகத்திற்கும் அதிராசேந்திர சோழன்  உயிரிழப்பிற்கும் ஏதோ தொடர்பிருக்கக்கூடும் என்ற ஐயமும் ஆராய்ச்சியாளர்களிடையே இருந்து வருகிறது. அத்துடன் அக்காலக்கட்டத்தில் துவங்கிய வலங்கை, இடங்கை படைத்தளங்களுக்குள்ளான சச்சரவுகளும் மன்னனின் மறைவிற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்ற ஐயமும் சிலவரலாற்று ஆராய்ச்சியாளர்களிடம் இருக்கிறது.
காரணம் எவ்வாறாயிருப்பினும், முதலாம் இராசேந்திர சோழனின் அரசுரிமை கொண்ட மகன்களும், அவனது மகன் வழிப் பேரன்களும் ஒருவர் பின் ஒருவராய் இறந்துவிட, சோழ அரசுரிமை இராசேந்திர சோழனின் மகள் வழிப் பேரனான முதலாம் குலோத்துங்கனிடம் சென்று சேர்ந்தது.  அதன் பிறகு சாளுக்கிய வழி வந்த சோழனனின் குலம் தொடர்ந்து ‘சாளுக்கிய சோழர்கள்’ என்ற பெயருடன்   சோழ நாட்டினை ஆண்டார்கள்.
இவ்வாறாக சோழ அரசுரிமையை  மரபுக்கு முரணாக, தந்தை  வழியில் வேங்கி நாட்டின் சாளுக்கிய மரபினையும், தாய் வழியில் சோழ மரபினையும் கொண்ட  குலோத்துங்கன் பெற்றதற்கும், அவன் சுங்கம் தவிர்த்ததற்கும் ஏதேனும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் வரலாற்று ஆய்வாளர்கள் ஆராய்ந்து சொல்லி வருகிறார்கள். குலோத்துங்கன், தனது பதவியைக் காத்துக் கொள்வதற்குப் பற்பல உத்திகளைக் கையாண்டான் என்பது இவ்வாராய்ச்சிகளின்  அடிபடைக் கோணமாகும்.
குலோத்துங்கன், சோழ மக்கள் அரசுக்கு ஆண்டுதோறும் செலுத்திவந்த சுங்கம் நீக்கினான்.  இச்சுங்கம் ஏற்றுமதிப் பொருட்களுக்கு இடப்படும் தீர்வையாகும் என்று இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். சுங்கவரி இல்லாத நாட்டில் வாணிபம் பெருகும்; பொருள்கள் வந்து குவியும்; விலைகள் குறையும். இதனாலேயே அவன் இவ்வாறு செய்தான். சுங்கவரி நீக்கியதால் மக்கள் அவனை வாழ்த்திச் சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைத்தனர் என்பதும் ஒரு கருத்து.
குலோத்துங்கன் தனது அரசாட்சியை உறுதிப்படுத்த விரும்பி, கி.பி. 1085-86ஆம் ஆண்டில் உள்நாட்டில் வணிக நடவடிக்கைகளுக்குப் பெரும் ஊக்கமளிக்கும் விதமாகச் சுங்கவரியை நீக்கி ஆணையிட்டான். இதன் காரணமாக வணிகர் – வேளாளார் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்கு அரண்களாக மாறினர் என்று என். சேதுராமன் கூறுகிறார்.
சோழநாட்டின் வலங்கை மகா சேனை மற்றும் இடங்கை மகா சேனை என இருந்து வந்த இரு படைக்குழுவினருக்குள்ளும், அவர்கள் சார்ந்திருந்த சாதிப்பிரிவுக்கும் இடையில் கலகம் ஏற்படுத்தி, அந்த கலகத்தின் காரணமாக, அதிராசேந்திர சோழன் மரணத்தை தழுவச் செய்து குலோத்துங்கனுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் வணிகர்கள்.  அந்த வணிகர்களுக்கு பிரதிபலனாக உதவும் வகையில் சுங்கவரி நீக்கி சலுகை அளித்தான் என்று ஆய்வாளர் திரு. தி. நா. சுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.
மரபுக்கு முரணாகச் சோழ அரச பட்டத்தைக் கைப்பற்றிய முதற் குலோத்துங்கன், தனது பதவியைக் காத்துக் கொள்வதற்குப் பலவித உத்திகளைக் கையாண்டான். அரசகுலப் படைகளல்லாத, குடி படைகள் எனத்தக்க சமூகத்தவர் பலரின் நிலையையும் அதிகாரத்தையும் உயர்த்தியது அத்தகைய உத்திகளுள் ஒன்று. இது தென்னிந்தியச் சமூக அமைப்பில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திற்று என்று ஆய்வாளர் எஸ். இராமச்சந்திரன் குறிப்பிடுகிறார்.
சோழ குடும்பத்திற்கு நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தவர்கள்  வலங்கை மகா சேனை படைவீரர்கள்.  இந்த அரசகுலப் படையின் அதிகாரத்தைக் குறைக்கும் வழியாகவும், அதே சமயம் வணிகர்களுக்கு சலுகை தரும் விதமாகவும் எடுக்கப்பட்ட முடிவு சுங்க வரி நீக்குதல் என்கிறார் எஸ். இராமச்சந்திரன்.  இவ்வாறு குலோத்துங்கன்  எடுத்த முடிவு,  குலோத்துங்கன் ஆட்சிக்கு வந்தவுடன் நடைபெற்ற வலங்கை இடங்கைப் பூசல்களுக்கும் இதுவே காரணமாகி இருக்கலாம் என்பதும் இவர் முடிவு.
வணிகர்களுக்குப் பாதுகாப்புப் படையாகச் செயல்பட்டுவந்த அரச குலப்படைகளைக் கலைத்துவிட்டோ, அவ்வீரர்களை வணிகர்களிடமிருந்து ஊதியம் பெறுகின்ற படைகளாக மாற்றி ஆணையிட்டோ,  அரச குலப் படைகளின் மானிய நிலங்களை அரசர்களிடமிருந்து கையகப்படுத்தியோ,  ஏதோ ஒரு வகையில் வணிகர்களின் பாதுகாப்புப் பொறுப்புக்காக அரசு ஏற்றிருந்த செலவினங்களைக் குலோத்துங்க சோழன் முற்றிலுமாகத் தவிர்த்திருக்கக்கூடும் என்கிறார் இவர்.
சோழர்காலத்தில் வணிகர்களிடம் வரி வசூலித்து, அந்த வருவாயில் படை அமைத்து, கடல் கடந்து வணிகம் செய்யும் வணிகர்களுக்கு சோழப்படை பாதுகாப்பு அளித்து வந்தது. முதலாம் இராசேந்திரனின் கடல் கடந்த படையெடுப்புகளின் நோக்கமும் அதுவே.  கடற் கொள்ளையர்களிடம் இருந்து வணிகர்களுக்கு பாதுகாப்பளிப்பதற்கும், பலநாடுகளுடன் வணிக உறவை  மேம்படுத்த சோழ படைகள் உதவின.  இவ்வாறு வணிகத்தை மேம்படுத்தும் பொருட்டு வணிகர்களிடம் வரி வசூலித்து, அதைப் பயன்படுத்தி அதன் வழியாக படைவீர்கள் கொண்டு பாதுகாப்பு அளிப்பதற்குப் பதிலாக, வணிகர்களின் வரியை நீக்கிவிட்டால் அந்தத் தொகையில் அவர்களே பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பும், அத்துடன் அரச படைகளின் அதிகாரத்தையும் குறைக்கும் வழியாகவும் குலோத்துங்கனின் சுங்கம் தவிர்த்த நடவடிக்கை இருந்திருக்கும் என்பது எஸ். இராமச்சந்திரன் அவர்களது கருத்து. இவ்வாறு சுங்க வரி வசூல் செய்வதன் மூலம் ஈடுசெய்யப்பட்டு வந்த ஒரு செலவினம் இப்போது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுவிட்டதால் சுங்க வரி வசூல் செய்வது தேவையற்ற ஒன்றாக ஆகிவிட்டது என்கிறார் இந்த ஆய்வாளர்.
சான்றுகள்:
[1] “முதற்குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்தது ஏன்?”, எஸ். இராமச்சந்திரன், (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்) ‘கல்வெட்டு’ – காலாண்டிதழ் – இதழ் 75 – அக்டோபர்  2008. பக்கங்கள் 28-31. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை – 600 008. (http://m.sishri.org/msungam.html & http://www.subaonline.net/thfebooks/THFkalvettu42008oct.pdf)
[2] “வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்,” எஸ். இராமச்சந்திரன், (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்). பதிப்பு:உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை-113, 2004.
[3]The Cholas, N.Sethuraman; பக்கம்  107, “முதற்குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்தது ஏன்?”, எஸ். இராமச்சந்திரன், ‘கல்வெட்டு’ – காலாண்டிதழ் -இதழ் 75 – அக். 2008. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை – 8. (பார்க்க: http://www.sishri.org/sungam.html)
[4] திரு. தி. நா. சுப்பிரமணியம் தென்னிந்திய கோயிற் சாசனங்கள்,  மூன்று பாகங்கள்  II சரித்திரக்குறிப்புகள், பக்கங்கள்  87-101 G O M L 1957
[5] சோழர் வரலாறு, டாக்டர் மா. இராசமாணிக்கனார், பக்கம்  273
[6] இராமானுசர் பங்கேற்ற அரங்க நிகழ்வுகள் – வரலாறா? கற்பனையா?, எஸ். இராமச்சந்திரன், http://www.sishri.org/ramanuja.html
[7] 5.5 முதலாம் குலோத்துங்கன் பரம்பரை, http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312555.htm
[8] முதலாம் குலோத்துங்க சோழன், https://ta.wikipedia.org/s/23o

No comments:

Post a Comment